ஜெய்பீம் சிறந்த படம் : வன்னியர்கள் வலி நியாயமானது… நடுநிலையாக சீமான்

Reha
2 years ago
ஜெய்பீம் சிறந்த படம் : வன்னியர்கள் வலி நியாயமானது… நடுநிலையாக சீமான்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியாக படம் ஜெய்பீம். இருளர் இன மக்களின் வாழ்வியலையும்,  அவர்களக்கு நடந்த கொடூரமான சம்பவத்தையும் அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு, தமிழக முதல்வர் உட்பட பல அரசியல் பிரபமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில். விமர்சன ரீதியாகவும் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஆனால் இந்த படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பிய நிலையில், இதற்காக நடிகர் சூர்யா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சூர்யாவை எட்டி உதைப்பவரக்கு ரூ 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சூர்யாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவாகி வரும் நிலையில், ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவை உதிக்க சொன்ன பாமக பிரமுகரை வேண்டுமானால் அடிங்க..நான் காசு தருகிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது தற்போது பேசும்பொருளாகியுள்ளது.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வ.உ.சிதம்பரனார் 85ஆம் ஆண்டு நினைவு நாள் மலர்வணக்க நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
நான் ஜெய்பீம் படத்தை பார்க்கும் போது கதாப்பாத்திரங்களுடன் ஒன்றிவிட்டதால், வன்னியர் சார்ந்த குறியீடுகளை உன்னிப்பாக கவனிக்கவில்லை. ஜெய்பீம் படம் தொடர்பாக கவிஞர் ஜெயபாஸ்கரன்தான் முதலில் கேள்விகளை எழுப்பினார். உண்மை சம்பவத்தில் தொடர்புடைய அந்தோணிசாமி என்கிற பெயரை ஏன் மாற்ற வேண்டும்? அதேபோல வன்னியர் சங்கத்தின் அடையாளமாக இருக்கும் அந்த குறியீட்டை ஏன் காலண்டரில் பயன்படுத்த வேண்டும்?

பொதுவாக நடிகர் சூர்யா கதையைத்தான் கேட்டிருப்பார். இது போன்ற குறியீடுகள் எல்லாம் துணை இயக்குநர், ஆர்ட் டைரக்டர், இயக்குநர்தான் முடிவு செய்வார்கள். ஒருவேளை நான் படம் பார்க்கும்போது கண்ணில் பட்டிருந்தால் தம்பி சூர்யாவை தொடர்பு கொண்டு அதை வைக்க வேண்டாம் என சொலலி இருப்பேன். அவரும் செய்திருப்பார்.

எனக்கு அண்ணன் சிவகுமார் குடும்பத்தை நன்கு தெரியும். அவர்களைப் பொறுத்தவரை பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு கான்பது என்று யோசிப்பார்களே தவிர எந்த பிரச்சனையும் உருவாக்க மாட்டார்கள்; தாங்கும் உண்டு; தங்கள் வேலை உண்டு என இருப்பவர்கள். இப்போது சுட்டிக்காட்டியவுடன் அந்த காலண்டரில் படத்தை மாற்றி இருக்கிறார்கள். ஒரு பிரச்சனை முடிந்துவிட்டதாக போக வேண்டும்.
குறவர், இருளர் மக்களுக்கு பாதுகாப்பாக இருந்ததே வன்னியர்கள்தான். அவர்களை ஏன் ஜெய்பீம் படத்தில் தவறாக காட்ட வேண்டும்? நீங்கள் ஒரு சமூகத்தின் வலியை காட்டப் படம் எடுக்கும் போது இன்னொரு சமூகத்துக்கு ஏன் வலியை தர வேண்டும்? அங்கே போராடிய கோவிந்தன் என்பவரை ஏன் படத்தில் இடம்பெறச் செய்யவில்லை?

எங்களைப் பொறுத்தவரை ஜெய்பீம் திரைப்படம் சிறந்த படம்; வெற்றிகரமாக ஓடிவிட்டது. மேலும் ஒரு சமூகத்தின் வலியை அன்புமணி வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது வலியும் நியாயமானது. தம்பி சூர்யாவை உதைக்க வேண்டும் என்றெல்லாம் பேசுவது பதிவிடுவது தேவை இல்லை. வேண்டுமானால் சூர்யாவை உதைக்க வேண்டும் என சொன்னவரை நீங்க அடிங்க.. நான் காசு தருகிறேன்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை செயல்படுத்தும் வகையில் பாமக செயல்படுத்துகிறது என கருத தேவை இல்லை. நான் அப்படி நினைக்கவும் இல்லை. அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து டாக்டர் ராமதாஸ் விலகுவதாக அறிவித்த பிறகு ஏன் அப்படி யோசிக்க வேண்டும்? என சீமான் குறிப்பிட்டுள்ளார்.