சிரியாவில் படைவீரர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் - 22 பேர் மரணம்
சிரியாவில் குட்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்து மீது சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 22 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது சுக்னா பகுதியாகும்.
இது ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாகும். குட்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த இவர்கள் அரசுக்கு ஆதரவாகவும், சிரியாவில் ரஷியா ஆதரவு பெற்ற பாலஸ்தீனத்தைச் சேர்ந்த சண்டையிடுபவர்களும் ஆவார்கள்.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்கவில்லை. ஆனால் மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகம் இந்த தாக்குதலுக்குப்பின் ஐஎஸ் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
13 வருட உள்நாட்டு சண்டையில் குட்ஸ் படைப்பிரிவினர் சிரியா அரசாங்கத்திற்கு ஆதரவாக சண்டையிட்டு வருகிறது. இந்த உள்நாட்டு சண்டையில் சுமார் 5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு சண்டைக்கு முன்னதாக இருந்த 23 மில்லியன் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த இடத்தை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.
குட்ஸ் படைப்பிரிவு பாலஸ்தீனத்தின் இஸ்லாமிக் ஜிஹாத் குரூப்பில் உள்ளது. அதில் இருந்து சிரியாவில் செயல்பட்டு வரும் குட்ஸ் படைப்பரிவு மாறுபட்டது.