சனம் செட்டிக்கு வந்தது ஆபாச மெசேஜ்ஜா இல்லை கொலை மிரட்டலா...?
சனம் செட்டி பெயர் கடந்த வாரம் செய்தியில் பரபரப்பாக வந்தது. அதற்கு காரணம் அவர் அளித்த போலீஸ் புகார் தான். மர்ம நபர் ஒருவர் தனக்கு இன்ஸ்டகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் ஆபாச மெசேஜ் அனுப்புவதாக அவர் போலீஸில் புகார் கூறியிருந்தார் எனவும் அதை விசாரித்த சைபர் க்ரைம் போலீசார், திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்திருக்கிறார்கள்.
தனது புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸுக்கு நன்றி கூறி தற்போது சனம் செட்டி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். மேலும் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக தான் புகார் அளித்திருப்பது உண்மையில்லை எனவும் தனக்கு அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்ததாக தான் போலீசில் புகார் அளித்தேன் எனவும் கூறியிருக்கிறார் சனம். "I would like to clarify to the Press that this is NOT pornography related abuse. It is repeated death threats" என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
தனது பதிவில் சனம் ஷெட்டி கூறியிருப்பதாவது..
"சென்னை போலீஸ் டிபார்ட்மென்ட் மற்றும் கமிஷ்னர் சார் ஆகியோருக்கு என்னுடைய நன்றி. கடந்த சில மாதங்களாக எனக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் கொலை மிரட்டல் வந்து கொண்டு இருந்தது. நான் அதை ஆரம்பத்தில் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் என்னுடைய போன் நம்பருக்கும் அதே நபரிடம் இருந்து கொலை மிரட்டல் வரத் தொடங்கியதும் நான் பயந்துவிட்டேன். என்னுடைய குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்."
"அந்த நபருக்கு என்னுடைய போன் நம்பரும் தெரிந்திருக்கிறது. நான் போலீசில் புகார் அளித்து அதன் பின் ராய் ஜான் பால் என்ற அந்த நபரை கண்டுபிடித்து போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அவர் எந்த நோக்கத்திற்காக இப்படி செய்தார் என தெரிந்துகொள்ள தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது."
"இதே போன்ற விஷயங்களை சந்திக்கும் நபர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். எந்தவிதமான harassmentஐயும் ஒப்புக்கொள்ள முடியாது. துணிந்து பேசி உதவி பெறுங்கள். போலீஸ் அதிகம் உதவியாக இருந்தார்கள். எனக்கு ஆதரவாக பேசிய அனைவருக்கும் நன்றி. உங்களது வார்த்தைகள் எனக்கு கடந்த சில தினங்களாக மனவலிமையை கொடுத்து வருகிறது" என சனம் ஷெட்டி கூறியிருக்கிறார்.