தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -67

#history #Article #Tamil People
தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -67

தமிழர் நாகரிகம் சோழ அரசர்களால் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. தென்னிந்தியா முழுவதும் ஒரே ஆட்சிக்கு உட்பட்டுச் சுமார் முந்நூறு வருஷகாலம் ஒரே ராஜ்யமாக ஆளப்பட்டு வந்தது. நாடெங்கும் அமைதி நிலவியது. சிறியவும் பெரியவும் ஆன கற்கோயில்கள் கட்டப்பட்டன.

அழகு வாய்ந்த சிற்பங்கள் அநேகம் கல்லில் செதுக்கப்பட்டன; வெண்கலத்திலும் வார்க்கப்பட்டன. நல்ல ஒவியங்கள் பல வரையப்பட்டன. கைத்தொழில்களும் வியாபாரமும் செழித்து வளர்ந்தன. ஜயங்கொண்டார், சேக்கிழார், கம்பர், ஒட்டக் கூத்தர் முதலிய பெரும் புலவர்கள் பலர் இனிய நூல்களை இயற்றித் தமிழைப் பெருக்கினார்கள்.

இம்மாதிரியான பல காரணங்கள் பற்றிச் சோழ அரசர்களின் மேன்மையும் பெருமையும் இந்தியா முழுவதுமின்றி, ஆசியாக்கண்ட முற்றிலுமே எல்லாரும் போற்றும்படி விளங்கின.

சோழர் வரலாறு - சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள்

சங்க காலம்

இப்பொழுது ‘சங்க நூல்கள்’ என்று கூறப் பெறும் எட்டுத் தொகை , பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என்பனவும், சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காப்பியங்களும் சங்ககாலச் சோழர் வரலாறுகளை அறியப் பெருந்துணை புரிவன ஆகும்.

‘பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், களவழி போன்ற சிலவே சங்க காலத்தைச் சேர்ந்தவை, ஏனையவை பிற்பட்ட காலத்தவை - சமணர் சங்கத்தில் ‘இயற்றப் பட்டவை’ என்று ஆராய்ச்சி அறிஞர் தெளிவுறக் கூறலாம். பதினெண் கீழ்க்கணக்கில் ‘இனியவை நாற்பது’ போன்றவை பிற்கால நூல்கள் என்று கோடலில் தவறில்லை.

புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பனவே சங்காலச் சோழர் வரலாற்றுக்குப் பேருதவி புரிவன எனலாம். இவ்வுண்மையை அடுத்த பிரிவிற் காணலாம். இவற்றுடன் பிளைநி, தாலமி, பெரிப்ளுஸ் ஆசிரியர் முதலியோர் எழுதியுள்ள ‘செலவு நூல்கள்’ பயன்படுவன ஆகும்.

இடைப்பட்ட காலம்

சங்கத்து இறுதியாகிய (சுமார்) கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்குப் பின் ஆதித்த சோழன் பல்லவரை வென்ற சோழப் பேரரசு ஏற்படுத்திய 9-ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதிவரை ஏறத்தாழ 500 ஆண்டுகள் சோழரைப் பற்றியும் சோழ நாட்டைப் பற்றியும் அறிந்து கொள்ளப் பேருதவி செய்வன சிலவே ஆகும்.

அவை (1) பல்லவர் பட்டயங்கள், (2) அக்காலப் பாலி - வடமொழி - தமிழ் நூல்கள், (3) பாண்டியர் பட்டயங்கள், (4) சாளுக்கியர், கங்கர், இராட்டிரகூடர் பட்டயங்கள் முதலியன ஆகும். இவற்றுடன் தலைசிறந்தன தேவாரத் திருமுறைகள் ஆகும். இவற்றை உள்ளடக்கிப் பல கல்வெட்டுகளையும் (இக்காலத்தில் நமக்குக் கிட்டாத) பிற சான்றுகளையும் கொண்டு எழுதப் பெற்ற சேக்கிழார் - பெரிய புராணம் என்னும் ஒப்புயர்வற்ற நூலும் சிறந்ததாகும். ஆழ்வார்கள் பாடியருளிய நாலாயிரப் பிரபந்தமும் திவ்யசூரி சரிதம் முதலியனவும் ஒரளவு உறுதுணை புரியும்.

