திருகோணமலையில் தேசிய டெங்கு ஒழிப்பு தீவிரம்!
“வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழ், தூய்மையான நகரத்தையும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் உறுதிப்படுத்தும் நோக்கில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று (08) கிண்ணியாவில் முன்னெடுக்கப்பட்டன.
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, கிண்ணியா நகர சபை, பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் (MOH) ஆகியன இணைந்து இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தன.
இன்றைய இரண்டாம் நாள் நடவடிக்கையின் போது, கிண்ணியா அண்ணல் நகர் பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள பாடசாலை வளாகங்களில் தீவிரமான டெங்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அழிப்பதற்கும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்கும் இதன்போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதன்போது முன்னெடுக்கப்பட்ட களப் பரிசோதனைகளின் போது, நுளம்பு பெருகக்கூடிய வகையில் சுற்றுப்புறத்தைச் சீர்கேடாக வைத்திருந்த நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
பொதுச் சுகாதாரத்தைப் பேணுவதில் அசமந்தமாக இருப்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் தொடரும் என இதன்போது அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதேவேளை மூதூர் பிரதேச சபை மற்றும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூதூர் வலயக் கல்வி அலுவலகம் இணைந்து இரண்டாவது நாளாக இன்று (08) காலை பாடசாலைகள், வீடுகளில் டெங்கு ஒழிப்பு பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது டெங்கு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயற்படுத்தலின் கீழ் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”