கே.ஜி.எஃப் 2 உடன் மோதலை தவிர்க்க அமீர்கானின் ‘லால் சிங் சத்தா‘ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்
பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்ஸ் நடிப்பில், 1994-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் ‘தி ஃபாரஸ்ட் கம்ப்’. ஆஸ்கர் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை அள்ளிய இந்தத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தான் ‘லால் சிங் சத்தா'. இந்தப் படத்தில் கதாநாயகனாக அமீர்கானும், அவருக்கு ஜோடியாக கரீனா கபூரும் நடித்துள்ளனர். அமீர்கானின் நண்பராக, ராணுவ வீரராக நாக சைதன்யா நடித்துள்ளார்.
படம் துவங்கப்பட்டபோது, 2020-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டநிலையில், ‘லால் சிங் சத்தா' படம், கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் வெளியாகாத நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதிக்கு வெளியாகும் என மீண்டும் தேதி மாற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது, வரும் ஏப்ரல் 14-ம் தேதி படம் வெளியாகாது என்றும், ஆகஸ்ட் 11-ம் தேதி 'லால் சிங் சத்தா' படம் வெளியாகும் என்றும் அமீர்கான் அதிகாரப்பூர்வமாக தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். ஏப்ரல் 14-ம் தேதி நடிகர் யாஷின் பிரம்மாண்ட படமான 'கே.ஜி.எஃப். 2' வெளியாகும் சூழலில் ‘லால் சிங் சத்தா’ வெளியாகவில்லை என தெரிகிறது.
அதேபோல் நடிகர் விஜயின் 'பீஸ்ட்' படம் ஏப்ரல் 14 அல்லது 28-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனாலும் இந்த படம் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது. சமீபகாலமாக தென்னிந்திய படங்கள், பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் செய்து வருவதால், ‘லால் சிங் சத்தா‘ தள்ளி வைக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குறிப்பாக அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம், பாலிவுட்டில் 50 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதால், அமீர்கானின் ‘லால் சிங் சத்தா‘ ஒத்திவைக்கப்படுவதாக தெரிகிறது. ஏப்ரல் 14-ம் தேதிக்குள் 'லால் சிங் சத்தா' படத்தை முழுமையாக நிறைவு செய்ய முடியாது சூழல் உள்ளதால், படத்தை திட்டமிட்டப்படி வெளியிட முடியவில்லை என அமீர்கான் விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும், தனது அறிவிப்பில் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகவிருந்த நடிகர் பிரபாஸின் 'ஆதிபுருஷ்' திரைப்படம் 'லால் சிங் சத்தா' படத்திற்காக வழிவிட்டு, வேறு ஒரு தேதியில் வெளியாக உள்ளதையும் அமீர்கான் குறிப்பிட்டுள்ளார். 'ஆதிபுருஷ்' படக்குழு மற்றும் நாயகன் பிரபாஸுக்கும் தனது நன்றியை அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இதனால் ‘ஆதிபுருஷ்‘ படத்தின் வேறொரு ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது. எனினும், ஷாகித் கபூரின் ‘ஜெர்ஸி‘ குறிப்பிட்டப்படி ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது.