இன்றைய வேத வசனம் (31.8.2021)
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
அனுபவம்
ஒரு வேட்டைக்காரன் காட்டில் விலங்குகளை வேட்டையாட சென்றபோது, சிறிய புலிக்குட்டியைக் கண்டான். ஆசையோடு வீட்டில். கொண்டு வந்து அதை வளர்க்க ஆரம்பித்தான்.
அந்த புலிக்குட்டி நாய்குட்டியோடும், வேட்டைக்காரனின் பிள்ளைகளோடும் அருமையாய் பழகியது. விளையாடியது. மகிழ்வித்தது. சில வருடங்களில் அந்தப் புலிக்குட்டி வளர்ந்து பெரிதாகிவிட்டது.
ஒருநாள் வேட்டைக்காரனின் மகன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, கீழே விழுந்து அவன் காலில் இரத்தம் வடிய ஆரம்பித்தது. வளர்ந்து வந்த அந்தப் புலிக்குட்டி, மோப்பம் பிடித்து, தன் நாவினால் அந்த காயத்தை நக்கிக் கொடுத்தது.
அவ்வளவுதான். சில வினாடி நேரங்களுக்குள், இரத்தத்தை ருசி பார்த்த அந்த புலிக்குள், பயங்கர ஜென்ம சுபாவம் தலைதூக்க ஆரம்பித்தது. ஒரே பாய்ச்சலில் அந்த மகனை அடித்துக்கொன்றது.
பிள்ளைகள் அழுகுரல் கேட்டு வேட்டைக்காரன் வெளியே வந்தபோது, அவன் மேலும் அந்தப் புலி பாய்ந்து, தாக்கிக் காயப்படுத்தியது. பார்த்தீர்களா ? பாவத்தோடு பழகுவதும், இதே தீமையைத்தான் வரவழைக்கும்.
"அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும். பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும் (யாக்கோபு 1:14,15)
வசனம்
"பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23), "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" (நீதி 28:13).
"கொஞ்சம் புளித்தமா, பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா" (1கொரி 5:6).
"தம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1யோவான் 1:9)