தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 73

#history #Article #Tamil People
தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 73

சோழர் வரலாறு - சோழன் நலங்கிள்ளி


கால விளக்கம்: கரிகாலன் காலம் கி.மு. 60 - கி.மு 10 எனக் கொண்டோம், சிலப்பதிகாரப்படி செங்குட்டுவன் காலம் கி.பி. 150-200 எனக் கொள்ளலாம்.[1] அக்காலத்துச் சோழன் நெடுமுடிக் கிள்ளி என்கிறது மணிமேகலை, அவற்குப் பிற்பட்டவனே கோச் செங்கட் சோழன் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. நெடுமுடிக் கிள்ளியுடன் கடைச் சங்க காலம் முடிவு பெற்றதென்றே ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ஆதலின், தொகை நூற்களிற் கூறப்படும் சோழர் பலரும் ஏறத்தாழக் கரிகாலற்குப் பிற்பட்ட கி.மு. 10 முதல் செங்குட்டுவன் காலமாகிய கி.பி. 150 வரை இருந்தனர் எனக் கொண்டு, அச்சோழர் வரலாறுகளை இப்பகுதியிற் காண்போம்.

முன்னுரை:

சோழன் நலங்கிள்ளி கரிகாலனின் மகன் என்பதே இவனைப்பற்றிய பாடல்களால் உய்த்துணரப் படுகிறது. இவன் பெரியதொரு நாட்டைப் பகைவர் அஞ்ச ஆண்டுவந்தான் என்றே புலவர் கூறியுள்ளனர். இவன் பலவகைப் படைகளைப் பெற்றிருந்தான். இவனைப் பற்றிப் 10 பாடல்கள்[2] புறநானூற்றில் உள்ளன. இவனால் பாராட்டப் பெற்ற சங்கப்புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர் கிழார், ஆலந்துார் கிழார் என்பவர்கள். இப்புலவர் பாடல்களால் இவன் வரலாறு விளங்குகிறது.

போர்ச் செயல்கள் : நலங்கிள்ளி பட்டம் பெற்றவுடன் தாயத்தார்க்குள் பகைமை மூண்டது. நெடுங்கிள்ளி என்பவன் ஆவூரில் இருந்த சோழ அரச மரபினன். அவன், நலங்கிள்ளி காவிரிப்பூம்பட்டினத்தில் முடி கவித்துக் கொண்டு சோழப் பேரரசன் ஆனதும், உறையூர்க்கு ஒடி, அதனைத் தனதாக்கிக் கொண்டான்; கொண்டு, சூள் உரைத்துப் போருக்குப் புறப்பட்டான்.[3]

சூள் உரை: மெல்ல வந்து எனது நல்ல அடியை அடைந்து, ‘எமக்கு ஈய வேண்டும்’ என்று தாழ்ந்து இரப்பாராயின், அவர்க்குச் சிறப்புடைய முரசு பொருந்திய பழையதாய் வருகின்ற உரிமையையுடைய எனது அரசாட்சியைக் கொடுத்து விடுவேன்; இனிய உயிரை வேண்டுமாயினும் கொடுப்பேன். என் அமைச்சர் படைத் தலைவர் முதலியோர் வலிமையை உணராது என்னை இகழ்ந்து அறிவில்லாதவன், யாவர்க்கும் விளங்கத் துங்குகின்ற புலியை இடறின குருடன் போலப் பிழைத்துப் போதல் அரிதாகும். மூங்கிலைத் தின்னும் வலியையுடைய யானையினது காலின் கண் அகப்பட்ட வலிய மூங்கிலது நீண்ட முனையை ஒப்ப மேற்சென்று பொருவேன்; யான் அங்ஙனம் செய்யேனாயின், பொதுமகளிர் போகத்தில் எனது மாலை துவள்வதாக.”

ஆவூர் முற்றுகை : இங்கனம் வஞ்சினம் உரைத்து நெடுங்கிள்ளியது ஆவூர்க் கோட்டையை முற்றுகை இட்டான். நெடுங்கிள்ளி கோட்டைக் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளே அமைதியாக இருந்து வந்தான்; வெளியே நலங்கிள்ளி முற்றுகையிட்டிருந்தான். கோட்டைக்கு வெளியே இருந்த நாட்டுப் புறங்கள் அல்லலுற்றன; போரால் துன்புற்றன. இக்கொடுமையையும், தாயத்தார் அறியாமையாற் செய்யும் கேட்டினையும் கண்டு இரங்கிய கோவூர் கிழார் என்னும் புலவர் கோட்டைக்குள் இருந்த நெடுங்கிள்ளியைப் பார்த்து, அறிவுரை பகர்ந்தார்.

“நலங்கிள்ளியின் யானைகள் ஊர்களைப் பாழாக்குகின்றன; உருமேறு போல முழங்குகின்றன. உள் பகுதியில் உள்ள குழந்தைகள் பாலின்றி அழுகின்றனர்; மகளிர் பூவற்றவறிய தலையை முடிக்கின்றனர். (மகளிர் பலர் வீரர் இறத்தலால் கைம்பெண்கள் ஆயினர்; இல்லற வாழ்க்கையர் நின்னை நோக்கி ‘ஒலம்’ எனக் கூக்குரல் இடுகின்றனர். நீ இவற்றைக் கவனியாமலும் இவற்றிற்கு நாணாமலும் இனிதாக இங்கு (கோட்டைக்குள்) இருத்தல் இனியதன்று.

வலிய குதிரையையுடைய தோன்றலே! நீ அறத்தை உடையை ஆயின், ‘இஃது உனதன்றோ!’ என்று சொல்லிக் கதவைத் திறந்துவிடு; மறத்தை உடையை ஆயின், போரால் திறத்தல் செய்வாயாக. இவ்விரண்டும் இன்றிக் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டிருத்தல் நாணமுடைய செயலாகும்”[4] என்று உறைக்க உரைத்தார்.

பின்னர் என்ன நடந்ததென்பது தெரியவில்லை. நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டையை விட்டு ஓடி உறையூர்க் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டான்.

உறையூர் முற்றுகை: “நெடுங்கிள்ளியின் பிடிவாதத்தையும் நலங்கிள்ளி அவனை விடாது பின்தொடர்ந்து சென்று உறையூரை முற்றியிருந்ததையும் கண்டு மனம் வருந்திய கோவூர் கிழார் இருவரையும் உளம் உருகப் பார்த்து,

“நெடுங்கிள்ளி அண்ணலே, உன்னோடு பொருபவன் பனம்பூ மாலை அணிந்த சேர அரசன் அல்லன்; வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டியனும் அல்லன். உனது கண்ணியும் ஆத்தியால் கட்டப்பட்டது. உன்னுடன் பொருவோனது கண்ணியும் ஆத்தியாற் செறியக் கட்டப்பட்டது. ஆதலால், நும்முள் ஒருவீர் தோற்பினும் தோற்பது சோழர் குடியே அன்றோ? இருவீரும் வெல்லுதல் இயல்புமன்று; ஆதலின் நீங்கள் இருவரும் அங்ஙனம் போர் இடுதல் தக்க செயலன்று. இச்செயல், தும்மைப் போன்ற வேந்தர்க்கு மனக்களிப்பை உண்டாக்குமே அன்றி உமக்கு நன்மை பயவாது. ஆதலின், இதனைத் தவிர்த்தலே முறை”[5] என்று இருவர் மனத்திலும் நன்கு பதியுமாறு புகன்றார்.

தொடரும்...

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!