சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலக பயணத்தில் இத்தனை கொள்கைகளை கடைப்பிடித்தாரா....? அதிசயம் ஆனால் உண்மை
ரஜினிகாந்த்
பெங்களூருவில் சிவாஜிராவ் கண்டக்டராக இருந்த சமயம். போக்குவரத்து கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நண்பர்களோடு நாடகம் நடத்துகிறார். அந்த நாடகத்தில் துச்சாதணனாக வேடம் போட்டிருந்த சிவாஜிராவின் நடிப்பு அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மிகவும் எளிமையாக நடந்த நாடகத்தை தன் நடிப்பால் பிரமாண்டப்படுத்தினார் சிவாஜி ராவ் என்ற ரஜினிகாந்த்.
அவரை அப்படியே அலேக்காக தூக்கி சென்னைக்கு அனுப்பி வைத்தார் ரஜினியின் நண்பரும் பேருந்து ஓட்டுனருமான ராஜ்பகதூர். அங்கேயே ரஜினியின் நடிப்பைப் பார்த்து சிலர் மோசமாகத் திட்டவும் செய்தார்கள். இப்படி தன்னுடைய நடிப்பிற்காக பாராட்டையும் விமர்சனங்களையும் திரைக்கு வருவதற்கு முன்பே எதிர்கொண்டவர் ரஜினிகாந்த்.
பெரும் பொராட்டத்தோடு தொடங்கிய ஆரம்ப காலகட்டத்திலும் தனக்கென்று சில குணாதிசயங்களை கடைபிடித்து வந்தார். அதில் யாருக்காகவும் ஒளிவு மறைவும் இல்லாமல் மனதில் பட்டத்தை பேசுவதுதான். இந்த குணத்தை தன் திரைவாழ்க்கை முழுவதிலும் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. தன் திரைப்பயணத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் எடுத்த முடிவுகள், சொன்ன கருத்துக்கள் இப்போதும் வியப்பைத்தருகின்றது.
ஒரு முறை ரஜினி நடித்த சிவா படம் ரிலீஸ் ஆகியிருந்த சமயம். படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதே நேரத்தில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படம் சூப்பர் ஹிட். இதுபற்றி ரஜினியிடம் நீங்கள் அபூர்வ சகோதரர்கள் ரிலீஸ் சமயத்தில் ‘சிவா’ படத்தை வெளியிட்டிருக்க வேண்டாமே என கேட்டபோது நல்ல படம் எப்போது வந்தாலும் ஓடும் என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் ரஜினி.
படப்பிடிப்பு தளத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்னரே வரும் பழக்கத்தை நடிகர் திலகத்திடம் இருந்து கற்றுக்கொண்ட ரஜினி, படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்குவது, அதில் குளறுபடி வராமல் பார்த்துக்கொள்வது ஆகியவற்றை சிவகுமாரிடம் இருந்து கற்றுக்கொண்டதாக வெளிப்படையாக கூறினார்.
0அண்ணாத்த படத்தில் அவர் துள்ளலோடு நடித்திருப்பதைத்தான் பலரும் வியந்து பேசினார்கள். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பதில் சொல்லியிருந்தார் ரஜினி, அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு, அகம், புறம், தூய்மையோடு தனி அறையில் அமர்ந்து தியானம் செய்து பாருங்கள். உடல் பொலிவும், அழகும் பெறுவதை கண்கூடாகக் காணலாம்” என்பதே அவர் இன்ரு வரைக்கும் கடைப்டித்து வரும் ஒரு பழக்கம்.
ரஜினிக்கு மிகவும் பிடித்த நாளாக கருதுவது ராகவேந்திரருக்கு உகந்த நாளான வியாழக்கிழமை. ‘அபூர்வ ராகங்கள்’ படப்பிடிப்பு திங்களன்றே துவங்குவதாக கூறப்பட்டதும் ‘முதன்முதலாக கேமரா முன் நிற்கப் போகிறோம். அது ராகவேந்திரருக்கு உகந்த நாளான வியாழனன்று இருக்கக் கூடாதா?’ என்று மனதிற்குள் கேட்டு ஏங்கினார். ஆனால் திங்களன்று படப்பிடிப்பு ரத்தானதால் செவ்வாயன்று அழைப்பு வந்தது. அன்று முழுவதும் படப்பிடிப்பு நடந்தாலும் பாலசந்தர் ரஜினியை அழைக்கவே இல்லை. புதன் அன்று ‘‘இடைவேளைக்குப் பின்புதான் உங்கள் காட்சி வரும். அதனால் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் வாருங்கள்’’ என்று கூறியிருந்தார்கள். ஆனால் புதனன்று ஒரு மணிக்குப் பிறகு கடுமையான மழை பிடித்துக் கொண்டுவிட்டதால் படப்பிடிப்பு கேன்சலானது.. வியாழனன்று சரியாக காலை பத்து மணிக்கு பாலசந்தர் அழைக்க, ரஜினி கேமரா முன் நின்றார். இதை ரஜினி தனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதமாக நினைத்தார்.
