காலேஜ் குமார் திரை விமர்சனம்
நடிகர் :ராகுல் விஜய்
நடிகை :பிரியா வட்லமணி
நல்ல பையனாக வளரும் ராகுல் விஜய் கல்லூரி வந்த பிறகு படிப்பில் தடுமாறுகிறார். பெற்றோர் மனது கஷ்டப்பட கூடாது என்று முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனின் மார்க் ஷீட்டை காட்டி ஏமாற்றுகிறார். இவை எல்லாம் ஒரு கட்டத்தில் பிரபு, மதுபாலாவிறகு தெரிய வருகிறது. மகனை கண்டிக்கும்போது அவர் அப்பாவை பார்த்து கல்லூரிக்கு சென்று படிக்க முடியுமா? என்று சவால் விடுகிறார். அந்த சவாலை ஏற்றுக்கொண்டு பிரபுவும் கல்லூரி செல்ல தொடங்குகிறார். அதன் பின் என்ன ஆகிறது? என்பதே கதை.
நண்பனின் ஆடிட்டர் அலுவலகத்தில் பியூனாக பணிபுரிகிறார் பிரபு. மகன் பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் பிரபு நண்பனால் அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் அந்த அலுவலகத்தில் இருந்து நிற்கும் பிரபு தன் மகனை ஆடிட்டர் ஆக்குவேன் என்று சபதம் ஏற்கிறார்.
பிரபுவுக்கு இது அல்வா சாப்பிடுவது போன்ற கதாபாத்திரம். வெளுத்து வாங்குகிறார். முதல் பாதியில் அழுத்தமாக இருக்கும் பிரபுவின் கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் செய்யும் காமெடி அலப்பறைகள் சிரிக்க வைக்கின்றன. இறுதிக்காட்சியில் தன் அனுபவ நடிப்பால் கலங்க வைத்துவிடுகிறார்.
மதுபாலா வழக்கமான அம்மா வேடம் என்றாலும் இடைவேளை காட்சியில் மகனிடம் ஆவேசப்படும் காட்சியில் இயல்பாக நடித்துள்ளார். மகன் மீது கோபம் இருந்தாலும் அவன் கஷ்டப்பட கூடாது என்று உருகும் இடங்களும் அட்டகாசம்.
ராகுல் விஜய்யும் சிறப்பாக நடித்துள்ளார். பார்க்க பக்கத்து வீட்டு பையன் போல இருந்தாலும் பொறுப்பு இல்லாமல் திரிவது, பொறுப்பு வந்த பிறகு அப்பாவை உணர்வது என்று கலக்கி இருக்கிறார்.
பிரியா வட்லமணிக்கு வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம். மனோபாலா, நாசர், சாம்ஸ் ஆகியோரும் காட்சிகளை கலகலப்பாக நகர்த்தியுள்ளனர்.
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும் வகையிலும் அனைவரும் ரசிக்கும் வகையிலும் நல்ல கதையை உருவாக்கி அதை கமர்சியலாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
பாடல்களில் இளமை தெறிக்கிறது. ‘காலேஜ் குமார்’ கலகலப்பு குமார்