இராம அவதாரம் நமக்கு உணர்த்துவது தான் என்ன?

#ஆன்மீகம்
Mugunthan Mugunthan
10 months ago
இராம அவதாரம் நமக்கு உணர்த்துவது தான் என்ன?

இறைவன், தான் இறைவன் என்று சொல்லிக்கொண்டு வந்து லீலைகளை நிகழ்த்துவது நம் பாக்கியமல்லவா. மனிதன் தெய்வ நிலையை அடைந்து அங்கேயே நின்று அடியார்களை அணைத்தும், பண்படுத்தியும் பலரை ஆட்கொண்டு கரையேற்றுவது என்பது புண்ணிய பூமியில் நிகழும் வழக்கம்.

 ஆனால், இறைவன் தன் தெய்வத் தன்மையை முற்றிலும் மறைத்துக் கொண்டு சாதாரண மானிடரைப்போல வாழ்வது என்பது அசாதாரணமானது. அதுதான் ஸ்ரீராமாவதாரத்தில் நிகழ்ந்தேறியது.

 பரீட்சித், ராமருடைய அவதாரம் தியாகத்தைத்தான் சொன்னது. தியாகத்தின் மூலமாக தர்மத்தை உணர்த்தியது. எல்லாவற்றிலும் மேலாக தானே அதை வாழ்ந்தும் காட்டியது. 

வெறும் ராஜாவல்ல ராமர். அவர் தியாகராஜராக மிளிர்ந்தார். ராஜபோகம் காலுக்கு கீழ் இருந்தாலும், யோகியைப் போல மரவுறிதரித்து கானகம் சென்றார். இப்படிப்பட்ட ராமயோகியை புரிந்து கொள்ள முடிகிறதா, பரீட்சித்.நாளை விடிந்தால் பட்டாபிஷேகம்.

 ஆனால், முதல் நாள் அழைத்து ‘நீ இன்றிலிருந்து பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும்’ என்றபோது முகம் சுருங்கவில்லையே. மலர்ந்த தாமரையையும் விட பிரகாசத்தோடு அரண்மனையை தாண்டி கானகம் சென்றாரே. 

இங்கு தந்தை சொன்னால் கேட்பதுதான் மகன் கடமை என்று மகனுக்குரிய தர்மத்தை வாழ்ந்து காட்டினார். அன்னையாக தன்னை வளர்த்த கைகேயின் மனம் கோணக்கூடாது என்று கைகேயியை கருணையோடு பார்த்தார். 

கானகமென்ன, ராமருக்கு ஒன்றும் புதிதல்ல. விஸ்வாமித்திரரோடு அவரின் தவத்திற்கு காவலாக சென்றிருக்கிறார். ஆனால், இங்கு ராமர் என்கிற மனித தெய்வத்தின் தியாகத்தை பார்க்க வேண்டும்.

 சீதாப் பிராட்டியை காணவில்லையென்று தெரிந்தபோது, மரமே நீ கண்டாயா, மலையே நீ பார்த்தாயா… என்று சாதாரண மனிதனாக வேதனைப்பட்டார். போர்க்களத்தில் எளிதாக வதம் செய்ய வேண்டிய ராவணனை நாளை வா என்று திருப்பியனுப்பிய கருணாமூர்த்திதான் ராமர். 

யோகிகளுக்கெல்லாம் மகாயோகியான ஸ்ரீமன் நாராயணன் ராமராக அவதரிக்கும்போது, அந்த யோக விஷயங்களையெல்லாம் எனக்கும் சொல்லுங்களேன் என்று வசிஷ்டரிடம் கைகட்டி நின்ற பாங்கு யாருக்கு வரும்.

 ராம எனும் நாமத்தை பிடித்தால், நாமி எனும் அந்தப் பெயருக்குரிய பிரமாண்டமான அந்த சக்தி அதனிலிருந்து வெளிப்படுவதை உணர்வீர்கள். ஒலியாக விளங்கும் ராம சப்தத்தை நாவால் புரட்டுங்கள். அது உள்ளத்தில் ஊறி அமுத ரசமாக பொங்குவதை உணருங்கள். உங்கள் இதயத்தில் மீண்டும் ராமரின் பட்டாபிஷேகத்தை பார்ப்பீர்கள். அப்போது ராமர் பட்டாபிஷேகம் தனக்காக செய்து கொண்டாரா… இல்லை உங்களுக்காகவா என்பது புரியும்.