உக்ரைன் - ரஷ்யா போரின் எதிரொலி - பிரித்தானியாவில் ஏற்பட்ட விலையேற்றத்தால் திண்டாடும் மக்கள்
உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலியால் பிரித்தானியாவில் எரிபொருள் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலக எண்ணெய் விலையில் புதிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பிரித்தானியாவில் புதன்கிழமை பதிவாகிய உச்சக்கட்ட எரிபொருள் விலை உயர்வால் மக்களுக்கு பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. சாதாரண வருமானம் பெறும் ஒவ்வொருவருக்கும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 1 பவுண்ட் 56 பென்சிற்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 1 பவுண்ட் 78 பென்ஸ் வரை உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் 1 பவுண்ட் 72 பென்சிற்கு விற்பனை செய்யப்பட்ட டீசல், நேற்று 1 பவுண்ட் 99 பென்ஸ் வரை விலை உயர்ந்துள்ளது.
55 லிட்டர் பெட்ரோல் நிரப்ப கூடிய ஒரு காரின் தொட்டி நிரப்ப தற்போது 90 பவுண்டு செலவாகுவதாக தெரியவந்துள்ளது.
இது இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இருந்ததை விட 7 பவுண்டு அதிகமாகும் என RAC நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சைமன் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
டீசல் காரின் தொட்டியை நிறப்ப 90 பவுண்டிற்க்கு மேல் ஆகும், இது ஜனவரி தொடக்கத்தில் இருந்ததை விட 8 பவுண்ட் அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தவிற்பனை எரிபொருள் விலை ஏற்கனவே இந்த வாரம் எதிர்பாராத அளவில் உயர்ந்துள்ளது, எனவே வரும் நாட்களில் மேலும் பம்ப் விலை உயர்வு தவிர்க்க முடியாதது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மட்டுமன்றி பிரித்தானியாவில் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
அத்தோடு எரிபொருள், மின்சக்தி விலையும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதோடு, பேருந்துக் கட்டணங்களும், புகையிரத கட்டணங்களும் எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்ககூடும் என மக்கள் திணறுகின்றனர்.