முதல்முறையாக ஆகாய கங்கை பகுதியில் பிரபுதேவா படம்
கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கையில் மிகுந்த சிரமங்களுக்கிடையே முதல் முறையாக பிரபுதேவா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப்புகள் நடந்ததில்லை. அதிலும் குறிப்பாக கொல்லிமலையின் சிறப்புமிக்க, பிரசித்தி பெற்ற இடம் என்றால் அது ஆகாய கங்கை என்கிற 1500 அடி உயரமுள்ள அருவியாகும்.
சாதாரணமாக சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கே மிகவும் சிரமப்பட்டுத் தான் இந்த அருவிக்கரையை அடைய முடியும்.
மலையிலிருந்து எங்கிருந்து பார்த்தாலும் இந்த அருவி கண்களுக்குப் புலப்படாது. மிக ரகசியமாக 1250 செங்குத்தான படிகளில் வலிகளை பொருட்படுத்தாமல் இறங்கினால் மாத்திரமே கடைசிப் படி இறங்கி திரும்பினால் அருவி முழுத் தோற்றம் கண்களுக்குத் தெரியும் வகையில் இயற்கையாகவே அமைந்துள்ள ரகசிய பிரமாண்டமாகும் இந்த ஆகாய கங்கை அருவி.
இந்த ஆகாய கங்கையில் முதல்முறையாக எம்.எஸ்.மூவிஸ் கே.முருகன் தயாரிப்பில், பா.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முறையான அனுமதி பெற்று நடந்துள்ளது.
ஆகாயகங்கை அருவிக்கரைக்கு செல்வதற்கு படப்பிடிப்பு குழுவினர் அதிகாலை சுமார் 5 மணியில் இருந்தே டோலி மூலமும் உள்ளூர் மக்கள் உதவிகளைப் பெற்றும் நடிகர், நடிகைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கீழே இறங்க ஆரம்பித்து, பல கற்பாறைகள், மழை, காற்று இவற்றையெல்லாம் சமாளித்து தொழில்நுட்ப கருவிகளை மிகவும் சிரமப்பட்டு சுமந்துகொண்டு அருவிக்கரையை பதினொரு மணிக்கு அடைந்துள்ளனர்.
அதன் பிறகு ஏராளமான வலிகளையும் சிரமங்களையும் தாங்கி முதல்முறையாக ஆகாயகங்கை பகுதியில் பிரபுதேவா, மகிமா நம்பியார் உட்பட பல நடிகர்கள் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளனர்.