ஆடுகளும்! இரகசியங்களும்!

Prathees
3 years ago
ஆடுகளும்! இரகசியங்களும்!

வேதாகமத்தில் மற்ற மிருகங்களைவிட ஆடுகளைப் பற்றியே அதிகமாகக் கூறப்பட்டுள்ளது. சுமார் 750 தடவைகளுக்கு மேல் ஆடுகளைப் பற்றிய குறிப்பு வேதாகமத்தில் உள்ளது.

எபிரெயர்கள் பூர்வகால முதலே ஆடுகளை மேய்க்கிறவர்களாக இருந்தார்கள். ராஜாக்களின் காலங்களிலும் எபிரெயர்களுடைய வாழ்க்கை முறை ஆடுகளோடு இணைந்தே இருந்தது. வேதாகமத்தில் மனுஷருக்கும், ஆடுகளுக்கும் இடையே பல ஒப்புமைகள் கூறப்பட்டுள்ளன. புதிய ஏற்பாட்டில் சபை ஆடுகளோடுஒப்பிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீன தேசம் ஆடுகளை மேய்ப்பதற்கு உகந்த நிலமாகும். அங்கு புல்வெளி மிகுந்துள்ளது. பூமியில் தண்ணீர் இல்லாவிட்டாலும், பாலஸ்தீன தேசத்தில் புல் பசுமையாக வளரும். அது சமபூமியாக இருப்பதினால் ஒரு மேய்ப்பன் தனியாக இருந்தே ஏராளமான ஆடுகளை மேய்த்து, வழிநடத்திச் செல்ல முடியும்.

தற்காலத்தில் கம்பளி ரோமங்களுக்காகப் பாலஸ்தீன தேசத்தில் ஆடுகளை வளர்க்கிறார்கள்.

வேதாகம வரலாற்றுக் காலத்தில் ஆடுகளின் ரோமம் சிவப்பு நிறத்திலும், வெண்மை கலந்த கறுப்பு நிறத்திலும் இருந்தது.

ஆடுகளின் வால்களைக் கர்த்தருக்குத் தகனபலிகளாகச் செலுத்தினார்கள். நடுவெலும்பிலிருந்து எடுத்த முழுவாலையும் கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்த வேண்டும் (லேவி 3.9).

எபிரெயர்கள் ஆட்டிறைச்சியைப் போஜனமாக விரும்பி புசிக்கிறார்கள். குளிர்காலத்திலும், இவர்கள் ஆட்டிறைச்சியைப் பதப்படுத்தி வைத்துக் கொள்கிறார்கள்.

மனுஷன் நூல் நூற்கவும், கம்பளி நெய்யவும் கற்றுக் கொள்வதற்கு முன்பாக ஆட்டுத்தோலே மேய்ப்பர்களுக்குப் போர்வையாக இருந்தது.

இயற்கையில் ஆடுகள் சாதுவான பிராணியாகும். தங்களுடைய போஜனத்திற்கு அவை மேய்ப்பனையே சார்ந்திருக்கும். மேய்ப்பன் ஆடுகளைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீரண்டையில் நடத்துவான். அவன் துஷ்டமிருகங்களிலிருந்து ஆடுகளைப் பாதுகாக்க வேண்டும்.

புல்மேயும்போது சர்ப்பங்கள் ஆடுகளின் வாயைத் தீண்டிவிட்டால் மேய்ப்பன் அவற்றிற்கு மருந்து கட்ட வேண்டும்.

ஆடுகள் பொதுவாகக் கூட்டமாகவே மேயும். ஆயினும் சில சமயங்களில் ஒருசில ஆடுகள் பிரிந்து சென்று, முட்புதர்களிலும், பள்ளங்களிலும் சிக்கிக்கொள்ளும். மேய்ப்பன் மற்ற ஆடுகளைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு, காணாமற்போன ஆட்டைத் தேடிக்கண்டுபிடித்து கொண்டு வருவான்.

இயேசு கிறிஸ்து காணாமற்போன ஆட்டைப் பற்றிய உவமையில் மேய்ப்பனின் சுபாவத்தைத் தெளிவுபடுத்துகிறார்.

எபிரெயரின் தேவன் தம்மை ஒரு மேய்ப்பனாகத் தமது ஜனங்களுக்கு வெளிப்படுத்துகிறார் (சங் 23). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மை ஆடுகளைப் பராமரிக்கும் நல்ல மேய்ப்பராக விவரிக்கிறார் (யோவா 10.1-18).

மந்தையில் செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் இருந்தன. செம்மறியாட்டின் தலையீற்று கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது. (எண் 18:17).

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் விசுவாசிகள் பலபாடுகளை அனுபவித்தார்கள்.

"வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள் (எபி 11:36-38).

மேய்ப்பருக்கும், ஆடுகளுக்கும் இடையில் நெருங்கிய உறவு உள்ளது. மேய்ப்பனுடைய சத்தத்தை ஆடுகள் கேட்டுப் புரிந்துகொள்ளும். மேய்ப்பன் தன் ஆடுகளைப் பெயர் சொல்லி அழைப்பான். கீழ்ப்படியும் சுபாவத்திற்கு ஆடுகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

ஆடுகள் இஸ்ரவேலர்களுக்கு உவமானம்! மேய்ப்பன் தேவனே! ஆடுகளை மேய்த்த தாவீது அரசன் ஆனார். அரசன் போல இருந்த மோசே, மேய்ப்பன் ஆனார்...இஸ்ரவேல் மக்களை நடத்த ஆடுகளை மேய்க்கும் அனுபவம் அவசியம் போலும்!

செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் தன்மையில் மாறுபட்டவை. வெள்ளாடுகள் தன்னிச்சையாக திரிய, செம்மறி ஆடுகள் எல்லாவற்றுக்கும் தம்முடைய மேய்ப்பனை சார்ந்திருக்கிறது.

ஆகவே, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். (மத்தேயு 25:33) - என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஈசாக்குக்கு பதிலாக பலியிடப்பட்ட ஆடு, நமக்காக பலியான, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நிழல்!

ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனுக்குப் பரிபூரணமாகக் கீழ்ப்படிந்தார். ஆகையினால், அவர், உலகின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவஆட்டுக்குட்டி "the Lamb of God" என்று அழைக்கப்படுகிறார் (யோவா 1:29.36).  அவர் நமக்காய் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியும் கூட! 

ஆமென்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!