இன்றைய வேத வசனம் (12.9.2021)
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
அந்த நாட்களில் இரு நாடுகள் நடுவே யுத்தம் மீளும் போது, எதிரியின் நாட்டை ஜெயித்து சூறையாடி, அவர்கள் மிகவும் போற்றத்தக்க பொருள்களையும், உடைமைகளையும் கொண்டு போய் விடுவார்கள்.
அன்றைக்கும் அப்படி தான் பெலிஸ்தர்கள், இஸ்ரவேல் தேசத்தை ஜெயித்து, இஸ்ரவேலர்கள் மிகவும் போற்றத்தக்க, மதிக்கத்தக்க, கனப்படுத்தும் முக்கியமான ஒன்றான “தேவனுடையப் பெட்டியை" கொண்டு போய் தாகோன் கோவிலில் வைத்து விட்டார்கள்.
இஸ்ரவேலுக்கு மணிமகுடமாய் திகழ்ந்த தேவனுடையப் பெட்டி, அவர்களின் அலட்சியத்தால் பிடிப்பட்டது.
என்றைக்கு தேவனுடையப் பெட்டி பெலிஸ்தியரால் பிடிபட்டதோ அன்றே இஸ்ரவேலின் மகிமை விலகிவிட்டது என்று இஸ்ரவேலர் புலம்பினார்கள்.
அப்பேர்ப்பட்ட புகழ்மிக்க தேவனுடையப் பெட்டியை கைப்பற்றி விட்டோம் என்ற பெருமிதத்தில் பெலிஸ்தியர்கள் மிதந்துக் கொண்டிருக்க, மறுநாள் காலையில் அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
அவர்கள் வணங்கும் தாகோன் சிலை கர்த்தருடையப் பெட்டிக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து கிடந்தது. அதைப் பெலிஸ்தியர்கள் அதின் ஸ்தானத்தில் நிறுத்தினார்கள்.
மறுநாள் தாகோன் சிலை கர்த்தருடையப் பெட்டிக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது. தாகோனுக்கு உடல் மாத்திரம் மீதியாயிருந்தது.
கர்த்தருடையப் பெட்டியின் வல்லமையும், மகிமையும் அறியாத பெலிஸ்தியர்கள் அதிர்ந்து போனார்கள்.
கர்த்தர் யார்? அவருடைய மகிமை என்ன? என்று பெலிஸ்தியர்கள் அறிந்த பிறகு, பயபக்தியோடு கர்த்தருடையப் பெட்டியை இஸ்ரவேல் பாளயத்திற்கு திரும்ப அனுப்பி விட்டார்கள்.
அவருக்கு முன்பாக எல்லா முழங்கால்களும் முடங்கும், எல்லா நாவுகளும் அறிக்கையிடும் அப்படியிருக்க தாகோன் சிலை எம்மாத்திரம்.
நம் கர்த்தர் பராக்கிரமம் நிறைந்தவர். அவரே உன்னதமான கர்த்தர். அநேக நேரம் நாம் ஆராதிக்கும் தேவனின் வல்லமையை நாம் அறியாமல் இருக்கிறோம், அநேக நேரம் அவருடைய வல்லமையை அறிந்து, அனுபவிக்க ஆசையும் இல்லாமல் இருக்கிறோம்.
முதலில் நாம் அறிந்துக் கொண்டு பின்னர் அறியாத ஜனத்திற்கு அறிவிப்பது நம் கடமை. இருண்ட அவர்கள் கண்களுக்கு ஒளி கொடுக்க, கர்த்தருடைய உன்னத தன்மையை அவர்கள் விளங்கிக் கொள்ள, அதை அறிவிப்பது நமது பொறுப்பல்லவா?
தேவனுடைய நாமத்தை அறிவிப்பதில் இன்னும் ஏன் தாமதமும், நிர்விசாரமும்.
தோழர்/தோழிகளே! நீங்கள் ஆராதிக்கும் தேவன் யெகோவா எலியோன் (உன்னதமான கர்த்தர்) வல்லமையானக் காரியங்களைச் செய்கிறவர் என்பதை அறியாதவர்களுக்கு பகிர வேண்டியது நீங்கள் தான்!
இப்படிப்பட்ட ஒரு தெய்வம் உனக்கும் உண்டு, கலங்க வேண்டாம்! என்று ஜனங்களை பெலப்படுத்த வேண்டியவர்கள் நீங்கள் என்பதை மறந்து போகாதீர்ங்கள். ஆமென்!
அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. (ரோமர் 14:11)