நீரிழிவு நோயாளிகள் பச்சை ஆப்பிள் சாப்பிடலாமா?

Keerthi
3 years ago
நீரிழிவு நோயாளிகள் பச்சை ஆப்பிள் சாப்பிடலாமா?

ஆப்பிள் என்றதுமே சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவத்தில் காட்சியளிக்கும் பழங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் பல்வேறு வண்ணங்களில் ஆப்பிள்கள் விளைகின்றன. அவற்றுள் தற்போது பச்சை நிற ஆப்பிள் பரவலாக சந்தையில் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.

சிவப்பு நிற ஆப்பிளை போலவே பச்சை ஆப்பிளும் சம அளவில் ஊட்டச்சத்துக்களை கொண்டது. ஆனால் பச்சை ஆப்பிளில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். அதனால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். அத்துடன் இதில் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை இரண்டுமே கலந்திருக்கும். பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என்பது குறித்து பார்ப்போம்.

 
வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்:

  • பச்சை ஆப்பிளில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். மேலும் இதிலிருக்கும் அதிக நார்ச்சத்தானது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் செயல்முறையை தூண்டிவிடக்கூடியது. செரிமான அமைப்புக்கும் ஆற்றலை வழங்கக்கூடியது. அதனால் வளர்சிதை மாற்றமும் துரிதமடையும். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.

கல்லீரலுக்கு நல்லது:

  • பொதுவாக ஆன்டி ஆக்சிடென்டுகள், இயற்கையாகவே நச்சுக்களை நீக்கும் முகவர்களாக செயல்படக்கூடியவை. கல்லீரலுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியவை. பச்சை ஆப்பிள், கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். குடல் இயக்கத்தையும் எளிதாக்கும். குடல் அமைப்பை சுத்தமாக வைத்திருக்கவும் உதவும். செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், பச்சை ஆப்பிள் சாப்பிட்டு வரலாம். குறிப்பாக வேக வைத்த பச்சை ஆப்பிளை சாப்பிடுவது விரைவில் நிவாரணம் பெற உதவும். பச்சை ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதுதான் நல்லது.

எலும்புகளை வலுப்படுத்தும்:

  • அடர்த்தியான மற்றும் வலுவான எலும்புகளுக்கு கால்சியம் அவசியம். குறிப்பாக கால்சியம் பற்றாக்குறை காரணமாக பெண்களுக்கு எலும்புகள் மெலிந்து பலவீனமடைய வாய்ப்புள்ளது. குறிப்பாக 30 வயதுக்கு பிறகு எலும்பு அடர்த்தி குறையும். மாதவிடாய் முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் பெண்கள் பச்சை ஆப்பிள் சாப்பிடுவது பலன் தரும். பச்சை ஆப்பிள் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பை தடுக்கக்கூடியது. எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் பச்சை ஆப்பிளுடன் பிற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

நுரையீரலை பாதுகாக்கும்:

  • பச்சை ஆப்பிளை தினமும் சாப்பிடுவது நுரையீரலுடன் தொடர்புடைய நோய் அபாயங்களை 23 சதவீதம் குறைக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பச்சை ஆப்பிள், ஆஸ்துமா அபாயத்தையும் குறைக்கும். புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு பச்சை ஆப்பிள் சிறந்த வடிகாலாக அமையும். நோய்த்தொற்று பரவும் காலத்தில் பச்சை ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. அது நுரையீரலுக்கு பாதுகாப்பு அரணாக அமையும்.

பார்வை திறன் மேம்படும்:

  • பச்சை ஆப்பிள்களில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. அது கண்பார்வை திறனை அதிகரிக்க உதவும். சாலட்டுகளுடன் பச்சை ஆப்பிளை கலந்து சாப்பிடலாம். பச்சை ஆப்பிளின் தோலை தவிர்க்கக்கூடாது. அது இறைச்சியை போல் ஆரோக்கியமானது. நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் பச்சை ஆப்பிளுக்கு உண்டு.

ரத்த அழுத்தத்தை குறைக்கும்:

  • பச்சை ஆப்பிள் இதய அமைப்பை மேம்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 52 சதவீதம் குறைக்கக்கூடியது. அமெரிக்கன் ஜர்னல் ஆப் கிளினிக்கல் நியூட்ரிஷனின் ஆய்வின் படி, பச்சை ஆப்பிள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் உணவு பட்டியலில் பச்சை ஆப்பிளை சேர்க்க மறக்கக்கூடாது. குறிப்பாக கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த பிரச்சினை கொண்டவர்களுக்கு பச்சை ஆப்பிள் சிறந்த நண்பனாக விளங்கும்.

பச்சை ஆப்பிளை காலை மற்றும் மதிய உணவு இடைவெளிக்கு இடையே சாப்பிடலாம். இரவில் சாப்பிடுவது குடல் இயக்க செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தக்கூடும். வாயு தொல்லை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!