மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மிக உயரிய விருது- முதலமைச்சர் அறிவிப்பு !!
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான 'கர்நாடக ரத்னா' விருது வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னட திரையுலகில் நடிகராக இருந்து வந்த புனித் ராஜ்குமார்(46), அப்பு என்றும், பவர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டவர். ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்து, கன்னட திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தவர் புனித் ராஜ்குமார்.
இந்த நிலையில், நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அதிர்ச்சியடைந்தனர். கர்நாடகாவின் முன்னணி நடிகரான அவரது நினைவிடம் அமைந்துள்ள காண்டிவரா மைதானத்தில் தொடர்ச்சியாக இப்போதும்கூட ரசிகர்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அதோடு, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டதால் கடந்த 15 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கர்நாடகாவில் கண்தானம் செய்துள்ளனர். இந்த நிலையில், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்கப்படும் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.