கடலில் அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியா
வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கு இடையிலான மோதலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
சமீபத்தில் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் ஜேஜு தீவு பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். வடகொரியாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பயிற்சியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பயிற்சியில் 3 நாடுகளையும் சேர்ந்த 9 போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. அமெரிக்காவின் விமானம்தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் என்ற கப்பலும் இதில் அடங்கும்.
இந்நிலையில், இந்த கூட்டு பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இன்று நீருக்கடியில் அணு ஆயுத அமைப்பை சோதனை செய்தது.
இதுதொடர்பாக வட கொரிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் இணைந்து நடத்திய பயிற்சிகள் வட கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
எனவே பதிலடி கொடுக்கும் வகையில், கொரியாவின் கிழக்குக் கடல் பகுதியில் கட்டமைக்கப்பட்டு வரும் நீர்மூழ்கி அணு ஆயுத அமைப்பான ஹேயில்-5-23-ன் முக்கியமான சோதனை நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.