ரஷ்யாவில் அலெக்ஸி நவால்னிக்கு மலரஞ்சலி செலுத்தியவர்களுக்கு நேர்ந்தக் கதி!
ரஷ்ய தண்டனைக் காலனியில் உயிரிழந்த அரசியல் விமர்சகர் அலெக்ஸி நவல்னிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத குழுவொன்றினால் அவை அனைத்தும் ஒரே இரவில் அகற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவில் அரசியல் அடக்குமுறையை கண்காணிக்கும் குழுவான OVD-Info வெளியிட்டுள்ள தகவலின்படி, நவல்னியின் நினைவாக மலர்கள் வைக்க வந்த 100க்கும் மேற்பட்டோர் ரஷ்யா முழுவதும் எட்டு நகரங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோவில், ரஷியாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் தலைமையகத்திற்கு அருகில் உள்ள நினைவுச் சின்னத்தில் இருந்து ஒரே இரவில் ஒரு பெரிய குழுவால் பூக்கள் அகற்றப்பட்டதாகவும், இதனை பொலிஸார் வேடிக்கை பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இப்போது ரஷ்யாவில் எதிர்ப்பிற்காக விதிக்கப்பட்டுள்ள தண்டனை சிறைத்தண்டனை அல்ல, மாறாக மரணமே தண்டனையாக வழங்கப்படுகிறது என பெலாரஸின் முன்னாள் பிரிட்டிஷ் தூதரும், லண்டனில் உள்ள சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தில் பணியாற்றும் ரஷ்யா மற்றும் யூரேசியாவின் மூத்த உறுப்பினருமான Nigel Gould-Davies கூறியுள்ளார்.
ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தல் இன்னும் சில நாட்களில் வரவுள்ளது. ஏற்கனவே புட்டினை எதிர்த்து போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட பலருடைய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அடுத்த தேர்தலிலும் புட்டின் வெற்றிபெற்று ஆட்சிப்பீடம் ஏறினால் தொடர்ச்சியாக 06 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
அவருடைய ஆட்சிக்கு சவாலாக விளங்குபவர்கள் ஏதோவொரு வகையில் காணமல்போவது சர்வதேச நாடுகள் மத்தியிலும், அரசியல் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.
அலெக்ஸி நவால்னி எதிர்கட்சி தலைவர் மட்டுமல்ல, புட்டினின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்த ஒருவர். இறப்பதற்கு முன்னர் அவர் தண்டனை காலணியில் சிறைவைக்கப்பட்டிருந்த சமயத்தில் கடுமையான சித்தரவதைகளை எதிர்கொள்வதாக முன்னதாக ஒரு செய்தியும் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் சிறையில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்பட்டது. அவர் எங்கு இருக்கிறார் என்பதே மர்மமாக இருந்தது.
அதேபோல் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக விமான நிலையத்தில் வைத்து நவால்னிக்கு வழங்கப்பட்ட காஃபியில் விஷம் கலந்திருந்து. மிகவும் அரிதான கொடிய விஷம் கலக்கப்பட்டிருந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறாக அவர் முன்னதாக பல அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது நவால்னி திடீரென உயிரிழந்திருப்பது பல்வேறு தரப்பினரிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.