ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க- ஈரான் ஜனாதிபதி உத்தியோகபூர்வ சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி சைட் இப்ராஹிம் ரைசிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நியூயோர்க்கில் இடம்பெற்று வருகின்றது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுடன் இணைந்து இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை நினைவு கூர்ந்த ரணில் விக்கிரமசிங்க, கடந்த பொருளாதார நெருக்கடியின் போது ஈரான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
புதிய அணுகுமுறைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று கூறிய ஈரான் ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வலுவான அணுகுமுறையாக கூட்டு பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிக்க பரிந்துரைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இந்த நாட்டில் விவசாயத்திற்கான மேம்பட்ட விவசாய தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்கு ஈரானின் திறன் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இது தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டனர். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் இலங்கைக்கு ஈரானின் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, திட்டத்தைத் திறந்து வைப்பதற்காக இலங்கைக்கு வருமாறு ஈரான் ஜனாதிபதி விடுத்த அழைப்பையும் ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிடுகிறது.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுடன் இணைந்து நேற்று நடைபெற்ற காலநிலை அபிலாஷைகள் தொடர்பான மாநாட்டிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் முன்வைத்துள்ள அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
காலநிலை பிரச்சினைகளால் 2050 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு வீதமும் பத்தில் ஐந்தும் இழக்கப்படும் என நிபுணர்கள் கணித்துள்ளதாகவும், எனவே இலங்கையின் காலநிலை தழுவல் திட்டத்திற்கு இரண்டு அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.