இன்றைய வேத வசனம் - பிலிப்பியர் 4:7
எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து, கர்த்தரை நோக்கி: சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும். (ஏசாயா 37:14-17)
கர்த்தருடைய பாதத்தில் உங்கள் பிரச்சனைகளை விவரித்து வைக்கும் பழக்கம் உங்களுக்கு உண்டா?
அதிர்ச்சி தரும் கடிதங்கள் உங்களுக்கு வரும்போது, துர்செய்திகளை நீங்கள் கேட்கும்போது, உங்களை எதிர்த்து பகைவர்கள் வரும்போது, உடனே உங்கள் ஜெப அறைக்குள்ளாவது, கர்த்தருடைய ஆலயத்திற்குள்ளாவது அல்லது தனிமையிலாவது சென்று, தேவ சமூகத்தில் உங்கள் உள்ளத்தை விவரித்து வையுங்கள் அவர் பதில் அளிக்கட்டும்!
எசேக்கியா ராஜாவுக்கு எத்தனையோ ஆலோசகர்கள், மந்திரிகள் இருந்தும், அவர்களிடம் ஆலோசனை கேட்காமல் கர்த்தரிடம் சென்று ஆலோசனை கேட்டபடியால், கர்த்தருடைய தூதன் ஒருவன் இறங்கி வந்து எதிரிகளின் பாளையத்தில் 1,85,000 பேரைச் சங்கரித்தான்.
ஆகவே, நண்பர்களே, நீங்கள் கலங்காதேயுங்கள், உங்களோடு கூட இருப்பவர் பெரியவர். உங்கள் பாரங்கள், துக்கங்களையெல்லாம் அவர் மீது வைத்துவிடுங்கள். அவர் உங்களை ஆதரிப்பார். ஆமென்
#பிலிப்பியர் 4:7
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.