வானொலி நாடகக் கலையில் மகுடம் சூடிய மானிப்பாய் குணபதி கந்தசாமி
யாழ்ப்பாணம் மானிப்பாயில் கலைத்துறையில் கால் பதித்து, திருகோணமலையில் மேன்மைபெற்று, கொழும்பில் கொடிகட்டிப் பறந்த கலைஞர், தற்பொழுது சுவிற்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வரும் குணபதி கந்தசாமி அவர்கள் இன்றைய கலையரங்கத்தில் மாண்பேற்றம் பெறுகின்றார்.
ஒருவர் கலைத்துறையில் ஈடுபட்டு கலைக்காகத் தன்னை அர்ப்பணிக்க முற்பட்டு விட்டால் அவர்களின் முதுமையிலும் இளமை கொலுவியிருக்கும்.
வயதாகிவிட்டதே என்று என்றுமே கவலையடையாத ஒருவர், இப்பொழுதும் இளைஞன் போலவே நாடுகள் ஒவ்வொன்றுக்கும் பயணித்து வரும் கலைஞர்.
குணபதி கந்தசாமி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன். இந்த மானிப்பாய் இந்துக்கல்லூரி நம்நாட்டில் பல கலைஞர்களை உருவாக்கிய பெருமைக்குரியது. கலைஞர் ஏ.ரகுநாதன், எஸ்.அருமைநாயகம்,கே.எம்.வாசகர்,அப்புக்குட்டி ரி.ராஜகோபால் எனப் பல கலைஞர்கள் வரிசையில் குணபதி கந்தசாமி அவர்களும் உள்ளடங்கிவிடுகிறார்.
இவர் ஒரு முழுமையான கலைஞனாக மிளிர்ந்தது திருகோணமலையில். பாடசாலைக் கல்வியின் பின்னர் துறைமுக உத்தியோகம் காரணமாக திருகோணமலையில் வாழ்ந்துவந்தார். அப்பொழுது திருகோணமலையில் நாடகக் கலை வளர்ச்சியில் பெரிதும் பங்களிப்புச் செய்து வந்த தட்சணாமூர்த்தி அவர்கள் ‘சோக்ரடீஸ்’ நாடகத்தில் வில்லன் பத்திரத்தில் நடிக்கத் தேர்வாகியிருந்தார். ஒத்திகைகள் பார்க்கப்பட்டு நாடகம் மேடையேற்றம் காண்பதற்கு ஒரு வாரம் இருக்கும் சந்தர்ப்பத்தில் நாடக இயக்குநர் தட்சணாமூர்த்தி இவரை நாடி “நீர் தான் சோக்ரடீசாக நடிக்க வேண்டும்” என்றார்.
தயக்கம் காட்டாமல் அதனை ஒரு சவாலாகவே ஏற்று நடித்து புகழீட்டினார். 20 வயதில் நாடகத்தில் நடித்து நடிகரான இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. திருமதி.பிள்ளை போன்றவர்கள் நேரடியாகவே பாராட்டிய ஒரு கலைஞராக வலம் வந்தார்.
தட்சணாமூர்த்திஅவர்களின் ‘மனம் தந்த பரிசு’ நாடகத்திலும் நடித்து புகழ் பெற்றார். ஜோன்பிள்ளை அவர்களின் நாடகங்களிலும் நடித்து வந்தார். அப்பொழுது கே.கே.மதிவதனன் அவர்களின் நட்பு இவருக்குக் கிடைக்கப் பெற்றது. கே.கே.மதிவதனனின் நாமகள் நாடக மன்றத்தில் இணைந்து நாடகங்களில் பங்களிப்புச் செய்துவந்தார்.
உத்தியோகம் காரணமாக கொழும்புக்கு மாற்றலாகினார். அப்பொழுது இலங்கை வானொலி வர்த்தக சேவையில் ‘புறோக்கர் கந்தையா’ நாடகம் ஒலிபரப்பாகி வந்தது. யாரைக் சந்தித்தாலும் ‘புறோக்கர் கந்தையா’ பற்றியே பேசிவந்தார்கள். அந்தளவுக்கு அந்த நாடகம் வானொலி நேயர்களைக் கவர்ந்திருந்தது.
வானொலி நாடகக்கலைஞர் எஸ்.எஸ்.கணேசபிள்ளை அவர்களும் வானொலியில் நாடகங்கள் நடித்துவந்தார். அவரது நாடகங்களுக்கு நடிகர்களைத் தேடி வந்தார். கே.கே.மதிவதனன் அவர்கள் குணபதி கந்தசாமி அவர்களை எஸ்.எஸ்.கணேசபிள்ளை அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். குணபதி கந்தசாமியின் கொழும்பு இல்லத்தில் சந்திப்பு நல்லபடியாகவே நடைபெற்று நட்பும் கலை உறவும் வளர்ந்தது.
மதிவதனனின் ‘பித்தலாட்டம்’ நாடகத்தின் மூலமே குணபதி கந்தசாமி கொழும்பு அரங்கத்தைச் சந்தித்தார். முதன் முதலில் இவருடன் ஜோடியாக நடித்தவர் ஜெயந்தி அப்பாக்குட்டி அவர்கள்.
நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பு அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப்பெற்றது.
