விஜய் சேதுபதிக்கு எதிராக புகார் அளித்த இசைஞானி
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசி விவசாயி’ படத்தின் மேல் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்திருக்கிறார்.
‘காக்கா முட்டை’ ‘ஆண்டவன் கட்டளை’ ‘குற்றமே தண்டனை’ படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வெளியாகத் தயாராக இருக்கும் திரைப்படம் ‘கடைசி விவசாயி’.
இப்படத்திற்கு முதலில் இளையராஜா இசையமைத்திருந்தார். அவர் பின்னணி இசையில் ஏற்கனவே கடந்த ஆண்டு அப்படத்தின் முதல் டிரைலர் வெளியானது.
அதற்கடுத்து இயக்குநருக்கும் இளையராஜாவிற்கும் கருத்து வேறுபாடு எழுந்த காரணத்தினால் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் 2 வது டிரைலரின் பின்னணி இசை சந்தோஷ் நாராயணன் தான்.
இந்நிலையில் தன் அனுமதியைக் கேட்காமலும் தனக்குத் தெரியாமலும் இசையமைப்பாளரை மாற்றியதாக ‘கடைசி விவசாயி’ படக் குழுவினர் மீது இசையமைப்பாளர் சங்கத்தில் இளையராஜா புகார் அளித்திருக்கிறார்.
டிசம்பர் இறுதியில் வெளியாக இருந்த இப்படம், இந்த புகாரால் சிக்கலைச் சந்தித்திருக்கிறது.