பிற்பட்ட சோழ – கல்வெட்டுகள்

விஜயாலய சோழன் முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை இருந்த சோழர் வரலாறு அறிய ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பெருந்துணை புரிகின்றன. இவற்றுள் சிறந்தவை இராசராசன் காலமுதல் தோன்றிய கல்வெட்டுகளும் செப்பேடுகளுமே ஆகும். இவை அரசர் போர்ச் செயல்களையும் பிறவற்றையும் முன்னர்க் கூறி அவரது ஆட்சி ஆண்டைப் பிற்கூறிக் கல்வெட்டு அல்லது செப்பேடு தோன்றியதன் நோக்கத்தை இறுதியிற்கூறி முடிக்கும் முறையில் அமைந்துள்ளன.

இவற்றால், குறிப்பிட்ட அரசனது நாட்டு விரிவு, போர்ச் செயல்கள், குடும்ப நிலை, அரசியற் செய்திகள், அறச்செயல்கள், சமயத் தொடர்பான செயல்கள், அரசியல் அலுவலாளர் முதலியோர் பெயர்கள் இன்ன பிறவும் அறிய வசதி ஏற்பட்டுள்ளது. பொதுவாகக் கல்வெட்டுகள். பல்லவர் கால முதலே சமயத் தொடர்பாக உண்டானவையே ஆகும்; கோவில், மடம், மறையவர் தொடர்பாகத் தானம் செய்தல் என்பவற்றைக் குறிக்கத் தோன்றியவை ஆகும்.

கோவில்களைப் புதியனவாகக் கட்டுதல், பழையவற்றைப் புதுப்பித்தல், கோவில் திருப்பணிகள் செய்தல் முதலிய நற்பணிகளைக் குறிக்க வந்த அவற்றில், “இன்னின்ன இடங்களில் இன்னவரை வென்ற இன்ன அரசன் பட்டம் பெற்ற இன்ன ஆண்டில்”. என்று விளக்கமாக வரும் முதற் பகுதியே வரலாற்றுக்குப் பெருந்துணை செய்வதாகும். சில கல்வெட்டுகள் அரசியல் தொடர்பாக எழுந்துள்ளன. அவை என்றுமே நிலைத்திருக்கத் தக்கவை. அவை வரிவிதித்தல், நிலவரி, தொழில்வரி, ஊரவைகளின் முடிவுகள், தொழில் முறைகள், அரசியல் முறைகள் இன்ன பிறவும் விளக்குவனவாகும்.பல கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் ஊர் மக்களுடைய நிலம் விற்றல், வீடு விற்றல், மனை விற்றல், வாங்கல் முதலிய செய்திகளையும் குறிக்கின்றன.

சில கோவில் சுவர்களில் தேவார நூல்களில் காணப்பெறாத சம்பந்தர் முதலியோர் பாக்கள் வெட்டப்பட்டுள்ளன. இங்ஙனம் இக்கல் வெட்டுகள் வரலாற்றுக்குப் பல துறைகளிலும் பேருதவி புரிதல் காணலாம்.இவையே அன்றி, இக்கல்வெட்டுகளால் அக்கால வடமொழி-தமிழ் இவற்றின் வளர்ச்சி-நடை மாறுபாடு முதலியவற்றையும் அறியலாம். வட்டெழுத்து, பல்லவ-கிரந்த எழுத்து, சோழர் காலத் தமிழ் எழுத்து ஆகிய இம்மூன்று தமிழ் எழுத்துகளையும் இக் கல்வெட்டுகளால் நன்குணர்தல் கூடும்.

கோவில்கள்

தமிழ் நாட்டில் வியத்தகு முறையில் கற்கோவில்கள் பலவற்றை அமைத்த பெருமை சோழர்க்கே உரியது. கயிலாசநாதர் கோவில், பரமேசுவர வர்மன் கட்டிய கூரத்துச் சிவன் கோயில் முதலியவற்றைக் கண்ணுற்ற பிற்காலச் சோழர் வானளாவிய விமானங்கொண்ட கோவில்களைக் கட்டினர். இக்கற்கோவில் சுவர்களிலும் தூண்களிலும் தரையிலும் ஏராளமான கல்வெட்டுகள் வெட்டப்பட்டன.

கல்வெட்டுள்ள கோவில்கள் புதுப்பிக்கப் படுங்கால், அக்கல்வெட்டுகளைப் பிரதி செய்துகொண்டு புதிதாக அமைந்த கோவிலில் பொறித்தல் அக்கால மரபாக இருந்தது. சுதை, செங்கல் முதலியவற்றால் ஆகிய கோவில்களிலும் கல்வெட்டுகள் இருந்தன. கோவில்களில் உள்ள பலவகைச் சிற்பங்களைக் கொண்டு சோழர் சிற்பக் கலை உணர்வை அறியலாம்[1]. ஒவியங்களைக்[2] கொண்டு, சோழர்கால ஓவியக்கலை வளர்ச்சியை அறியலாம்; மக்களுடைய நடை, உடை, பாவனை, அணிகள் முதலியன அறியலாம்.