திரையுலகிலுள்ள பெரும்பாலான ஐயப்ப பக்தர்களுக்கு குருசாமியாக இருந்து வழிகாட்டியவர் எம்.என். நம்பியார்தான். அப்படித்தான் முதன்முதலாக 1978-ல் அவர் தலைமையில் சபரிமலைக்குச் சென்றார் ரஜினி. அப்போது அவருடன் நடிகர்கள் முத்துராமன், ஸ்ரீகாந்த், கன்னட ‘சூப்பர்ஸ்டார்’ ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன் ஆகியோரும் போனார்கள். 1984-ல் ரஜினிகாந்த் சபரிமலை சென்றபோது, அந்த முறை அமிதாப்பச்சனும் கலந்து கொண்டார். இதுவரை ஒன்பது முறை சபரிமலைக்குச் சென்று வந்திருக்கிறார் ரஜினி!
‘பதினாறு வயதினிலே’ படத்திற்காக பாரதிராஜா ரஜினியை அணுகியபோது சம்பளமாக ஐந்தாயிரம் ரூபாய் கேட்டாராம். “குறைந்த பட்ஜெட் படமென்பதால் கொஞ்சம் குறைக்கச் சொல்லிக் கேட்கவே மூவாயிரம் ரூபாய்க்கு இறங்கினார் ரஜினி. நாங்கள் ரூ.2500 என்று பேசி அவரைச் சம்மதிக்க வைத்தோம். படத்தில் கமல்ஹாசனுக்கு 11 நாட்கள் வேலை என்றால், ரஜினிக்கு வேலை ஐந்தே நாட்கள்தான்” என ‘பதினாறு வயதினிலே’ படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு அறிமுக விழாவில் பேசினார் பாரதிராஜா.
ரஜினி கன்னடத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அங்கு நடித்தது என்னவோ வெறும் பத்து படங்களில்தான். 1981-க்குப்பின் அவர் கன்னடத்தில் நடிக்கவில்லை. கர்ஜனை என்ற அந்த படம்தான் கன்னடத்தில் ரஜினி நடித்த கடைசி படம்.
நண்பர்கள் கேலி
திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது பணப்பற்றாக்குறை வரும்போது கல்லூரி முதல்வர் ராஜாராமிடம் அனுமதி பெற்று ஒரு மாதம் பெங்களூர் சென்று கண்டக்டர் வேலை செய்து மொத்தமாகப் பணம் திரட்டி வருவார் ரஜினி. கல்லூரி முதல்வர் ராஜாராமும் ரஜினியின் நிலையறிந்து பண விஷயத்தில் கெடுபிடி செய்யாமல் அன்புடன் பல வழிகளிலும் உதவியிருக்கிறார். ஒரு முறை ரஜினி பட வாய்ப்புக் கிடைக்காமல் பெங்களூரு சென்றபோது, தன்னோடு பணியாற்றியவர்கள் தன்னை மறமுகமாக கேலி பேசுவதையும், அவமதிப்பதையும் தெரிந்து கொண்ட ரஜினிகாந்த் இனிமேல் சினிமாவில் நடித்தப் பிறகுதான் பெங்களூரு வர வேண்டும் என்று முடிவு செய்து , சென்னைக்கு வந்து விட்டார். அதன் பிறகு ஹீரோவாக அவர் நடித்த படங்கள் வெளியான பிறகுதான் பெங்களூரூ சென்றிருக்கிறார்.
