நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு
நடிகை ஸ்ரீதேவி சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டில் கடந்த 1963ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி பிறந்தார். இவரது தந்தை அய்யப்பன், வழக்கறிஞர். தாயார் ராஜேஸ்வரி. 1980களில் மிதுன் சக்ரவர்த்தியுடன் ஜாக் உதா இன்சான் படத்தில் ஸ்ரீதேவி நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது.
இதை மிதுன் சக்ரவர்த்தி ஏற்றுக்கொண்டபோதும் ஸ்ரீதேவி ஏற்கவில்லை. இந்த சர்ச்சையடுத்து இருவரும் பிரிந்தனர். கடந்த 1995ம் ஆண்டு இந்தி பட அதிபர் போனிகபூரை ஸ்ரீதேவி மணந்தார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் பிறந்தனர். ஜான்வி தற்போது இந்தி படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார்.
ஸ்ரீதேவியின் நடிப்பு வாழ்க்கை தமிழில் தொடங்கியது. குழந்தை நட்சத்திரமாக நம்நாடு, துணைவன் படங்களில் நடித்தார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார் ஸ்ரீதேவி. இந்தி, கன்னடம், மலையாளம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1976ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் ரஜினி, கமலுடன் இணைந்து நடித்தவர், அதன்பிறகும் அவர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தார்.
ரஜினியுடன் நடித்த காயத்ரி, ரஜினி கமலுடன் இணைந்து நடித்த 16 வயதினிலே, கமலுடன் நடித்த மூன்றாம் பிறை, சிவகுமாருடன் நடித்த கவிக்குயில் போன்ற படங்கள் அவரை புகழின் முன்னணி இடத்துக்கு உயர்த்தியது. 1981ம் ஆண்டு கமலுடன் நடித்த மீண்டும் கோகிலா படம் ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்று தந்தது.
1982ம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் கமலுடன் இணைந்து மனநிலை பாதித்தவர்போல் நடித்த மூன்றாம் பிறை படத்துக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது. இந்தியில் 1979ம் ஆண்டு சொல்வா சுவான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழுக்கு வந்தவர் 4 வருடம் கழித்து மீண்டும் இந்திக்கு சென்றவர் ஜிதேந்திரா ஜோடியாக ஹிம்மத்வாலா படத்தில் நடித்தார்.
1983ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டானது. அன்றுமுதல் ஸ்ரீதேவி இந்தியில் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தார். ஜிதேந்திரா ஸ்ரீதேவி இணைந்து 16 படங்களில் நடித்தனர். இதில் 13 படங்கள் ஹிட்டாக அமைந்தது. 3 படங்கள் தோல்வி படமானது.
தமிழில் வெளியான மூன்றாம் பிறை இந்தியில் சத்மா பெயரில் ரீமேக் ஆனது. இது ஸ்ரீதேவியின் நடிப்பு பாலிவுட்டினரை மிகவும் கவர்ந்தது. அங்குள்ள பத்திரிகைகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என பாராட்டியிருந்தது. அனில் கபூருடன் இணைந்து ஸ்ரீதேவி நடித்த மிஸ்டர் இந்தியா மற்றும் நாகினா 1989ம் ஆண்டு திரைக்கு வந்த சால்பாஸ், சாந்தினி.
அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்த குஹுதா, மேலும் ரூப் கி ராணி சோரன் கா ராஜா போன்ற படங்கள் ஸ்ரீதேவி புகழை பாடியதுடன் அவரை நெம்பர் ஒன் நடிகையாக்கியது. போனிகபூரை மணந்த பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஸ்ரீதேவி மீண்டும் 2012ம் ஆண்டு இங்லிஷ் விங்லிஷ் படம் மூலம் ரீ என்ட்ரி ஆனார்.
கவுரி ஷின்டே இயக்கி இருந்த இப்படம் வெற்றி பெற்றது. பிறகு 2015ம் ஆண்டு தமிழில் விஜய் நடித்த புலி படத்தில் மந்திரவாதி பெண்ணாக நடித்தார் ஸ்ரீதேவி. தமிழில் இது அவருக்கு கடைசி படமாக அமைந்துவிட்டது. பின்னர் பாகுபலி படத்தில் ராஜமவுலி நடிக்க கேட்டபோது மறுத்துவிட்டார்.
அந்த வாய்ப்பு ரம்யாகிருஷ்ணனுக்கு சென்றது. கடந்த ஆண்டில் இந்தியில் பாம்பே டாகிஸ், மாம் படத்தில் நடித்தவர் தற்போது. ஜீரோ படத்தில் நடித்து வந்தார். ஸ்ரீதேவி மேக்அப் பிரியை. எப்போதும் தன்னையும் தனது உடற்தோற்றத்தையும் அழகாக வைத்துக்கொள்வதில் மிகுந்த அக்கறை செலுத்துவார்.
90களிலேயே மூக்கு அழகு ஆபரேஷன் செய்துகொண்டதாக அவரை பற்றி கிசுகிசுக்கள் வந்தன. சமீபத்தில் உதட்டு ஆபரேஷன் செய்ததாகவும் இணைய தளங்களில் வதந்தி பரவியது. ஸ்ரீதேவியின் அழகில் மயங்கிய ரசிகர்கள் ஏராளம். அவர்கள் ஸ்ரீதேவி மறைவுக்கு இணைய தளத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.