கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் ரணிலுக்கு இடையில் முக்கிய சந்திப்பு!
இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அங்கு, இலங்கையின் நிதித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று (20.09) நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக்கான நிதியுதவி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் பிரதான உரையை ஜனாதிபதி ஆற்றியுள்ளார்.
நடுத்தர வருமானம் பெறும் நாடுகளை ஆதரிப்பதற்கு முறையான திட்டம் ஒன்று தேவைப்படுவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "பொதுவான கட்டமைப்பு அல்லது நடைமுறை இல்லாத நிலையில் நடுத்தர வருமான நாடுகளின் தலைவிதி பற்றி உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இலங்கையின் உதாரணத்தை நான் சுட்டிக் காட்டினால், திவாலானதாக அறிவிக்கப்பட்ட நேரத்தில், அனைத்து வெளி நிதி பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டன.
இதன் காரணமாக பாரிய அரசியல் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் எப்படியோ, அமெரிக்க அரசின் உர நன்கொடையால் பல பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டு இலங்கை மீண்டும் முன்னேற்றப் பாதையில் சென்றுள்ளது.
இப்படிப் பார்க்கும்போது, நிதிச் சிக்கல்கள் உள்ள நடுத்தர வருமான நாடுகளை ஆதரிப்பதற்கு முறையான திட்டம் தேவை என்பதை முதலில் வலியுறுத்துகிறேன். இரண்டாவதாக, இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் விவாதிக்கப்பட வேண்டும். மேலும் உலகளாவிய பொருளாதார நிலைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
தற்போது, சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து சுழலும் கடன் வசதியாக 100 பில்லியன் டொலர்களை அணுகலாம். இந்த நிதியைப் பயன்படுத்த நாங்கள் முதன்மையாக வேலை செய்கிறோம். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியைப் பயன்படுத்துவது மிக முக்கியமான விஷயம்.
அதன்பிறகு, வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 500 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கும், குறுகிய கால கடன்களை குறைந்த வட்டி விகிதத்தில் நீண்ட கால கடனாக மாற்றுவதற்கும் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதற்கான பொதுச்செயலாளரின் விரைவான திட்டத்தால் முன்மொழியப்பட்டது.
இந்த இலக்குகள் எதிர்காலத்தில் அடையப்பட வேண்டியிருப்பதால், செயலாளர் நாயகம் முன்வைத்த பிரேரணையின் வெற்றி குறித்து நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டும். அதேசமயம், மேலும் இரண்டு முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த முன்மொழிவுகளில் ஒன்றாக, உரம் மற்றும் எரிபொருளுக்கான மானியங்களை தளர்த்துவது தொடர்பான உலக வங்கியின் முன்மொழிவை பரிசீலிக்க முடியும்.
இது மிகவும் மதிப்புமிக்க ஆலோசனையாகும். அங்கு பணம் சேமிக்கப்பட்டால், அந்த பணத்தை வேறு நடவடிக்கைகளுக்கு இயக்க வாய்ப்பு உள்ளது. வர்த்தக நிதி தொடர்பான உலக வர்த்தக அமைப்பு (WTO) முன்மொழிவு இரண்டாவது முக்கியமான திட்டமாக கருதப்படலாம். இது ஏற்றுமதியை விரிவுபடுத்துவதாகும். கடனாளிகளுக்கு உண்மையான கஷ்டங்கள் இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறேன்.
ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அந்தச் சலுகைகளை உடனடியாக வழங்காவிடில், நாம் முன்வைத்துள்ள மற்ற அனைத்துப் பிரேரணைகளாலும் பயனில்லை. நாங்கள் வார்த்தைகளில் ஆதரவைப் பெற்றுள்ளோம், ஆனால் அந்த வார்த்தைகள் எப்போது செயல்படுத்தப்படும் என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.
இத்தகைய உயர்மட்ட உரையாடல்கள் உறுப்பு நாடுகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு தற்போதைய சவால்களுக்கு பயனுள்ள தீர்வுகளைப் பற்றி விவாதிக்கவும், நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலுடன் முன்னேறவும் ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.