ஏமனில் மீண்டும் தாக்குதல் நடத்திய அமெரிக்கா
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் ஹமாசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்க ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்துகிறது.
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்கிடையே ஹவுதி இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்கு பிறகு அமெரிக்க சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஹவுதி தாக்குதல் நடத்தியது.
இந்தநிலையில் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் பகுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எத்தனை ஏவுகணை, குண்டுகள் வீசப்பட்டன போன்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள், தாக்குதலுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.