ரஜினியும் சிரஞ்சீவியும்
ரஜினியும் சிரஞ்சீவியும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து வாய்ப்பு தேடும் காலத்தில் இருந்தே நண்பர்கள். இருவரும் இணைந்து ‘ராணுவ வீரன்’, ‘மாப்பிள்ளை’, ‘காளி’ என மூன்று படங்களில் நடித்துள்ளனர். ‘காளி’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரானது. இதில் இரண்டு மொழிகளிலும் ரஜினியே ஹீரோவாக நடிக்க, தமிழில் ரஜினியின் நண்பராக விஜயகுமாரும் தெலுங்கில் சிரஞ்சீவியும் நடித்தனர். தமிழில் வெளியான ‘அவர்கள்’ படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டபோது அங்கே ரஜினி கேரக்டரில் நடித்தார் சிரஞ்சீவி. இன்று ரஜினி அரசியலிலிருந்து விலகிக் கொண்டதற்கு பின்னணியில் சிரஞ்சீவி இருக்கிறார் என்பதே பலரும் அறியாத நிஜம் அரசியலில் தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து சிரஞ்சீவி விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
வள்ளி படத்தின் பிற்பகுதியில் முதல் அமைச்சராக நடித்த அசோக், ரஜினியின் திரைப்பட கல்லூரி நண்பர். அசோக் அடிக்கடி ரஜினியிடம் “நான் ஹீரோவானா நீதாண்டா வில்லன்” என்று கூற, “சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் வில்லனாத்தாண்டா நடிப்பேன்” என்பாராம் ரஜினி. “என்ன இருந்தாலும் ஹீரோ ஹீரோதான்.. வில்லன் வில்லன்தான்” என்று அசோக் சொல்லும்போது “நீ எத்தனை நாளைக்கு ஹீரோவா நடிப்பே? இளமை இருக்கிற வரையில்தானே. ஆனா நான் வயசானா கூட வில்லனா நடிக்க முடியும்’’ என்று இருவரும் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொள்வார்களாம். ஆனால் காலத்தின் மகிமை வயதானாலும் ரஜினி கதாநாயகனாகவே நடித்துக்கொண்டிருக்கிறார்.
நடத்துனராக வேலை பார்த்தபோது பஸ்சில் சில சமயம் ரஜினி விசித்திரமான வேலைகள் செய்வார். ஆங்கில வார்த்தையே கலக்காமல் தூய கன்னடத்தில் பயணிகள் இறங்குமிடத்தைக் குறிப்பிடுவார். ‘மெஜஸ்டிக் சர்க்கிள்’ என்றால் ‘மெஜஸ்டிக் வட்டம்’ என்பார். ‘காந்திஜி ரோடு’ என்றால் ‘காந்திஜி ரஸ்தே’ என்று சொல்லி பயணிகளை வெகுவாகக் கவர்ந்துவிடுவாராம்.
நடிக்க ஆரம்பித்த புதிதில் ரஜினிகாந்துடன் படப்பிடிப்புக்கு உதவியாளனாக ஒரு சிறுவனும் வருவான். ரஜினிக்கு சிகரெட், நெருப்புப் பெட்டி இவற்றைக் கொடுப்பது போன்ற வேலைகள்தான் அவனுக்கு. சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டதும் நெருப்புப் பெட்டியை ரஜினி தூக்கித்தான் போடுவார். அதை அவன் கீழே விழாமல் பிடித்துக் கொள்வான். அவன் எப்போதும் விழிப்போடு இருக்கிறானா என்று அறியவே ரஜினி அப்படிச் செய்வது வழக்கம்.
ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ ஹிந்தியில் வெளிவந்த ‘குதார்’ படத்தின் தழுவலாகும். அதில் இல்லாத சோகப் பாடல் ஒன்றை தமிழில் இணைக்க முடிவு செய்தபோது அதற்காக பாடல் பதிவானது. ஆனால் ரஜினி, ‘‘ஏற்கெனவே படத்தின் நீளம் 17 ஆயிரம் அடி வளர்ந்திருக்கிறது. இன்னும் தேவையா?’’ என்று கேட்டாரம். ஆனால் இயக்குனர் ராஜசேகரும் பிடி கொடுக்காமல் விடாப்பிடியாக “எனக்காக இரண்டு நாள் இரவு கால்ஷீட் கொடுங்க போதும்’’ என்று வற்புறுத்தி நடிக்க வைத்தாராம்.. ரிலீஸான பின் தியேட்டரில் படம் பார்த்த ரஜினி, அந்தப்பாடலுக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இயக்குனரின் தீர்க்கதரிசனத்தை பாராட்டினாராம். அந்தப் பாடல்தான் “ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்’’.
