தெலுங்கு திரையுலகின் பிரபல பாடலாசிரியர் சீதாராம சாஸ்திரி காலமானார்
தெலுங்கு திரையுலகின் பிரபல பாடலாசிரியர் சீதாராம சாஸ்திரி உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 66. சினிமா பிரபலங்கள் தொடர்ந்து உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்து வருவது திரைத்துறைக்கு மிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதித்த நிலையில் காலமானது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், அடுத்ததாக இன்னொரு இழப்பை திரைத்துறை சந்தித்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் பிரபல பாடலாசிரியரும் கவிஞருமான சீதாராம சாஸ்திரி (Sirivennela Seetharama Sastry) நுரையீரல் புற்றுநோய் காரணமாக நவம்பர் 30ம் தேதியான இன்று மாலை 4.07 மணிக்கு கிம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. பிரபல பாடலாசிரியர் உயிரிழந்ததை அறிந்த தென்னிந்திய திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
1986ம் ஆண்டு கே.வி. மகாதேவன் இசையில் வெளியான சிறி வெண்ணெலா படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் சீதாராம சாஸ்திரி. மகாநதி, அலா வைகுந்தபுறமுலோ, ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இவர் பாடல் வரிகளை எழுதி உள்ளார். கிட்டத்தட்ட 3000 பாடல்களுக்கு மேல் தெலுங்கு சினிமாவில் இவர் எழுதி உள்ளார்.
டோலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் பிரபல பாடலாசிரியரான சீதாராம சாஸ்திரியின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னணி நடிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலர் இறுதி அஞ்சலியில் நேரில் சென்று கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.