அனைத்து மத வழிபாட்டு மையங்களையும் உடனடியாக பதிவு செய்ய நடவடிக்கை

இதுவரையில் பதிவு செய்யப்படாத சமய ஸ்தலங்களை முறையான முறைமையின் கீழ் பதிவு செய்யும் வேலைத்திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
மகா சங்க ரத்னாய மற்றும் ஏனைய மத குருமார்களுடன் கலந்துரையாடி அது தொடர்பான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் ஆகிய நான்கு திணைக்களங்களும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
மத சுதந்திரம் மற்றும் மதகுருமார்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதிவு செய்யப்படாத மத நிலையங்களாலேயே பல சந்தர்ப்பங்களில் பிரச்சினைக்குரிய சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மதச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும், மதச் சிதைவைத் தடுக்கவும் புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான பிரேரணை 02 வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.