1979-ல் ரஜினிக்கு அவரது உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டபோது, நெருக்கமான நட்பில் இருந்தவர்கள்கூட அந்த நேரத்தில் ரஜினிக்கு உதவாமல் ஒதுங்கிப் போனார்கள். ‘கடவுள்கூட ரஜினிக்கு உதவமாட்டார்’ என்று சொல்லப்பட்ட நேரத்தில் அவரிடம் அன்பு காட்டி ஆதரித்தவர் திருமதி ரெஜினா வின்சென்ட். ரஜினியின் அகராதியில் ‘அம்மா’, ‘மம்மி’ என்றால் அது ரெஜினா வின்சென்ட் மட்டுமே. ‘தர்மயுத்தம்’ படப்பிடிப்பு சென்னையில் ரெஜினாவின் வீட்டில் நடந்தபோது, ரெஜினா காட்டிய பாசத்தால்தான் மன அழுத்தத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்தார். அன்னையை இழந்து தாய்ப்பாசம் அறியாமல் வளர்ந்த ரஜினி அவரைத் தாயாகவே தத்து எடுத்துக் கொண்டார். ரஜினிக்குத் திருப்பதியில் திருமணம் நடந்தபோது உடன் இருந்த முக்கியமானவர்களில் ரெஜினாவும் ஒருவர்.
‘சுட்டாது உன்னாரு ஜாக்ரதா’ (சொந்தக்காரங்க இருக்காங்க ஜாக்கிரதை) என்று தெலுங்கில் கிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்த படத்தை ஏவிஎம் சரவணன் தமிழில் ரஜினியை வைத்து ரீமேக் செய்ய விரும்பினார். ஆனால் அதற்கு முன்பே அந்தப் படத்தைப் பார்த்திருந்த ரஜினி அந்த தெலுங்குப்படத் தயாரிப்பாளரே தமிழில் தன்னை நடிக்கச் செய்ய விரும்பியபோது ரஜினிக்குப் படம் பிடிக்காததால், நடிக்க மறுத்தும் விட்டிருந்தார். ஆனால் சரவணனின் வற்புறுத்தல் காரணமாக அதன் ரீமேக்கில் நடிக்க அரைமனதாக சம்மதித்தார் ரஜினி. ஆனால், அப்படம் தமிழில் வெளியானபோது இவ்வளவு பெரிய வெற்றிபெறும் என ரஜினியே எதிர்பார்க்கவில்லை. அந்தப் படம்தான் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘போக்கிரி ராஜா’
‘சூப்பர்ஸ்டார்’ அந்தஸ்தை எட்டிய பின்னும் ரஜினி ஸ்கூட்டரிலேயே வருவதும் போவதுமாக இருந்தார். ஒருமுறை அப்படி வந்தபோது கீழே விழுந்து அடிபட்டுவிட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் ரஜியினிடம் ஸ்கூட்டர் ஓட்டுவதை விட்டுவிடுமாறு சொல்லியிருக்கிறார். ‘‘சும்மா ஜாலிக்காகத்தான்’’ என்று கூறிய ரஜினியிடம், ‘‘அவரது குடும்பம், அவரை நம்பி லட்சங்களை முடக்கியுள்ள தயாரிப்பாளர்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டாவது ஸ்கூட்டர் ஓட்டுவதை விட்டுவிடுங்கள்’’ என்று மீண்டும் வற்புறுத்த அன்றிலிருந்து காரில் பயணிக்க ஆரம்பித்தார் ரஜினி.
சம்பளத்தை குறைக்க சொன்ன ரஜினி
‘மனிதன்’ படம் துவங்குவதற்கு முன் ரஜினி தனக்கு ஊதியமாக இவ்வளவு தொகை வேண்டுமென்று கேட்க, அது நியாயமானதாகப் பட்டதால் சரியென்று ஒப்புக்கொண்டார் ஏவிஎம் சரவணன். அதன்பின் சில நாட்களுக்குப் பிறகு சரவணனை சந்தித்த ரஜினி, ‘‘நான் உங்களிடம் ‘மனிதன்’ படத்திற்கு எனது சம்பளம் பற்றிப் பேசினேன். இதே தொகையை நான் வேறு இரு நிறுவனங்களுக்குச் சொன்னபோது அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவர்கள் என்ன சம்பளம் சொன்னார்களோ, அதே தொகையைத் தந்து விடுங்கள் போதும்’’ என்று தன் சம்பளத்தைக் குறைக்கும்படி கேட்டுக் கொண்டாராம் ரஜினி. அதுதான் சூப்பர்ஸ்டார்!
