மூன்றாவது ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்ற ஸ்டார்ஷிப்
உலக பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ஸ்டார்ஷிப் "சூப்பர் ஹெவி" எனப்படும் உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை தயாரித்துள்ளது.
33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ராக்கெட் 394-அடி உயரம் கொண்டது. இந்த ராக்கெட் சோதனை இரண்டு முறை தோல்வியில் முடிந்தது. அதில் ஏற்பட்ட தவறுகள் சரிசெய்யப்பட்டன.
இந்த நிலையில் ஸ்டார்ஷிப் ராக்கெட் தெற்கு டெக்சாசின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதை நேரலையில் 35 லட்சம் பேர் பார்த்தனர்.
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் குறிப்பிட்ட இலக்கை சென்றடைந்தது. பின்னர் பூமிக்கு திரும்பி வந்து இந்தியப் பெருங்கடலில் இறக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் மீண்டும் வளி மண்டலத்தில் நுழைந்த போது ராக்கெட் திடீரென்று தொடர்பை இழந்தது. இறுதி இலக்கை அடைவதற்கு முன்பே தொடர்பை இழந்தது. கீழ்-நிலை பூஸ்டர் வெற்றிகரமாக நீரில் தரையிறங்குவதில் தோல்வி்யடைந்தது.
இருந்தபோதிலும் இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.