பூமிகா திரைவிமர்சனம்

#TamilCinema
பூமிகா திரைவிமர்சனம்

தயாரிப்பு - ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ்

இயக்கம் - ரதீந்திரன் ஆர் பிரசாத்

இசை - பிரித்வி சந்திரசேகர்

நடிப்பு - ஐஸ்வர்யா ராஜேஷ், விது, அவந்திகா வந்தனப்பு

வெளியான தேதி - 22 ஆகஸ்ட் 2021 (நேரடி டிவி)

நேரம் - 2 மணி நேரம் 3 நிமிடம்

ரேட்டிங் - 2.5/5

பூமியை காக்கத் துடிக்கும் பூமிகா இதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. படத்தின் கதைக்கேற்ற பொருத்தமான ஒரு தலைப்பு.

தனக்கான ஆபத்துகள் வரும் போது பூமி தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும். ஆனால், அதனிடமிருந்து மனிதர்களாகிய நாம்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளப் போராட வேண்டும் என்ற அழுத்தமான கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத்.

பூமி, செடி, கொடி, மரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என என ஆரம்பம் முதலே சொன்னால் அட்வைஸ் மயமாக இருக்கிறது என ரசிகர்கள் சொல்லிவிடுவார்களோ என பயந்து பேய்க் கதையாக சொல்லியிருப்பதுதான் படத்தை பின்னோக்கி இழுத்து விடுகிறது.

இதற்கு முன்பு நிறைய பேய்ப் படங்களில் பார்த்த அதே மலைப் பிரதேசம், பல வருடங்களாக யாருமே வசிக்காத காட்டு பங்களா, பயங்கர அமைதி, நாம் சந்தேகப்படும் விதத்தில் இருக்கும் ஒரு காவலாளி என அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள்.

ஊட்டிக்கு அருகில் பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாமல் இருந்த எஸ்டேட் ஏரியாவில் மந்திரிக்காக வில்லா குடியிருப்புகளைக் கட்ட வருகிறார் விது. அவருடன் மனைவி சைக்கியாட்ரிஸ்ட் ஐஸ்வர்யா ராஜேஷ், தங்கை மாதுரி, தோழி சூர்யா கணபதி ஆகியோரும் வருகிறார்கள். வந்த இரவு அன்றே விதுவின் நண்பன் ஒருவனிடமிருந்து சூர்யாவுக்கு மெசேஜ்கள் வருகிறது. இருவரும் சாட் செய்து முடித்த போது வெளியில் சென்று வீட்டிற்குத் திரும்பிய விது, நண்பன் விபத்தில் இறந்துவிட்டதைச் சொல்கிறான். அப்படியென்றால் அவனைப் போல மெசேஜ் அனுப்பி சாட் செய்தது யார் என அனைவரும் குழம்புகிறார்கள். போனை ஆப் செய்த பின்னும் அப்படி வருகிறது. தொடர்ந்து சில மர்மமான சம்பவங்கள் நடக்கிறது. அதற்கெல்லாம் என்ன காரணம் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் முக்கியக் கதாபாத்திரம் என்றால் அந்த பழைய காட்டு பங்களாவைத்தான் சொல்ல வேண்டும். விதவிதமான கோணங்களில், லைட்டிங்குகளில் அந்த அழகையும் பயமுறுத்தும் அளவிற்குக் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் ராபர்ட்டோ ஜசாராவும் ஒளிப்பதிவும் முக்கியக் கதாபாத்திரம்தான்.

ஐஸ்வர்யா ராஜேஷ், விது, சூர்யா கணபதி, மாதுரி இவர்கள் நால்வரும் படம் முழுவதுமே வருகிறார்கள். விதவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிப்பெல்லாம் இல்லை. ஒரே விதமான உணர்வுதான் அது பயம், அதுவும் பேய் பயம். யார், யார் எந்த அளவிற்குக் காட்டியிருக்கிறார்களோ அதுதான் அவர்களது நடிப்பு. ஒவ்வொருவரின் கதாபாத்திரத் தன்மைக்கேற்ப கூடவோ, குறையவோ செய்கிறார்கள். அதிலும் மாதுரி பயப்படுவதெல்லாம் ஓவர் ரகம், அதற்கு பேயை விட்டே ஒரு தண்டனை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இப்படியான பேய்ப் படங்களில் வீட்டு காவலாளி, வேலைக்காரர்கள், வாட்ச்மேன் என யாராவது ஒரு கேரக்டரை நாம் சந்தேகப்படும்படி படத்தில் வைத்துவிடுவார்கள். அப்படி ஒரு கதாபாத்திரத்தில் பாவெல் நவகீதன். படமே பூமிகாவைச் சுற்றித்தான் நகர்கிறது. ஆட்டிசம் பாதித்த சிறுமியாக பூமி கதாபாத்திரத்தில் அவந்திகா வந்தனப்பு. அவருடைய உடல்மொழியிலும், நடிப்பிலும் அவ்வளவு யதார்த்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பிரித்வி சந்திரசேகர் இசையமைப்பு ஒரு த்ரில்லர் படத்திற்கு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது.

க்ளிஷேவான காட்சிகள் பல இருந்தாலும் அதையும் மீறி சில காட்சிகளில் பயத்தில் ஜில்லிட வைக்கிறார்கள். பூமிகா சம்பந்தப்பட்ட காட்சிகள், இயற்கையை, மரம், செடி, கொடிகளை அவர் ரசிக்கும் விதத்தை ஓவியங்கள் வழியே காட்டியிருப்பது சிறப்பு.

ஒரு இரண்டு மணி நேரப் படத்துக்குரிய காட்சிகளைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக என்னென்னமோ சேர்த்திருக்கிறார்கள். சிம்பிளாக சொல்லி முடிக்க வேண்டும் என்று இருந்தால் ஒரு குறும்படமாகவே சிறப்பாக முடித்திருக்கலாம்.

இருந்தாலும் இயற்கைக்கு எதிராக செயல்படாதீர்கள் என்ற நல்ல கருத்தைச் சொன்னதற்காக மட்டும் கை கொடுத்து பாராட்டலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!