மீண்டும் விசாரணைக்கு வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு

#SriLanka #Parliament #Murder #Investigation #LANKA4 #Member #HighCourt #L4
Prasu
1 hour ago
மீண்டும் விசாரணைக்கு வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் முதலிலிருந்து விசாரிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடராஜா ரவிராஜ் கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் 10ம் திகதி கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வெளியேறியபோது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், அவருடன் இருந்த மெய்க்காப்பாளர் லக்ஷ்மணனும் உயிரிழந்தார்.

இந்தக் கொலை தொடர்பில் கடற்படைச் சிப்பாய்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 2016ம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் சிறப்பு ஜூரி சபை அவர்களை விடுவித்து தீர்ப்பளித்திருந்தது.

குறித்த தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், முன்னைய விடுதலைத் தீர்ப்பை ரத்து செய்து, வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதிதாக விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் பி. சசி மகேந்திரன் மற்றும் அமல் ரனராஜா ஆகியோர் அடங்கிய அமர்வே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அரசு தரப்பு சாட்சியின் வாக்குமூலம்

வழக்கில் முக்கியமான அரசு தரப்பு சாட்சியாக சம்பத் மனம்பேரி என்பவர் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். 

அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரவிராஜ் கொலை தொடர்பில் தாம் பைக் ஓட்டுநராகச் செயல்பட்டதாக அவர் வாக்குமூலம் வழங்கியிருந்ததுடன், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலருடனான தொடர்புகள் குறித்தும் தகவல்களை வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாட்சியின் வாக்குமூலத்தை மதிப்பீடு செய்யும் போது, ஜூரி சபைக்கு உரிய சட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்படவில்லை என மேல்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2016ஆம் ஆண்டு நள்ளிரவு 12.50 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டமை தொடர்பிலும் நீதிமன்றம் கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை

அரசு தரப்பு சாட்சியங்களின் அடிப்படையில் பிரதிவாதிகளுக்கு எதிரான விசாரணையைத் தொடர்வதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் கருதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதிதாக விசாரணைக்கு வரவுள்ளது.

எவ்வாறாயினும், மீண்டும் நடைபெறவுள்ள விசாரணையின் முடிவிலேயே குற்றச்சாட்டுகள் தொடர்பான இறுதி சட்டத் தீர்மானம் எடுக்கப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4