டிக்டாக் செயலிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க இந்தோனேசியா தீர்மானம்
இந்தோனேசியா வகுத்துள்ள விதிகளை டிக்டாக் செயலி தொடர்ந்து மீறி வருவதால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் பிரபலமான டிக்டாக் செயலி இந்தோனேசியாவிலும் வரவேற்பு பெற்றுள்ளது. வீடியோ செயலியான டிக்டாக் தனது செயலி வழி பரிவர்த்தனையில், இந்தோனேஷியாவில் பெரும் லாபம் சம்பாதித்து வந்தது.
இதற்கு இந்தோனேஷியா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தது. சமூக ஊடகங்கள் பயனர்களுக்கு இலவச சேவை வழங்குவதாக கூறிவிட்டு, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம் பெரும் வருமானம் ஈட்டுகின்றன.
இந்த திரைமறைவு வருமானத்துக்கு அடுத்தபடியாக நேரடி வருமானமாக ஆன்லைன் ஷாப்பிங் உத்தியையும் தங்களது செயலி வழியாகவே மேற்கொள்கின்றன. ஃபேஸ்புக், டிக்டாக் போன்றவை இந்த வகையில் தொடர்ந்து வருமானம் பெறுகின்றன.
இதற்கிடையே நாட்டின் மிகப்பெரும் ஆன்லைன் விற்பனை நிறுவனமான டோகோபிடியாவின் சுமார் 75 சதவீத பங்குகளை டிக்டாக்கின் தாய் நிறுவனமான, சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ் வாங்கியது.
இந்த வகையில் அரசின் கட்டுப்பாட்டுக்கு மாறாக டிக்டாக் தொடர்ந்து செயல்படுவதாக கூறி அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது.