தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 74

#history #Article #Tamil People
தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 74

சோழர் வரலாறு - கிள்ளி வளவன்

முன்னுரை:

இவன் முன்சொன்ன நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியவர்க்கு அடுத்து இருந்த பெரிய அரசன் ஆவன். என்னை? அவ்விருவரையும் பாடிய புலவர் பலரும் இவனை நேரிற் பாடியிருத்தலின் என்க. இவன் உறையூரை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்டவன்.[1] இவனைப் புலவர் ஒன்பதின்மர் 18 பாக்களிற் பாடியுள்ளனர். இவனை அகநானூற்றில் ஒர் இடத்தில் நக்கீரர் குறித்துள்ளார்.[2] இவனைப் பற்றிய பாடல்களால் இவன் சிறந்த போர் வீரன், சிறந்த புலவன், புலவரைப் பற்றிய புரவலன், கரிகாலன் நலங்கிள்ளி போன்ற சோழப் பேரரசன் என்பன எளிதிற் புலனாகின்றன.

போர்ச் செயல்கள்:

இவன் செய்த போர்கள் பல என்பது பல பாடல்களால் விளங்குகிறது.இடம் குறிக்காமலே பல பாடல்கள் போர்களைக் குறிக்கின்றன; இவன் பகைவர் அரண்கள் பலவற்றை அழித்தவன்; அரசர் பொன் மகுடங்களைக் கொண்டு தனக்கு வீரக்கழலைச் செய்து கொண்டவன்,[3] எட்டுத் திசையும் எரி கொளுத்திப் பல கேடுகள் நிகழப் பகைவர் நாட்டை அழித்தவன்; காற்றுடன் எரி நிகழ்ந்தாற் போன்ற செலவையுடைய போரில் மிக்கவன்.[4] வேந்தரது பாடி வீட்டின்கண் குருதிப் பரப்பின் கண்ணே யானையைக் கொன்று புலாலையுடைய போர்க் களத்தை உண்டாக்கிய போர் செய்யும் படையை உடையவன்.[5] மண்டிய போரில் எதிர் நின்று வெல்லும் படையையும் திண்ணிய தோள்களையும் உடையவன்;[6] வாள் வீரரும் யானையும் குதிரையும் உதிரம் கொண்ட போர்க்களத்தில் மாய, நாடோறும் அமையானாய், எதிர்நின்று கொன்று நமனுக்கு நல்விருந்தளித்தவன்.[7]

கருவூர் முற்றுகை:

இவன் செய்த பல போர்களில் கருவூர் முற்றுகை ஒன்றாகும். இவன் தன் படைகளுடன் கருவூரை முற்றிப் போர் செய்தான். சேர மன்னன் கருவூர் அரணுக்குள் இன்பமாகக் காலம் கழித்து வந்தான். அவன் வீர மானம் அற்றவன். கிள்ளி வளவன் விணே போரிடலைக் கண்டு வருந்திய ஆலத்துார் கிழார் என்ற புலவர் அவனை நோக்கி, “நின் படைகள் செய்யும் கேட்டை நன்கு உணர்ந்தும் சேர மன்னன் மானம் இன்றித் தன் கோட்டைக்குள் இனிதாக இருக்கின்றான். அவன் போருக்கு வரவில்லை. நீ மானமற்ற அவனுடன் பொருவதில் என்ன சிறப்பு உண்டாகும்? நீ வென்றாலும் ஒன்றே அவனைக் கொன்றாலும் ஒன்றே. எச்செயலாலும் நினக்குப் பெருமை வருமென்பது விளங்கவில்லை.”[8]

என்று கூறுமுகத்தால், சேர அரசனது மானமின்மையையும் கிள்ளிவளவனது ஆண்மையையும் விளக்கினார். பின்னர்ச் சேரன் தோற்றான்போலும்! என்னை?

“இமய மலையின்கண் சூட்டப்பட்ட காவலாகிய வில் பொறியையும் சிறந்த வேலைப்பாடமைந்த தேரையும் உடைய சேரன் அழிய அவனது அழிவில்லாத கருவூரை அழிக்கும் நினது பெருமை பொருந்திய வலிய தாளை எங்ஙனம் பாடவல்லேன்?”[9] என்று கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியுள்ளதால என்க.

மலையமானுடன் போர்: மலையமான் என்பவன் திருக்கோவலுரைத் தலைநகரமாகக் கொண்ட மலைநாட்டுத் தலைவன். இந்த மலையமான் மரபினர் கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் சங்க காலம் முதலே சோழர் பேரரசிற்கு உட்பட்டவராவர். அங்ஙனம் இருந்தும், கிள்ளிவளவன் காலத்து மலையமான் எக்காரணம் பற்றியோ சோழனது சீற்றத்திற்கு ஆளானான். அதனால் கிள்ளிவளவன் அவனை என்ன செய்தான் என்பது விளங்கவில்லை; ஆயின் அவன் மக்கள் இருவரையும் சிறைப் பிடித்துக் கொணர்வித்தான்; அவர்களை யானையால் இடறச் செய்யத் தீர்மானித்தான். இஃது அக்காலத்துத் தண்டனை வகைகளில் ஒன்றாக இருந்தது.

இந்தக் கொடுஞ் செயலைக் கோவூர் கிழார் அறிந்தார். அவர் மலையமானது அறச்செயலை நன்கறிந்தவர்; அவ்வள்ளல் மக்கட்கு நேர இருந்த கொடுந்துன்பத்தைப் பொறாதவராய்ச் சோழனைக் குறுகி,

“நீ, ஒரு புறாவின் துன்பம் நீக்கத் தன் உயிர் கொடுத்த சோழன் மரபில் வந்தவன். இப்பிள்ளைகள் புலவர் வறுமையைப் போக்கும் மரபில் வந்தவர்கள். இவர்கள் யானையைக் காணுமுன்வரை அச்சத்தால் அழுதுக் கொண்டிருந்தனர்; யானையைக் கண்டவுடன் தம் அழுகையை நிறுத்தி வியப்பால் அதனை நோக்கி நிற்கின்றனர்; அப்புதிய இடத்தைக் கண்டு அஞ்சி இருக்கின்றனர். நீ இதனைக் கேட்டனையாயின், விரும்புவதைச் செய்வாயாக.”[10]

என்று உறைக்க உரைத்தார். பிறகு நடந்தது தெரியவில்லை.

பாண்டிய நாட்டுப் போர்: கிள்ளிவளவன் பாண்டிய னுடன் போர் செய்தான். போர் மதுரையில் நடந்தது. பாண்டியன் தானைத் தலைவன் பழையன் மாறன் என்பவன். சோழன் வெள்ளம் போன்ற தன் சேனையுடன் போரிட்டான். எனினும், அப்போரில் தோற்றான். அவனுடைய புரவிகளும், களிறுகளும் பாண்டியன் பெற்ற இந்த வெற்றியைக் கண்ட கோக்கோதை மார்பன் (சேரமான் கோக்கோதை மார்பன்?) மகிழ்ச்சி அடைந்தான்.