பாகிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு - 25 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் நாளை அந்நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 1.5 வருட காலமாக அங்கு பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலூசிஸ்தான் (Balochistan) பிராந்தியத்தில், பிஷின் (Pishin) மாவட்டத்தில், சுயேட்சை வேட்பாளர் அஸ்ஃபந்த்யார் கான் ககர் என்பவரின் அலுவலகத்திற்கு வெளியே ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இதில் 17 பேர் கொல்லப்பட்டனர்; 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இச்சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக, அங்கிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கில்லா சாயிஃப் உல்லா பகுதியில் மற்றொரு குண்டு வெடித்தது.
இதில் 8 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர். "தேர்தல் அமைதியாக நடக்க பாதுகாப்பு பலப்படுத்தப்படும்" என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (Election Commission of Pakistan) தெரிவித்துள்ளது.
"பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்க செல்வதை தடுக்கும் வகையில்தான் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
இந்த குண்டு, அலுவலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டு ஒரு "ரிமோட்" கருவியினால் இயக்கப்பட்டுள்ளது" என பலூசிஸ்தான் காவல் அதிகாரி அப்துல்லா ஜெஹ்ரி தெரிவித்தார்.