குறுகிய காலத்திற்குள் ரஜினியின் 25 படங்களை இயக்கிய சாதனைக்குரியவர் எஸ்.பி.முத்துராமன். ‘ப்ரியா’ படத்தில் படகு சேசிங் காட்சி ஒன்றை ‘க்ளோஸ் அப்’பில் ரஜினியை வைத்து படமாக்கி, மற்றதெல்லாம் டூப்பை வைத்து எடுத்துவிட நினைத்தார்களாம். ஆனால் அதற்கு ஒத்துக்கொள்ளாத ரஜினி, ‘நானே நடிப்பேன்’ என்று கூறியிருக்கிறார். அத்துடன் படகு ஓட்டவும் தெரியாத, நீச்சலும் தெரியாத ரஜினி ஒரு மணி நேரத்தில் படகு ஓட்டக் கற்றுக்கொண்டு அந்தக் கட்சியில் நடித்தார்.
ரஜினியின் சினிமா வாழ்க்கையில் அவரது நூறாவது படமான ‘ராகவேந்திரர்’ ஒரு மைல்கல். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மனமார பாராட்டியதோடு, மறுநாள் மதுரையிலிருந்து டிரங்கால் மூலம் உத்தரவு போட்டு படத்திற்கு வரிவிலக்கும் அளித்தார்.
ரஜினிக்கு அப்போதெல்லாம் இளநீர் அருந்துவதென்றால் மிகவும் இஷ்டம். யூனிட் ஆட்களிடம் இளநீர் வாங்கித் தரச் சொல்லுவார். ஆனால் யாரும் அவரைப் பொருட்படுத்தமாட்டார்கள். அதனால் தன்னிடமுள்ள பணத்தைக் கொடுத்து இளநீர் வாங்கி வரச் செய்து அருந்துவார். இப்படி ரஜினிக்கு இளநீர் வாங்கித் தர மறுக்கும் யூனிட்டிலுள்ளவர்களைக் கண்ட தயாரிப்பு நிர்வாகி ஒருவர் அவர்களிடம், ‘‘இப்படி அவரை நீங்க இளக்காரமா நினைக்கிறீங்க. அவர் ஒரு நாள் பெரிய நடிகராக வரப்போறாரு பாருங்க’’ என்று ஆதரவாகப் பேசியிருக்கிறார்.
‘ஜானி’ படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். இதில் கேமரா உதவியாளராக சுஹாசினி இருந்தார். அந்த நேரத்தில்தான் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’யில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டும் இருந்தார் அவர். அதில் ஒரு பகுதி முடித்துவிட்டு மீண்டும் ‘ஜானி’யில் வேலை செய்ய வந்துவிடுவார். அப்போது ரஜினி, ‘‘சுஹாசினி நடிகையாயிட்டாங்க. அவரை கனமான லைட்டுகளை தூக்கச் சொல்லாதீங்க! பார்த்து நடந்துக்குங்க’’ என்று யூனிட்டிலுள்ளவர்களிடம் மரியாதையாகச் சொல்வதுபோல் பேசி கலாட்டா செய்வாராம்.
ரஜினிகாந்த்
சொந்தமாக படம் எடுத்து அதில் நஷ்டப்பட்டு துவண்டுபோயிருந்த வி.கே.ராமசாமி உட்பட மொத்தம் தனக்கு வேண்டிய எட்டு பேர்களை, ஒரு ரூபாய் கூட வாங்காமல் பங்குதாரர்களாக சேர்த்து ஆரம்பிக்கப்பட்ட படம் தான் ‘அருணாச்சலம்’. அதில் கிடைத்த லாபத்தை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்ததோடு அதில் நடித்த வி.கே.ராமசாமிக்கு தனியாக மிகப்பெரிய சம்பளமும் கொடுத்தார் ரஜினி. வி.கே.ராமசாமி தன் எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் நிம்மதியாக கழிக்க அந்தப்பணம் ரொம்பவே உதவியது. இதனால் ரஜினியின் புகைப்படத்தை தனது பூஜை அறையில் வைத்திருந்தார் வி.கே.ராமசாமி.
