தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 68

#history #Article #Tamil People
தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 68

சோழர் வரலாறு - சங்க காலம்

சங்க காலம்

வரலாற்றாசிரியர் பலர் கடைச் சங்கத்தின் இறுதிக் காலம் கி.பி. 3-ஆம் நூற்றாண்டாக இருத்தல் கூடும் என்று முடிவு கட்டியுள்ளனர்.

இராவ்சாஹிப் மு. இராக வையங்கார் போன்றோர் அச்சங்கத்தின் தொடக்கம் ஏறத்தாழக் கி.மு. நான்காம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று தக்க சான்றுகள் கொண்டு நிறுவியுள்ளனர். இன்றுள்ள தொகை நூற்பாடல்களை நடுவு நிலை யினின்று ஆராயின், இன்றுள்ள பாக்களில் சில கி.மு.1000 வரை செல்கின்றன என்பதை அறியலாம்.

‘வட மொழியில் ஆதிகாவியம் பாடிய வான்மீகர் புறநானூற் றில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்’ என்று பல சான்றுகள் கொண்டு ‘செந்தமிழ் ஆசிரியராகிய திரு. நாராயண ஐயங்கார் அவர்கள் செந்தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்துள்ளனர்.[1] வான்மீகியார் காலம் கி.மு. 8-ஆம் நூற்றாண்டென்று ஆராய்ச்சியாளர் கூறுவர். தருமபுத்திரனை விளித்து நேரே பாடியதாக ஒரு பாடல் புறநானூற்றில் உண்டு.

பாரதப் போரில் இருதிறத்தார் படைகட்கும் உணவளித்தவன் என்று சேரலாதன் ஒருவன், ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’, என்று புறநானூற்றிற் புகழப்பட்டுள்ளான். இராமாயண கால நிகழ்ச்சிகளில் சில புற-அக நானுறுகளிற் குறிக்கப்பட் டுள்ளன. இவற்றை நன்கு நோக்குகையில் தமிழ்ப் புலவர் ஏறத்தாழக் கி.மு. 1000த்திலிருந்து இருந்து வந்தனர் என்பதை ஒருவாறு அறியலாம்.

[2] பல்லவர் என்ற புதிய அரசமரபினர் காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு ஏறக்குறைய கி.பி.400 -450 இல் சோணாடு அச்சுத விக்கந்தன் என்ற களப்பிர குல காவலன் ஆட்சியில் இருந்தது என்பதைப் புத்ததத்தர் என்ற பெளத்தத் துறவியின் கூற்றால் அறியலாம்.[3] ‘களப்பிரர் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பிறகு பாண்டிய நாட்டைக் கைப்பற்றினர்.

கி.பி.6ஆம் நூற்றாண்டின் இறுதியில் கடுங்கோன் என்ற பாண்டியன் களப்பிர அரசனைத் தொலைத்துப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான்’ என்ற செய்திகளை வேள்விக் குடிப் பட்டயத்தால் அறியலாம். இவை அனைத்தையும் நோக்க, களப்பிரரும் பல்லவரும் குறிக்கப் பெறாத சங்க நூற்பாக்களின் காலம் ஏறக்குறையக் களப்பிரர்க்கு முற்பட்டாதல் வேண்டும் என்பதை அறியலாம். எனவே சங்கத்தின் இறுதிக்காலம் (பாக்கள் பாடிய காலமும் அவை தொகுக்கப் பெற்ற காலமும்) ஏறத்தாழக் கி.பி.300க்கு முற்பட்டதாகலாம் எனக் கோடலே பொருத்தமாகும்.

தொல்காப்பியர் காலம்

இனித் தொல்காப்பியம் என்பதன் காலவரையறையைக் காண்போம். இந்நூலுள் பெளத்த சமணக் குறிப்புகள் இன்மையால் இதன் காலம் கி.மு.4ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் வேண்டும். வட[4]மொழியாளர் தமிழகம் புக்க காலம் ஏறத்தாழக் கி.மு.1000 என்று வின்சென்ட் ஸ்மித் போன்ற பெயர்பெற்ற வரலாற்றாசிரியர் கூறியுள்ளனர்.[5] இங்ஙனம் தமிழகம் புகுந்த வடமொழியாளர் தொல்காப்பியத்தில் - தமிழர் இலக்கண நூலில் இடம் பெறுவதெனின், அவர்கள் தமிழரோடு நன்கு கலந்திருத்தல் வேண்டும். அவர்தம் வடமொழிச் சொற்களும் வழக்கில் வேரூன்றியிருத்தல் வேண்டும். இன்றேல்,

“வடசொற் கிளவி வடஎழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.

எனவும்,

“சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்”

எனவும்,

முறையே வடசொற் கலப்புக்கும் பிராக்ருதக் கலப்புக்கும் தொல்காப்பியர் விதிகள் செய்திரார் என்க. இந்நிலை உண்டாக ஏறத்தாழ 300 அல்லது 400 ஆண்டுகள் ஆகி இருத்தல் இயல்பே ஆகும் அன்றோ?

மேலும் தொல்காப்பியர் ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று புகழப்பட்டவர். ஐந்திர இலக்கண நூலுக்கு மிகவும் பிற்பட்டது பாணினீயம் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த கருத்து. பாணினி காலம் கி.மு. 7-ஆம் நூற்றாண்டு என்பர் கோல்ஸ்டகர் என்னும் அறிஞர். பாணினியமே பிற்கால வடமொழி உலகைக் கொள்ளை கொண்ட இலக்கண நூலாகும்.

அந்நூல் தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் இருந்திருப்பின், அவர் ‘பாணினியம் நிறைந்த தொல் காப்பியன்’ எனப் பெயர் பெற்றிருப்பார். அங்ஙனம் இன்மையால், தொல்காப்பியர், பாணினியம் தமிழகத்துக்கு வராத காலத்தில் இருந்தவர் எனக் கொள்ளலாம்.

‘தொல்காப்பியர் காலத்தில் கவாடபுரம் (அலை வாய்) கடல்கோளால் அழிந்தது’ என்று இறையனார் களவியல் உரை கூறுகின்றது. இக்கடல்கோளுக்கும் இலங்கையில் நடந்த கடல்கோள்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை அனைவரும் ஒப்புகின்றனர். இலங்கையை அழித்த கடல்கோள்கள் பல. அவற்றுள் முதலில் நடந்தது கி.மு. 2387-இல் என்றும், இரண்டாம் கடல்கோள் கி.மு. 504-இல் நடந்தது என்றும், மூன்றாம் கடல்கோள் கி.மு. 306-இல் நடந்தது என்றும் மகாவம்சம், இராசாவழி என்னும் இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

இவற்றுள் இரண்டாம் கடல்கோளாற்றான் இலங்கையின் பெரும் பகுதி அழிந்தது என்று இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இங்ங்னம் இலங்கையின் பெரும் பகுதியை அழித்த அக்கடல்கோளே கபாடபுரத்தை உள்ளிட்ட தமிழகத்துச் சிறு பகுதியை அழித்திருத்தல் கூடும் என்று கோடலில் தவறில்லை.

மேலும், மேற்கூறப்பெற்ற பல காரணங்கட்கும் ஏற்புடைத்தான காலம் இரண்டாம் கடல் கோள் நிகழ்ந்த காலமாகவே இருத்தல் வேண்டும் என்பதை நன்கறியலாம். இன்ன பிற காரணங்களால், தொல்காப்பியர் காலம் ஏறக்குறைய கி.மு. 5-ஆம் நூற்றாண்டு[6] எனக் கோடல் பல்லாற்றானும் பொருத்தமாதல் காண்க.

தொடரும்...