நடிகர் ரகுவரன் பிறந்தநாள் 11-12-2021
ரகுவரன் (டிசம்பர் 11, 1958 – மார்ச் 19, 2008) தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளில் எதிர்நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த திரைப்பட நடிகராவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
நடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் இராதாகிருஷ்ணன் வேலாயுதம் நாயர்-கஸ்தூரி தம்பதியருக்கு முதல் மகனாக பிறந்தார். மேலும் இவர் தந்தை வேலாயுதம் நாயர் தொழில் செய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள கோயமுத்தூரில் தனது குடும்பத்துடன் குடியேறினர்.
அதன் பின் ரகுவரன் அவர்கள் கோவையில் தனது கல்லூரி கல்வியான இளங்கலை பட்டத்தை படித்து முடித்தார். இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
ஆனாலும் எதிர்நாயகன் வேடங்களில் அவரின் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இது தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையையும் பாதிக்கப்பட்டது. இத்தகைய போதை பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை ரோகிணியும் அவரை விட்டு பிரிந்து செல்ல நேர்ந்தது. ரகுவரன் அவரது போதை பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தாலும், அவரால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் போனது.