ஈழத்து கலைஞர்களின் வெந்து தணிந்தது காடு - திரைப்படத்தை பற்றி கனடா கதிர்காமநாதனின் கருத்து

"வெந்து தணிந்தது காடு" ஈழதேசத்தில் படமாக்கப்பட்டு, அங்கே பல காட்சிகள் திரையிடப்பட்டு, புலம்பெயரை வந்தடைந்தது. புலம்பெயரை வந்தடைந்த நாள் தொட்டு, இந்தப் படத்தை காட்சிப்படுத்த கூடாது என பல இடங்களாலும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
அந்த அழுத்தங்களையும் தாண்டி சில இடங்களில் காட்சிப்படுத்த பட்டது. அழுத்தம் கொடுத்தவர்கள் தொடர்ந்து மாற்றுக்கருத்தில்லாமல் இருக்க, பார்வையிட்ட பலர் இதில் என்ன சிக்கல் என பேட்டிகளும் கொடுத்துள்ளார்கள்.
ஈழதேசத்தில் இருந்து வரும் ஒரு படைப்பானது, அங்கே நடந்த போராட்டம் பற்றி பேசும் படைப்பாக இருந்தால், அதனை அணுகும் முறையில் தான் இங்கே பல சிக்கல்கள் உள்ளன. நடந்த சில பிழைகளை ஏன் சுட்டிக்காட்டி பழையவை சிலவற்றை கிளற வேண்டும் என்பது ஒரு சாராரின் எண்ணமாகவும், படைப்புச் சுதந்திரத்தில் ஏன் கை வைக்க வேண்டும் ?
பிடித்தால் நுகருங்கள், இல்லையேல் விலகுங்கள் என ஒரு சாராரும், தேசியத்துக்கு எதிரான சில விடயங்களை சொல்லித்தான் படைப்பு வரவேண்டும் என்றால் அந்த கருவை ஏன் படமாக்க வேண்டும் என ஒரு சாராரும், படைத்த மனிதனை, அவனது படைப்பை தங்களுக்கு தரவில்லை எனும் கோபத்தால் அவரை பிடிக்காத ஒரு சாராரும் என குழப்பங்கள் நடந்தன.
தேசியவாதிகள் என தங்களை புடம்போட்டு வைத்திருக்கும் சிலரது வேண்டுகோளுக்கு இணங்க, படத்தில் சில காட்சிகளை இயக்குனர் மாற்றி அமைத்து சமரசமும் செய்தார். சொல்ல வந்ததை பார்வையாளர்களுக்காக மாற்றியது எனக்கு ஏற்பில்லை. அப்படியாயின், முதற்பிரதி தவறானது எனும் கண்ணோட்டமும் உண்டு.
இருந்தும், தன் படைப்பை மாற்றி வெளியிட இயக்குனர் ஒத்துக்கொண்டது, தேசியத்தின்பால் தனக்கும் மரியாதை உண்டென அவர் அறிவிப்பு செய்ததாக புரிந்து கொள்வோம். முதற்பிரதியை பார்வையிடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.
அந்த பிரதியானது ஒரு film festival க்கு அனுப்பப்பட்ட பிரதி. அதனை அந்த திரைவிழாவை நடத்துபவரிடம் நம்பி இயக்குனர் அனுப்பி வைக்க, அதனை அவர் சாதாரணமாய் வெளியுலகுக்கு கொண்டு வந்தது ஈழப்படைப்புக்கு அவர் செய்த கேவலமான செயல்.
அதுவும் போதாதென்று நேரலையில் வந்து தன்னை நியாயப்படுத்த முயன்றது மட்டமான செயல். இதே படத்திற்கு இரண்டு விருதுகளும் அறிவித்து, படத்தை தான் வாழும் நாட்டில் வெளியிட அனுமதியும் கேட்டிருந்த சம்மந்தப்பட்ட நபர், அனுமதி கொடுக்கப்படாததால் அந்த பிரதியையும் வெளியிட்டு, படம் தேசியத்திற்கு எதிரானது எனும் பறைசாற்றலையும் செய்தது மகா மட்டமான செயலே. இயக்குனர், தேசியம் பற்றிய அவர் பார்வையும் எண்ணமும் என்ன என்பதை சொல்வதற்கு அவர் படம் எடுத்ததாக எந்த இடத்திலும் சொல்லவில்லை.
ஈழத்தில் போராட்ட காலத்தில் நடந்த ஒரு கதையை தான் படமாக்கியிருப்பதாக சொல்லியிருந்தார். அந்த எண்ணத்தோடேயே நான் படத்தை அணுகினேன். படம் பற்றிய என்னுடைய பார்வையை சொல்கின்றே. இனி, படத்துக்குள் செல்வோம். 2009 ம் ஆண்டு தை மாத நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கும் கதையானது, யுத்தத்தின் இடையே ஒரு கூட்டுக்குடும்பம் தற்காலிக சிறு குடிலில் தங்கியிருப்பதும், பின்னர் பங்கர் ஒன்றிற்குள் முடக்கப்படுவதும், ஒரு வயதான தாயாரை மையப்படுத்தி ஓரிரு மாதங்கள் நகரும் கதையாகவும், அதற்குள் வந்து செல்லும் மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்ந்த வாழ்வியலாகவும், வாழ்வியற் சிக்கல்களையும் சொல்லிச் செல்கின்றது.
