அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு நடைபெறும் திகதி அறிவிப்பு
ரஷிய அதிபர் புதினையும், அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (வயது 47).
இதனால் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் இவர் மீதான ஆதரவு பெருகியது. இதனிடையே கடந்த 2013-ல் அவர் மீது பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக ரஷிய ஊடகங்களில் செய்தி வெளியானது.
அவரது உயிரிழப்புக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் நாட்டு மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்து உள்ள ரஷிய அதிபர் புதினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே அலெக்சி நவால்னியின் உடலை ரஷிய அரசு தங்களிடம் ஒப்படைக்க மறுப்பதாக நவால்னியின் மனைவி மற்றும் தாயார் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், மாஸ்கோவின் தென்கிழக்கு மரியினோ மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு வரும் மார்ச் 1-ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.