19 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்த இரட்டை சகோதரிகள்
சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால் பலரும் சிக்கல்களை சந்திப்பதாக பொதுவாக குற்றச்சாட்டுகள் இருந்தாலும் சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமான நன்மைகளும் ஏற்படுகின்றன.
அதேபோல பிரிந்துபோன உறவுகள், நண்பர்களை மீண்டும் சந்திக்க சமூக வலைதளங்கள் உதவுகின்றன. அந்த வகையில் ஜார்ஜியாவை சேர்ந்த ஒரே மாதிரியான இரட்டையர்கள் பிறக்கும்போதே பிரிந்த நிலையில் 19 வருடங்களுக்கு பிறகு டிக்டாக் மூலம் மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர்.
கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஜார்ஜியாவை சேர்ந்தவர் அனோசர்தானியா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் தனது நண்பர் ஒருவரிடம் இருந்து டிக்டாக் வீடியோவை பெற்றார்.
அந்த வீடியோவில் சர்தானியாவை போன்றே நீல நிற முடியுடன் ஒரு பெண் விளையாடும் காட்சி இருந்தது. முதலில் அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணை சர்தானியா என்று கருதிய அவரது நண்பர் ஆர்வத்தின் காரணமாக புதிதாக சாயம் பூசப்பட்ட நீல நிற முடியை பற்றி விசாரித்தார்.
அப்போதுதான் அந்த வீடியோவில் இருக்கும் பெண் சர்தானியா இல்லை என்பது தெரியவந்தது.
மேலும் அந்த வீடியோவில் இருக்கும் பெண் குறித்து சர்தானியா சமூக வலைதளங்களில் பதிவிட்டு விசாரித்தபோது, அதில் இருக்கும் பெண் எமி க்விட்டியா என்பதும், அனோ சர்தானியாவும், எமியும் இரட்டையர்கள் என்பதும் பிறக்கும்போதே அவர்கள் பிரிந்ததும் தெரியவந்தது.
அதாவது, 2002-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி இரட்டையர்களின் தாயாரான ஆஷாசோனி இவர்களை பெற்றெடுத்துள்ளார். அப்போது அவரது உடல்நிலை கோமா நிலைக்கு செல்லவே இரட்டையர்களின் தந்தையான கோச்சா ககாரியா அனோவையும், எமியையும் தனிதனி குடும்பங்களுக்கு விற்றுவிட்டார்.
இந்நிலையில் தான் டிக்டாக் வீடியோ மூலம் சுமார் 19 ஆண்டுகள் கழித்து இரட்டையர்களான அவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.