கோவில் கட்டட அமைப்பைக் கூர்ந்து நோக்கிப் பல்லவர் காலக் கட்டடக் கலை சோழர் காலத்தில் எங்ஙனம் தொடர்புற்று வளர்ந்து வந்தது என்பதை உணரலாம். எண்ணிறந்த பாடல்பெற்ற கோவில்கள் சோழர்களால் கற்கோவில்களாக மாற்றப்பட்டன. பெருஞ்சிறப்பும் பெற்றன, இக்கோவில்களை முற்றப் பரிசோதித்துச் சோழர்காலச் சிற்ப-ஒவிய-கட்டடக் கலைகளின் வளர்ச்சியைச் சிறந்த முறையில் ஆராய்ந்து நூல் எழுதினோர் எவரும் இல்லை என்பது வருந்தத்தக்க செய்தியாகும். சுருங்கக்கூறின், இன்று சோழர் வரலாற்றை உள்ளவாறு உணரப் பேருதவி செய்வன - வரலாற்றுக்கு மூலமாக அமைந்துள்ளன - கோவில்களே ஆகும்.

சோழர் காசுகள்

சோழர், பல்லவர்களைப் போலவே, பொன், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் ஆன காசுகளை வெளியிட்டனர். அவற்றுள் பல இப்பொழுது கிடைத்துள்ளன. பொற் காசுகள் சிலவே, வெள்ளிக் காசுகள் சில: செப்புக் காசுகள் பல. செப்புக் காசுகள் பல வடிவங்களிற் கிடைத்துள்ளன. எல்லாக் காசுகளும் சோழர் அடையாளமான புலி பதியப் பெற்றவை;

புலிக்கருகில் சேர, பாண்டியர் குறிகளான வில்லும் கயலும் கொண்டவை. இவற்றைச் சுற்றிலும் இவற்றை வெளியிட்ட அரசன் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. சில காசுகளில் இவையே பின்புறத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. வேறு சில காசுகள் ‘ஈழக்காசு’ எனப்படுவன. அவற்றில் ஒரு முரட்டு மனிதன் ஒரு பக்கத்தில் நிற்பது போலவும் மற்றொரு பக்கத்தில் இருப்பது போலவும் காணப்படுகிறான். கல்வெட்டுகளையும் காசுகளில் உள்ள எழுத்துகளையும் கொண்டு இக்காசுகள் இன்ன அரசன் காலத்தவை என உறுதிப்படுத்தலாம்.

ஈழக்காசு என்பன இராசராசன் காலம் முதல் முதற் குலோத்துங்கன் காலம் வரை வழக்கில் இருந்தமை கல்வெட்டுகளால் தெரிகிறது. சோழர் ஈழநாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட போது ஈழக்காசை வெளியிட்டனர் என்பது இதனால் அறியக்கிடக்கிறது அன்றோ?
இலக்கியம்

மேல்நாட்டு இலக்கியங்கட்கும் நம்நாட்டு இலக்கியங்கட்கும் சிறந்த வேறுபாடு உண்டு. மேல்நாட்டு இலக்கியம் சமயச் சார்புடையதாக இராது. அதனால் அது வரலாற்றுக்குப் பெருந்துணை செய்கிறது. ஆனால்

இந்திய நாட்டின் வரலாறு சமயக் கடலுள் ஆழ்ந்து புனைந்துரைக்கப்பட்ட பல கதைகளில் மறைப்புண்டு கிடக்கிறது கொடுமையாகும். இதனால், ‘இலக்கியங்களை நம்பி வரலாற்றுக் கட்டடம் அப்படியே கட்டலாகாது[3] என்ற சாத்திரீய முறையில் ஆராய்ச்சி நடத்தும் அறிஞர் அறைந்துள்ளனர். இராமாயணம், பாரதம் போன்ற வடமொழிப் பெருநூல்கள் பலமுறை பல மாறுதல்கள் அடைந்துள்ளன என்பதை அறிஞர்கள் நன்கு காட்டி விளக்கியுள்ளனர். ஆதலின், தமிழில் உள்ள திருவிளையாடல் புராண நூல்கள், பரணி, உலா, பெரிய புராணம் முதலிய்வற்றில் வரலாற்று முறைக்கு ஏற்பனவற்றையே கோடல் ஆராய்ச்சியாளர் கடனாகும்.

