இன்றைய வேத வசனம் (05.09.2021)
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
அற்புதம்
ஒரு குடும்பத்தில், தன் மகனுடைய துன்மார்க்க ஜீவியத்தை அறிந்த தகப்பனார், அவனை அடித்து நொறுக்கினார். அவனை வீட்டை விட்டே துரத்திவிட்டார். அந்தச் சிறுவன், தகப்பனுக்கு பயந்து, தூர தேசத்திற்கு ஓடிவிட்டான்.
ஆனால் தாய்க்கோ, தன் மகனின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. "தன் மகன் திரும்பி வந்துவிடமாட்டானா?" என்ற ஏக்கப் பெருமூச்சோடு ஒவ்வொருநாளும் ஜன்னலின் அருகே காத்திருந்தாள்.
காலங்கள் வேகமாய் உருண்டன.
தாயின் அன்போ, குறையவில்லை, ஒரு நாள் தன் மகனை எதிர்பார்த்துக் கொண்டு, வீட்டு மாடியில் காத்திருந்த தாய் மேல் படிக்கட்டிலிருந்து உருண்டு கீழே விழுந்தாள்.
சரீரமெல்லாம் பலத்த காயம், அடி, இரத்தம் பொங்கியது. "மகனே, திரும்பி வா நான் மரணப்படுக்கையில் இருக்கிறேன்" என்று பத்திரிகையில் விளம்பரம் செய்தாள்.
இதை வாசித்த மகனின் இருதயம் உருகிற்று. தாயைக் காண விரும்பினான். தகப்பன் மேலோ மிகுந்த பயம். எனினும் ஒரு இரவு தைரியமாய், வீட்டிற்கு வந்து மரணப்படுக்கையில் போராடிக்கொண்டிருந்த தாயை, அன்போடு வருடிக்கொடுத்தான்.
தாயின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தன் கணவனை அழைத்தாள். மகனின் கையையும், கணவனின் கையையும் ஒன்றாக இணைத்தபோது, அவள் உயிர் அவளை விட்டுப் பிரிந்தது!
உங்களை, பிதாவோடு ஒன்றாக இணைப்பதற்காகவே நமது அருமையான ஆண்டவர், தன் ஜீவனை கல்வாரியின் தந்தார்! பாவத்தால் தூரமாயிருந்த உங்களையும், பாவத்தைப் பாராத நியாயமுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தரையும் தன் இரத்தத்தால் இணைத்து ஒப்புரவாக்கினார். ஆ! என்ன தியாகம் அது!
வசனம்
"அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்." (2 கொரி 5:18),
"ஆனபடியினாலே... தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்." (2கொரி 5:20).