ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள் CEO சுந்தர் பிச்சை
கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் உலகின் முன்னணி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் கூகுள்.
2015 அக்டோபர் மாதம் கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை (51) நியமிக்கப்பட்டார்.
2023 ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 12,000 (6 சதவீதம்) பேரை பணிநீக்கம் செய்தது. "இந்த பணிநீக்க நடவடிக்கை மிகப்பெரியது என்றாலும் நிறுவன வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது" என்று சுந்தர் பிச்சை அப்போது தெரிவித்திருந்தார்.
2024 ஜனவரி மாதம், மீண்டும் நூற்றுக்கணக்கான பணியாளர்களை கூகுள் பணிநீக்கம் செய்தது. சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, 2024 ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். நமது லட்சியங்கள் மிக பெரியவை. நமது முன்னுரிமைகளும் அதிகம். இத்தகைய ஒரு இலக்கு உள்ள போது நாம் பெரிய கடினமான முக்கிய முடிவுகளை எடுத்தாகத்தான் வேண்டும்.
சில பணிகள் தேவைப்படாது; தேவைப்படாதவை நீக்கப்படும். ஆனால், அதன் எண்ணிக்கை கடந்த வருடம் போல் அதிகம் இருக்காது. இந்த நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் நிலவும் அடுக்குகளை (layers) நீக்குவதற்காக எடுக்கப்படுகிறது.
சில ஊழியர்களுக்கு இவை முன்னரே அறிவிக்கப்பட்டு விட்டன. சில பணிக்குழுக்களில் ஆண்டு முழுவதும் பணிகளின் அவசியம் குறித்து ஆராயப்பட்டு வரும். அவ்வப்போது சில பணிகள் தேவையற்று போகலாம்.