இந்த படத்தில் காட்டப்பட்டது எல்லாம் நடந்ததா என்றால், ஓம் நடந்தது தான் என சொல்ல சாட்சிகள் உண்டு. ஆனால், அவைகளை காட்டியிருக்கத்தான் வேண்டுமா எனக்கேட்டால், அதற்கு ஓமும் விடையாகும் இல்லையும் விடையாகும். இங்கு தான் கருத்துச் சுதந்திரம் தன் விளையாட்டை காட்டியிருக்கின்றது. உதாரணமாக, பங்கருக்குள் வைத்திருந்த மூன்று சமயத்தவரின் படங்கள்.
அதில் புத்தரும் உள்ளடக்கம். படத்தை முடக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தவர்களால், கட்டாயம் அந்தப்படம் அங்கே தேவை தானா எனும் கேள்வி எழுப்பப்பட்டது. இருந்தால் என்ன ? என்பது பதில் என்றால் அதனை ஏற்கத்தான் வேண்டும். காரணம், புத்தர் சொல்லி யுத்தம் நடக்கவில்லை. வித்தியாவை சிதைத்தவர்கள் புத்தரை வணங்கியவர்கள் இல்லை.
ஆக, சமய நம்பிக்கைக்கும், தேசியத்துக்கும் முடிச்சு தேவையில்லை. எனக்கு புரியாதது ஒன்று தான். ஏன் யாரும் இஸ்லாம் சம்மந்தப்பட்ட ஒன்றும் வைக்கப்படவில்லை என்பதை கேள்வியாக்கவில்லை. எமது போராட்டத்தில் பல முஸ்லிம் மாவீரர்களும் அடக்கம் தானே. அவர்களும் பேசுவது தமிழ் தானே. அவர்களுக்கும் இறை நம்பிக்கை உண்டு தானே. (குழப்ப நினைத்தால் ஆயிரம் வழிகள் உண்டு) இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட உலர் உணவுப்பொதி காட்சியில் வந்தது.
அது கட்டாயம் தேவை தானா என்பது கேள்வியானது. வந்தது உண்மையெனில் வைக்கப்பட்டதில் என்ன சிக்கல் என பதில் கேள்வி கேட்டால் அதற்கு பதிலில்லைத்தான். இப்ப இருக்கிற குப்பிகள் வேலை செய்யுதில்லை எனும் வசனம், குப்பிகள் வேலை செய்யாமல் மரணிக்க முடியாமல் எதிரிகளிடம் சிக்கிய சில போராளிகளை ஞாபகப்படுத்தியது. அதுவும் பிழையென வாதம் நடந்தது. காரணம் புரியவில்லை.
"வெற்றியோ தோல்வியோ, இந்தச் சண்டையை இத்தோடு முடிப்பம்" எனும் வசனமும், அந்த சந்தர்ப்பத்தில் ஒரு வேதனையின் வெளிப்பாடாகவே இருந்தது. அதனையும் மாற்ற வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது.
மொத்ததில் மாற்றங்கள் செய்யச் சொன்ன விடயங்களை இயக்குனர் மாற்றிவிட்டு படத்தை லண்டனில் வெளியீடு செய்தார். பார்த்தவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இப்போ என்னுடைய கேள்வி என்னவெனில், MaThi Sutha இந்த மாற்றங்களை ஏன் செய்தார் என்பது தான்.
ஒரு படைப்பை செய்து விட்டு, பார்ப்பவர்களின் விமர்சனங்களுக்காக மாற்றங்கள் செய்வது படைப்பாளிக்கு அழகல்ல. மாற்றம் செய்யப்படாத படத்தை நான் பார்த்தேன். எனக்கு ஒன்றும் அப்படி உறுத்தவில்லை. நான் மதிசுதாவை ஒரு படைப்பாளியாக புரிந்து கொண்டேன். அவரின் தேசியம் சம்மந்தப்பட்ட பார்வை எனக்கு தேவையற்றதாகவே இருந்தது. மீண்டும் சொல்கின்றேன், மதிசுதாவுக்கும் எனக்கும் இடையே ஆயிரம் முரண்பாடுகள் இருந்தது. இன்னமும் இருக்கு. அதற்காக ஒரு படைப்பாளியின் படைப்புச் சுதந்திரத்தில் தலையிடும் வேலையை நான் செய்ய மாட்டன்.
"வெந்து தணிந்தது காடு" ஒரு கதையில் பல கதைகள் சொல்லும் படம். பார்வையாளரின் பார்வைகள் ஒவ்வொரு விதமாக அதனை உள்வாங்கலாம். படைப்பு சுதந்திரம் எப்படியோ, அதே போல் விமர்சன சுதந்திரமும் உண்டு. அதிலும் நான் தலையிடவில்லை.
அதற்காக, நம்பிக்கையாய் கொடுத்த படைப்பை நாசவேலை செய்துவிட்டு, நானும் தேசியம் தான் என சமாதானக்காரர்கள் நாட்டில் நின்று நேரலையில் உளறுவது ஏற்பில்லை.