வானொலி நாடகங்களில் நடிப்பதற்கான அழைப்பும்,வரவேற்பும் இந்த நாடகத்தின் மூலம் குணபதி கந்தசாமி அவர்களுக்குக் கிடைத்தது. இலங்கை வானொலி நிலைய நாடகக் கலைஞர் தேர்வில் குணபதி கந்தசாமி தேர்வானார்.
இதனை அடுத்து எஸ்.எஸ்.கணேசபிள்ளையின் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதன் மூலம் வானொலிக்கலைஞராகப் புகழீட்டினார். ‘சண்டியன் சின்னத்தம்பி’ ‘புளுகர் பொன்னம்பலம்’ ‘ஆசை மச்சான்’ ‘அசட்டை மாப்பிள்ளை’ ‘நம்பிக்கை’ எனப் பல நாடகங்கள்.
வாரம் தோறும் வானொலியில் ஒலிபரப்பாகும் நாடகங்களில் ஏதோ ஒரு நாடகத்தில் குணபதி கந்தசாமி நடித்து வந்தார். இதே நாடகங்கள் மேடையேற்றங்களையும் கண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வானொலி நாடக ஆசிரியரான எஸ்.எஸ்.கணேசபிள்ளை அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு கலைஞராக குணபதி கந்தசாமி விளங்கியதால் அவரது எல்லா நாடகங்களிலும் குணபதி கந்தசாமி பங்குபற்றி வந்தார்.
‘வரணியூரான்’எஸ்எஸ்.கணேசபிள்ளை, ‘முகத்தார்’ எஸ்.ஜேசுரட்ணம், ‘அண்ண றைற்’ கே.எஸ்பாலச்சந்திரன், ‘மரிக்கார்’ ராம்தாஸ், ‘அப்புக்குட்டி’ ராஜகோபால், ‘உபாலி’ எஸ்.செல்வசேகரன், கே.சந்திரசேகரன் போன்ற கலைஞர்கள் வரிசையில் குணபதி கந்தசாமி அவர்களும் வானொலி மேடைக் கலைஞராகப் புகழ் பெற்று வலம் வந்தார்.
கலைஞர்ஏ.ரகுநாதன் முதன் முதலில் ‘கடமையின் எல்லை’ திரைப்பட்தில் நடித்திருந்தார். இதனைப் பார்த்த குணபதி கந்தசாமி மானிப்பாய்க்குப் புகழ் சேர்க்கும் ரகுநாதன் போன்று தானும் ஒரு திரப்பட நடிகனாக வேண்டும் என ஆசைப்பட்டார்.
அதற்கான முயற்சியை அவரை நாடியே பெற்றுக்கொள்ளமுயன்றார். “ரகுநாதன் நிர்மலா என்று ஒரு படம் தயாரிக்கிறார். நடிகர்கள் தேர்வு செய்கிறார்கள் வாரும் முயற்சித்துப்பாரும்’ என்று ரகுநாதனிடம் அப்பொழுது அழைத்துச் சென்றவர் நிர்மலா திரைப்படத்தின் இசையமைப்பாளர் திருமலை பத்மநாதன்.
கற்பனைகள் பலவற்றுடன் நடிகர் தேர்வுக்குச் சென்றிருந்த பொழுதிலும் அப்பொழுது இவரது மெல்லிய உடல்வாகு நிர்மலா திரைப்படத்தில் நடிக்கும் வாயப்பை இழக்கச் செய்து விட்டது.
ஆனால், அதற்காக கலைஞர் ரகுநாதன் மீது இவர் கோபம் கொண்டிருக் கவில்லை. ரகுநாதன் மீது மிக உயர்ந்த மரியாதை கொண்டிருந்தார். ரகுநாதன் நோய்வாய்ப்பட்டு இருந்த காலகட்டத்தில் அவருடன் சுவிற்சர்லாந்திலிருந்து மணிக்கணக்காக கலை விடயங்கள் தொடர்பாகப் பேசிக்கொள்பவர்களில் குணபதி கந்தசாமி குறிப்பிடத்தக்க ஒருவர்.
கலைஞர் ரகுநாதன் சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற விருதுபெறும் விழா ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். சக்கர நாற்காலியில் மண்டபத்துக்குச் சென்ற வேளை ரகுநாதனைப் பார்த்து கவலையடைந்தவர் விழா முடியும் வரை ரகுநாதன் அருகிலேயே இருந்தார்.
நிர்மலா திரைப்படத்தில் கிடைக்காத வாய்ப்பு வேறு படத்தில் கிடைத்தது. இயக்குநர் நீர்கொழும்பு முத்துலிங்கத்தின் ‘ஏழு வீரர்கள்’ என்ற திரைப்படத்தில் வில்லன் பாத்திரம். தேவன் அழகக்கோனின் ஒரு திரைப்படம். முதன் முதலில் இதற்குத் தான் ஒப்பனை செய்து கொண்டார்.
அடுத்து ‘சுமதி எங்கே’ என்ற திரைப்படம். முதல் இரண்டும் தயாரிப்பு நின்று போயின. ‘சுமதி எங்கே’ திரைப்படத்தில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆயினும் திரைப்பட ஆசையை குணபதி கந்தசாமி நிறுத்திக்கொள்ளவில்லை. தேடிவந்தது வாய்ப்பு, இவர்பக்கம் வீசியது வாடைக்காற்று.