பிரபல நடிகரின் படத்திற்கு தடை பிறப்பித்த நீதிமன்றம்
தமிழில் ‘வாஞ்சிநாதன்’, ‘ஜனா’, ‘எல்லாம் அவன் செயல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஷாஜி கைலாஷ் தற்போது மலையாளத்தில் ‘கடுவா’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில் பிருதிவிராஜ் நாயகனாக நடிக்கிறார். கேரளாவில் உயர் போலீஸ் அதிகாரிக்கு எதிராக போராடிய ‘கடுவாகுன்னேல் குருவச்சன்’ என்பவரின் உண்மைக் கதையை மையமாக வைத்து கடுவா படம் தயாராவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடுவா படத்துக்கு எதிராக கடுவாகுன்னேல் குருவச்சன் எர்ணாகுளம் இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘எனது வாழ்க்கைக் கதையை படமாக்க ஏற்கனவே படக்குழுவினர் அனுமதி கேட்டனர். எனது கதாபாத்திரத்தில் மோகன்லால் அல்லது சுரேஷ் கோபி நடிக்க வேண்டும் என்றும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக என்னை சித்தரிக்கக் கூடாது என்றும் சில நிபந்தனைகளோடு அனுமதி அளித்தேன்.
ஆனால், அதை ஏற்காமல், என் கதையில் பிருதிவிராஜை நடிக்க வைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் எனது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இருக்கிறது. எனது கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. எனவே கடுவா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கடுவா படத்துக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு கூறினார்.