சொகுசு காருக்கான நுழைவு வரியை முழுமையாக செலுத்தினார் நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கில், அபராத தொகையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும் என்றும் வரி என்பது நன்கொடை அல்ல, கட்டாய பங்களிப்பு. நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல், ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியிருந்தார்.
நீதிபதியின் விமர்சனம் மற்றும் தீர்ப்பு குறித்து அதிருப்தி அடைந்த விஜய், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த ஜூலை 27-ந் தேதி, விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
“தனி நீதிபதியின் கருத்துகளை நீக்குவது பற்றி நான்கு வாரங்களுக்குப் பின்னர் விசாரணை நடத்தப்படும் எனவும், விஜய் செலுத்த வேண்டிய காருக்கான வரியை, வணிக வரித்துறை ஒரு வாரத்தில் கணக்கிட்டுச் சொல்ல வேண்டும், மீதமுள்ள 80 சதவீத வரித்தொகையை அடுத்த ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும்” எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் நுழைவு வரியாக, 40 லட்சம் ரூபாய் வரை செலுத்தி உள்ளதாக வணிக வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலில், 8 லட்சம் ரூபாய் செலுத்தி இருந்த விஜய், தற்போது மீதமுள்ள 32 லட்சம் ரூபாயையும் முழுமையாக செலுத்திவிட்டாராம்.