பிற்காலச் சோழர் காலமே தென்னாட்டில் இலக்கிய இலக்கண நூல்கள் பெருகிய காலம் ஆகும். சைவத் திரு முறைகளை வகுத்த நம்பியாண்டார் நம்பி இக்காலத்திற்றான் வாழ்ந்தவராவர். ஒன்பதாம் திருமுறையைப் பாடிய அடியார் பலர் வாழ்ந்த காலமும் இதுவே.

பன்னிரண்டாம் திருமுறை ஆகிய திருத்தொண்டர் புராணம் என்னும் வரலாற்றுச் சிறப்புடைப் பெரு நூல் இக்காலத்தேதான் எழுதப்பட்டது. ‘சேக்கிழார் தம் மனம் போனவாறு நம்பிகள் அந்தாதியில் இல்லாதவற்றையும் சேர்த்து விரித்து நூல் செய்துள்ளார். அவர் கூறும் நாட்டு நிலை அவர் காலத்ததே என்று வரலாற்றாசிரியர் சிலர் வரைந்துள்ளனர்.

தென்னாட்டு வரலாறு சம்பந்தப்பட்டவரை, சேக்கிழார் பெருமான் பெரும்பான்மை பிழைபடாது எழுதியுள்ளார் என்பதை பெரிய புராணத்தை அழுத்தமாகப் படித்தவரும் பல்லவர் முதலிய பல மரபு அரசர் தம் கல்வெட்டுகளை நுட்பமாக ஆய்ந்தவரும் நன்கு அறிதல் கூடும். சேக்கிழார், தாம் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்பதை அறவே மறந்தவராய் - அவ்வந் நாயன்மார் காலத்தவராக இருந்து நாட்டு நடப்பும் பிறவும் நன்கறிந்தவராய்ப் பாடியுள்ள முறையை வேறு எந்தத் தமிழ் நூலிலும் காண இயலாதே! சேக்கிழார் பெருமான் புராணம் பாட வந்த பிற்கால ஆசிரியர் போன்றவர் அல்லர்.

அவர் சிறந்த புலவர், சோழர் பேரரசின் முதல் அமைச்சர்; சிறந்த சிவனடியார்; தமிழகம் முழுவதையும் நன்கு அறிந்தவர்; தொண்டை நாட்டினர்; பல்லவ அரசர் கல்வெட்டுகளையும் சோழர் கல்வெட்டுகளையும் இக்காலத்தில் நமக்குக் கிடைக்காத பல நூல்களையும் செப்புப் பட்டயங்களையும் கல்வெட்டுகளையும் நன்கு படித்தவர் என்பன போன்ற பல செய்திகள் அவர் தம் புராணத்துள் காணப்படுகின்றன.

வரலாற்றாசிரியர் ‘இருண்ட காலம்’ என்று கூறி வருந்தும் காலத்தைப் பற்றிய பல உண்மைச் செய்திகளைத் தம் காலத்திருந்த மூலங்களைக் கொண்டு சேக்கிழார் குறித்துச் செல்லலை வரலாற்றுப் பண்புடைய உள்ளத்தினர் நன்குணர்தல் கூடும். ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் இன்னும் வெளி வராத இக்காலத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகளைக் கொண்டு பார்ப்பினும், ‘சேக்கிழார் சிறந்த கல்வெட்டுப் புலவர்-வரலாற்றுக்கு மாறாக நூல் செய்யாத மாபெரும் புலவர்.அவருக்கிணையாக இத்துறையில் தமிழ்ப் புலவர் எவரும் இலர்.

ஆதலின், அவரது நூலைச்[4] சான்றாகக் கொள்ளலாம்’ எனத் துணிந்து கோடலில் தவறுண்டாகாது.
கம்பராமாயணம் தமிழின் வளமையை வளமுறக் காட்டுக் பெருங்காப்பியமாகும். ஒட்டக் கூத்தர் பாடிய மூவர் உலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப் பரணி என்பன சோழ அரசர் மூவரைப் பற்றியவை. அவை வரலாற்றுக்குத் துணை செய்வன ஆகும். சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி வரலாற்றுச் சிறப்புடையது. கலிங்கப் படையெடுப்பு, சோழர் பரம்பரை, குலோத்துங்கன் சிறப்பு, அவனது தானைத் தலைவனான கருணாகரத் தொண்டைமான் சிறப்பு இன்ன பிறவும் இனிதறிய இந்நூல் உதவி செய்கிறது.

