தல 61 அப்டேட்.... அஜித்துடன் முதன்முறையாக கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இதை எச்.வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. வலிமை படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர்.
இதனிடையே அஜித்தின் 61-வது படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. அதன்படி இப்படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். ஏற்கனவே அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத், இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கிறார்.
அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவான இரண்டு படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார். ஆதலால், ‘தல 61’ படத்துக்கும் அவரே இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிப்ரான், அஜித் படத்துக்கு இசையமைக்க உள்ளது இதுவே முதன்முறை.