தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 72

#history #Article #Tamil People
தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 72

சோழர் வரலாறு - கி.மு. இரண்டாம் நூற்றாண்டுச் சோழர்

. மகனை முறை செய்த மன்னவன்

வரலாறு

இவன் திருவாரூரில் இருந்து சோணாட்டை ஆண்டு வந்தவன். இவன் சிறந்த சிவபக்தன். இவனுக்கு வீதிவிடங்கன் என்ற பெயர்கொண்ட ஒப்பற்ற மைந்தன் ஒருவனே இருந்தான். அவன் ஒரு நாள் கோவிலுக்குத் தேரூர்ந்து சென்ற பொழுது பசுங்கன்று ஒன்று திடீரெனப் பாய்ந்தோடித் தேர்க்காலில் அகப்பட்டு இறந்தது. இதனை அறிந்த தாய்ப்பசு ஆராய்ச்சி மணியைத் தன் கொம்புகளால் அசைத்து அரசர்க்குத் தன் குறையை அறிவித்தது. நிகழ்ந்ததை அறிந்த சோழ மன்னன், தன் மைந்தனைக் கன்று இறந்த இடத்தில் கிடத்தித் தான் தேரூர்ந்து சென்றான். பிறகு இறைவன் அருளால் கன்றும் மைந்தனும் பிழைத்ததாகப் பெரிய புராணம் புகல்கிறது.[1]

இலங்கை வரலாறு

இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் பின்வரும் சுவைதரத்தக்க செய்தியைச் செப்புகிறது:-

“கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் உயர்குடிப் பிறந்த சோணாட்டான் ஒருவன் ஈழத்திற்கு வந்தான். அப்பொழுது இலங்கை அரசனாக இருந்தவன் ‘அசேலன்’ என்பவன். வந்த சோணாட்டான் படையொடு வந்தான் ஆதலின் எளிதில் ஈழத்தரசனை வென்று, 45 ஆண்டுகள் ஈழ நாட்டை ஆண்டான்: அவன் பெயர் ஏழாரன்'[2] என்பது. அவ்வரசன் பகைவர்க்கும் நண்பர்க்கும் ஒரு படித்தாகவே நீதி வழங்கினான். தன் மகன் தேர் ஊர்ந்து சென்று அறியாது பசுங்கன்றைக் கொன்றதாக அத்தனி மகனைக் கிடத்தி, அவன்மீது தானே தேர் ஊர்ந்து கொன்ற உத்தமன்.

அப்பேரரசன் பெளத்த சமயத்தினன் அல்லன்; ஆயினும், பெளத்தத் துறவிகளிடம் பேரன்பு காட்டி வந்தான். அவனது அரசாட்சி குடிகட்கு உகந்ததாகவே இருந்தது. அவன் ஆண்ட பகுதி இலங்கையின் வடபகுதியே ஆகும். பின்னர் இலங்கை அரசனான துத்தகாமனி என்பவன் ஏழாரனைப் - போரில் வென்று தமிழ் அரசைத் தொலைத்தான்; ஏழாரனைத் துரத்திச் சென்று அநுராதபுரத்தில் எதிர்த்தான்.

அங்கு நடந்த போரில் ஏழாரன் இறந்தான். தமிழர் சமயக் கொள்கைகள் இலங்கையிற் பரவாமலிருக்கவும் தூய பெளத்தமதத்தைக் காக்கவுமே துத்தகாமனி ஏழாரனை எதிர்த்து வெற்றி பெற்றான். இங்ஙனம் வெற்றி பெற்ற இலங்கை இறைவன் ஏழாரனுக்குரிய இறுதிக் கடன்களைச் செய்து முடித்தான்; அவன் இறந்த இடத்தில் நினைவுக்குறி எழுப்பி, வழிபாடு நடைபெறச் செய்தான். பின்வந்த ஈழத்தரசரும் அந்த இடத்தை அடைந்த பொழுதெல்லாம் இசை ஒலியை நிறுத்தி அமைதியாக வழிபட்டுச் செல்லல் மரபாகும்.[3]

சோழன் பெயர் யாது?

செயற்கரிய இச்செயலைச் செய்த சோழன் பெயரை, இச்செயலைப் பாராட்டிக் கூறும் சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆகிய பழைய நூல்கள் கூறாது விட்டன. கி.பி. 11, 12 - ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், சேக்கிழார் ஆகிய புலவர்கள் இவனை ‘மநு’ நீதிச் சோழன் என்றே கூறிப் போந்தனர். ‘மநு’ மநுநீதி, மநுநூல் என்னும் பெயர்கள் சங்க நூல்களிற் காணுமாறில்லை. பிற்காலத்து நிகண்டுகளிற்றாம் இப்பெயர்கள் காணப்படுகின்றன.

செவ்விய கோலோச்சிய நம் சோழன் ‘மனு நீதிச் சோழன், ‘மனு’ என இவனது செயல் நோக்கிப் பிற்காலத்தார் இட்ட பெயரையே சயங்கொண்டார் முதலிய புலவர் வழங்கினராதல் வேண்டும்.[4] இச்சோழனை, ‘அரும் பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்’[4] எனச் சிலப்பதிகாரமும், ‘மகனை முறைசெய்த மன்னவன்’ என மணிமேகலையும் குறிக்கின்றனவே அன்றிப் பெயரால் குறிக்கவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

இவற்றால் இவ்வரசன் பெயர் இன்னது என்பது சிலப்பதிகார காலத்திலும் தெரியவில்லை என்பது தெரிகிறதன்றோ? மேலும், சங்க நூல்களைக் கொண்டு இவனைப் பற்றிய வேறு செய்திகள் அறியக் கூடவில்லை.

வரலாற்று ஒப்புமை

சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் சோழன் மகனை முறை செய்த ஒன்றையே குறிக்கின்றன. ஆயின், பெரிய புராணம் ஒன்றே இவனுடைய சிவப்பற்று முதலிய நல்லியல்புகளை விரிவாகக் குறிக்கின்றது. இவ்வியல்புகளனைத்தும் மகாவம்சம் குறிக்கும் தமிழ் அரசனிடம் காண்கின்றன. பெயர் ஒன்றே வேறுபடுகிறது. ‘ஏழரசன்’ என்பது சிறப்புப் பெயராக இருக்கலாம், அல்லது கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சம் சயங்கொண்டார், கூத்தர்,

சேக்கிழார் ஆகியோரைப் போலப் பெயரைத் தவறாகவும் குறித்திருத்தல் கூடியதே. ஆதலின், பெயர் கொண்டு மயங்க வேண்டுவதில்லை. மகனை முறை செய்த நிகழ்ச்சி எங்கு நடந்ததென்று சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறவில்லை. சேக்கிழார் ஒருவரே அச்செயல் திருவாரூரில் நடந்ததாகக் கூறியுள்ளார்.[5] மகனை முறை செய்த நிகழ்ச்சியைக் குறிக்கும் கல் தேர் திருவாரூரில் கோவிலுக்கு அண்மையில் இருக்கின்றது. இச்சோழன், மகனை முறை செய்த பிறகு, இலங்கையைக் கைப்பற்றி முறை வழுவாது ஆண்டிருக்கலாம்.