இன்றைய வேத வசனம் (3.9.2021)
எல்லா மார்க்கங்களிலும் மனிதன், கடவுளைத் தேடிப்போகிறான். ஆனால் கிறிஸ்தவ மார்க்கத்தில் மட்டுமே, பரலோக தேவன், அன்பின் உடன் படிக்கையோடு மனிதனைத் தேடி வந்தார்.
நீங்கள் எந்த புண்ணிய ஸ்தலங்களுக்கோ, தரிசன இடங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. எந்த இடத்திலிருந்தாலும், கர்த்தரை ஆவியோடும், உண்மையோடும் தொழுது கொள்ள முடியும்.
பாவஞ்செய்த ஆதாம், கர்த்தரைத் தேடவில்லை. ஆனால் கர்த்தரோ, பகலின் குளிர்ச்சியான வேளையிலே, ஆதாமைத் தேடிவந்தார். தேவனுடைய இனிமையான ஐக்கியத்தை இழந்துவிட்ட அவனை "ஆதாமே, ஆதாமே, நீ எங்கேயிருக்கிறாய்? '' என்று துயரத்தோடு கேட்டார்.
ஆதாம் செய்த பாவத்திற்காக, இரத்தம் சிந்தி நிவாரணமளிக்கும்படி தன் ஒரேபேறான குமாரனை உலகத்திற்குத் தந்தருளினார்.
சமாரியா ஸ்திரீயின் வாழ்வு அருவருப்பானது. அன்புக்காக ஏங்கின அவளுக்கு அநேக புருஷர்கள். அவள் கர்த்தரைத் தேடவில்லை. ஆனால் இரட்சகரான இயேசுகிறிஸ்து மத்தியான வெயிலையும் பொருட்படுத்தாமல், அவளுக்காக கிணற்றோரத்தில் காத்திருந்தார். அவளையும், குடும்பத்தையும், சமாரியரையும், இரட்சிப்புக்குள் வழி நடத்தினார்!
"தேடாத என்னை தேடிப்பிடித்த, உன் அன்பை பாடாதிருப்பேனோ பராபரனே?" என்று பக்தன் பாடி மகிழ்கிறான்.
அற்புதம்
உண்மையில் நீங்கள் அவரைத் தெரிந்து கொள்ளவில்லை. அவர்தான் உங்களை தெரிந்துகொண்டார். அவர்தான் உங்களை தேடிவந்தார். கல்வாரி நேசத்தால் உங்களை அரவணைத்துக் கொண்டாரே எவ்வளவு அன்பு!
வசனம்
"மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்கா 15 :7).