இன்றைய வேத வசனம் (14.9.2021)
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
ராஜ் என்ற விவசாயிக்கு சொந்தமான பல தோட்டங்களும் வயல்களும் உண்டு. அதிகமாக பகல் நேரங்களில் தன்னுடைய நேரத்தை அங்கேதான் செலவிடுவார்.
தனது கடின உழைப்பால் நல்ல சரீர புஷ்டியும் பெலமுள்ள புயங்களும் அவருக்கு உண்டு. சில நேரங்களில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும்படியாக அதிகாலையில் இருட்டோடே வயலுக்கு வருவார்.
அதுபோல சில நேரங்களில் அதிக வேலையினிமித்தம் இரவும் ஆகிவிடும். இப்படிப்பட்ட இருட்டு நேரங்களில் அவர் வரும்பொழுது, ஏதாவது சத்தங்கள் கேட்கும்போதும், காற்றில் மரங்கள் சற்று வேகமாக அசையும்பொழுதும் பயமும், திகிலும் உண்டாகும். உடல் வியர்த்து ஒரு வழி ஆகிவிடுவார்.
வீட்டுக்கு சென்றால் தூக்கமும் இருக்காது. இவருடைய சரீம் நல்ல பெலனுள்ளதாக இருந்தாலும் இவருடைய ஆவி பெலவீனமாகவே காணப்பட்டது.
எப்படியோ ஒரு பொல்லாத அசுத்த ஆவி இவரை தொந்தரவு செய்ததை உணர்ந்தார். இந்த பொல்லாத அசுத்த ஆவியின் பயத்திலிருந்து விடுபடுவதற்கு அநேக முயற்சிகளை எடுத்தார். எல்லாம் தோல்லியில்தான் முடிந்தது.
இப்படியிருக்கும் சூழ்நிலைகளில்,ஒரு நாள் அவர் வேலைக்கு போகும்பொழுது சாப்பாடு பொட்டலத்தை கையில் எடுத்துக்கொண்டார். தன்னுடைய சட்டைப்பையில் ஒரு துண்டு கருவாடு (dry fish) கூட்டுக்காக வைத்திருந்தார்.
இவர் நடந்து போகும்பொழுது ஒரு பூனை இவரை பின் தொடர்ந்தது. இவர் இந்தப்பூனையை துரத்த எவ்வளவோ முயற்சிகளை எடுத்தும் தோல்வியே இவருக்கு கிடைத்தது.
ஏன் இந்த பூனை போகவில்லை என்று யோசிக்கும் பொழுது தன்னுடைய சட்டைப்பையில் இருந்த கருவாடு மணத்தினால் தான் இந்த பூனை தன்னை பின் தொடர்ந்தது என்பதை கண்டுகொண்ட அவர்,
ஓகோ! பொல்லாத பயம் என்னைவிட்டு போகாமலிருக்கவும் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்பதை உணர்ந்து சற்று ஆழமாக சிந்திக்க ஆரம்பித்தார்.
அப்பொழுது தான் செய்த பாவத்தின் மணம்தான், பொல்லாத பிசாசு என்னை தொடர்ந்து வந்து, பயத்தினால் என்னை சூழ்ந்துகொள்ளுகிறது என்பதை கண்டு கொண்டார்.
நண்பர்களே! பாவ மணம் நமக்குள்ளிருந்து வீசுமானால் பிசாசு பின்தொடர்வான். தேவையில்லாத திகிலும், பயங்களும் உண்டாகி சரியான நித்திரையில்லாமல் வாழ்க்கையை அல்லலுக்குள் தள்ளிவிடும்.
பரிசுத்த வேதம் சொல்லுகிறது, தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். (நீதிமொழிகள் 28:13)
எனக்கு அருமையான நண்பர்களே! உங்களுக்குள்ளே ஏதாவது கருவாடு இருக்குமேயானால் நீங்களும் இந்த அல்லலுக்கு தப்ப முடியாது.
ஆகவே இன்றே உங்கள் பாவங்களை இயேசுவினிடத்தில் அறிக்கை செய்து விட்டுவிடுங்கள்.
நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; (#ஆதியாகமம் 4:7) என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
தேவன் தாமே உங்களை உணர்த்துவிப்பாராக!
ஆமென்.