ஐரோப்பா கண்டத்தில் 10 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை ஐரோப்பா கண்டத்தில் பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. இது உலக அளவிலான பாதிப்பு எண்ணிக்கையில் 3-ல் ஒரு பங்கை விட அதிகம் ஆகும்.
சமீப காலமாக ஒமைக்ரான் உள்ளிட்ட கொரோனாவின் புதிய உருமாற்றங்களால், ஐரோப்பா கண்டம் தொற்று நோயின் மையமாக மாறியுள்ளது. அட்லாண்டிக் கடற்கரையில் இருந்து அஜர்பைஜான் மற்றும் ரஷ்யா வரையிலான 52 நாடுகள் மற்றும் பிரதேசங்களை உள்ளடக்கிய இந்த கண்டத்தில் 2 ஆண்டுகளில் 10 கோடியே 753 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
உலக அளவில் பதிவான 28 கோடியே 82 லட்சத்து 79 ஆயிரத்து 803 பாதிப்புகளில் இது 3-ல் ஒரு பங்கை விட அதிகமாகும். கடந்த 7 நாட்களில் மட்டும் 49 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவான நிலையில், மொத்தமுள்ள 52 நாடுகளில் ஒரே வாரத்தில் 17 நாடுகளில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் மட்டும் ஒரு வாரத்தில் 10 லட்சம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஐரோப்பா கண்டத்தில் தினசரி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3,413 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் அதிகபட்ச தின்சரி உயிரிழப்பு எண்ணிக்கை 5,735 ஆக இருந்தது.
ஐரோப்பா கண்டத்தில் 65 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 61 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.