ஆங்கில படம்
ரஜினி நடித்த ஒரே ஆங்கிலத் திரைப்படமான ‘பிளட்ஸ்டோன்’ திரைப்படத்துக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா தான். ரஜினி தனது திரைவாழ்வில் பாடிய ஒரே பாடலான ‘‘அடிக்குது குளிருஞ்’’ பாடலை ‘மன்னன்’ திரைப்படத்தில் பாடவைத்ததும் அவர்தான்.. ‘பணக்காரனி’ல் இடம்பெற்ற ‘‘உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி’’ பாடல்தான் ரஜினிக்காக இளையராஜா பாடிய முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவுடன் ஏற்பட்ட பிரிவுக்கு பின்னர் ரஜினி, இசையமைப்பாளர் சந்திரபோஸ் கூட்டணியில் உருவாகிய ‘மனிதன்’, ‘ராஜா சின்ன ரோஜா’ திரைப்படங்கள்தான் வைரமுத்துவுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இரண்டு திரைப்படங்களிலும் அனைத்து பாடல்களையும் வைரமுத்துவே எழுத, அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட்டானது. குறிப்பாக ‘ராஜா சின்ன ரோஜா’வில் ‘‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா’’ பாடல் ரசிகர்களின் மிகப்பெரும் அபிமானம் பெற்ற பாடலாக அமைந்தது.
ரஜினி படங்களில் ஓப்பனிங் பாடலை பாடும் ஆஸ்தான பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தமிழ் சினிமாவில் அதிக பாடல்களைப் பாடிய இந்த ஜாம்பவான்தான் ரஜினிக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார் என்பது சிறப்பு. ஒரு இசையமைப்பாளராகவும் வலம்வந்த எஸ்.பி.பிதான், ரஜினி நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியில் அமிதாப் நடித்த 12 படங்களின் தமிழ் ரீமேக்கில் நடித்திருக்கிறார் ரஜினி. அதில் மெகாஹிட் படங்களான ‘பில்லா’, ‘தீ’, ‘படிக்காதவன்’, ‘பாட்ஷா ஆகியவை இப்படி உருவானவைதான். ஆனால் ரஜினி தன் வாழ்நாள் முழுக்க ஒரு கொள்கையைக் கடைபிடித்து வந்தார். அதாவது தான் நடித்த படங்களை மொழிமாற்றம் செய்யும்போது அந்தப் படங்களுக்கு தான் குரல் கொடுப்பதில்லை என்ற பாலிஸிதான் அது.
1986-ல் வெளிவந்த ஜீவனப்போராட்டம் ரஜினி நடித்த நேரடி தெலுங்குபடம். தொழிலாளர்களைப் பற்றிய இந்தப்படத்தில் ரஜினி தொழிலாளியாக நடித்திருப்பார். இதப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்யக்கூடாது என்ற கண்டிசனோடு நடித்தார். ஆனால் தயாரிப்பு தரப்பு தமிழில் மொழிமாற்றம் செய்தது. ஆனால் ரஜினி டப்பிங் பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதோடு மொழிமாற்றம் செய்யும் படங்களுக்கு நான் குரல் கொடுப்பதில்லை என்பது எனது கொள்கை முடிவு என்று அதிகாரப்பூர்வமாகவும் அதை அறிவித்தார்.
திரைப்படக் கல்லூரியில் ரஜினி படித்துக் கொண்டிருந்தபோது அங்கே சிறப்பு வகுப்பு எடுக்கவந்த இயக்குனர் கே.பாலசந்தரிடம் கேட்ட முதல் கேள்வி, “நடிப்பைத் தவிர நடிகர்களிடம் நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்பதுதான். அதற்கு பாலசந்தர் பளிச் என்று பதில் சொன்னார், “நடிகர்கள் திரைப்படத்துக்கு வெளியே நடிக்கக்கூடாது”. என்பதை இன்றுவரை கடைப்டித்து வருகிறார். நிஜ முகப்பூச்சு இல்லாமல், மனதில் பட்டதை பேசும் அந்த குணம்தான் ரஜினியை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமரவைத்திருக்கிறது.