வைணவ நூல்களான திவ்ய சூரி சரிதம், குருபரம்பரை என்பன எழுதப்பட்ட காலமும் சோழர் காலமே ஆகும். இவை இராமாநுசர் காலத்தை உறுதிப் படுத்தவும் அக்காலத் தமிழ்நடை, வைணவ சமயநிலை முதலியவற்றை அறியவும் உதவுகின்றன. ஆழ்வார் பாசுரங்கட்கு விரிவுரை வரைந்த காலமும் ஏறக்குறைய இதுவே ஆகும். புத்தமித்திரர் என்பவர் செய்த வீரசோழியம் வீர ராசேந்திரன் காலத்ததே ஆகும். யாப்பருங்கலக் காரிகை, விருத்தி என்பனவும் இக்காலத்தேதான் செய்யப்பட்டன. சைவ சித்தாந்த சாத்திரங்களிற் பல இக்காலத்தேதான் செய்யப்பட்டன.

வெளிச் சான்றுகள்

சாசனங்கள்: சோழர் காலத்தில் சோழப் பெரு நாட்டைச் சூழ இருந்தாண்ட மேலைச் சாளுக்கியர், கீழைச் சாளுக்கியர், இராட்டிரகூடர், கங்கர் முதலிய பலதிறப்பட்டோர் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் சோழர் வரலாற்றையும் காலங்களையும் அறிய ஒரளவு துணை புரிகின்றன. சோழர்க்கு அடங்கிச் சிற்றரசராக இருந்து ஆண்டவர் பட்டயங்களும் வேண்டற் பாலனவே ஆகும்.

வெளிநாட்டார் குறிப்புகள் : சீனர் சிலர் எழுதி வைத்துள்ள செலவு (யாத்திரை)க் குறிப்புகள், அராபியர் குறித்துள்ள செலவுக் குறிப்புகள், மார்க்கோபோலோ போன்றோர் எழுதியுள்ள குறிப்புகள், மகாவம்சம் முதலியன இக்காலத் தமிழக நிலைமையை நன்கு விளக்குவனவாகும்.

சோழர் வரலாற்று நூல்கள்

இதுகாறும் கூறிய பலவகைச் சான்றுகளின் துணையைக் கொண்டு வரலாற்றுத் துறையிற் புகழ் பெற்ற பேராசிரியர் K.A. நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் விரிவான முறையில் சோழர் வரலாற்றை வரைந்து அழியாப் புகழ்பெற்றுள்ளனர். இவர்க்கு முன்னமே நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் (சங்ககாலச்) ‘சோழர் சரித்திரம்’ என்றொரு நூலை வரைந்துளர்,

அறிஞர் பலர் பல வெளியீடுகளில் சோழர்களைப் பற்றிப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரைந்துள்ளனர். பண்டித உலக நாத பிள்ளை அவர்கள் கரிகாலன், இராசராசன்வரலாறுகளைத் தனித்தனி நூல்களாக வெளியிட்டுளர். பி.நா. சுப்பிரமணியன் என்பவர் இராசேந்திரன் வரலாற்றைத் தனி நூலாக வரைந்துள்ளார். பண்டிதர் சதாசிவப் பண்டாரத்தாரும் L. சீனிவாசன் என்பவரும் முதற் குலோத்துங்கன் வரலாற்றைத் தனி நூலாக எழுதியுள்ளனர். வரலாற்று ஆசிரியர் திருவாளர் இராமசந்திர தீக்‌ஷிதர் அவர்கள் மூன்றாம் குலோத்துங்கன்வரலாற்றைத் தனி நூலாக வெளியிட்டனர். இந்நூல் ஆசிரியர் இரண்டாம் குலோத்துங்கன் வரலாற்றைத் தனி நூலாக வரைந்துள்ளனர்.

திருவாளர் கோட்டாறு - சிவராஜப் பிள்ளை அவர்கள் ‘பண்டைத் தமிழ்க் கால நிலை’ என்னும் அரிய ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் வெளிப்படுத்தி உள்ளனர். திருவாளர் J.M. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் ‘சோழர் கோவிற் பணிகள்’, ‘தஞ்சைப் பெரிய கோவில்’ என்னும் ஆராய்ச்சி நூல்கள் இரண்டை வரைந்துள்ளனர்.

‘ஆராய்ச்சி’ என்பது முடிவற்றது; நாளும் வளர்ந்து வருவது. ஆதலின், மேற்கண்ட நூல்கள் வெளிவந்த பிறகு சில வரலாற்றுச் செய்திகள் புதியனவாக அறிஞரால் வெளியிடப் பெறுதல் இயல்பே அன்றோ? அங்ஙனம் இன்றளவும் வெளிவந்துள்ள குறிப்புகளும் பிறவும் வரலாற்று முறைக்கும் தமிழ் முறைக்கும் மாறுபடா வகையில் நன்கு ஆய்ந்து வெளியிடலே இந்நூலின் நன்னோக்கம் ஆகும்.

தொடரும்....