தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 75
சோழர் வரலாறு - கோப்பெருஞ் சோழன்
முன்னுரை:
இவன் உறையூரைக் கோநகராகக் கொண்டு சோணாட்டை ஆண்ட அரசன். இவன் நற்குணங்கட்கு இருப்பிடமானவன்; சிறந்த தமிழ்ப்புலவன்; அறத்தின் நுட்பங்களை உணர்ந்து அறவழி ஒழுகிய பெரியோன், பொத்தியார் என்றவரை அவைப் புலவராகக் கொண்டவன்; கண்ணகனார், புல்லாற்றூர் எயிற்றிய னார், கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், பிசிராந்தையார் என்ற புலவராற் பாராட்டப் பெற்ற பெருந்தகையாளன்.
பழகா நட்பு: பாண்டிய நாட்டிற் பிசிர் என்பதோர் ஊர் ஆகும். அதனில் ஆந்தையார்[1] என்றொரு தமிழ்ப் புலவர் இருந்தார். அவர் சோழனுடைய நல்லியல்புகளைப் பலர் வாயிலாகக் கேட்டு, அவன் மீது பேரன்பு கொண்டார்; தம் பாராட்டலைப் பலர் வாயிலாகச் சோழற்கு அறிவித்து வந்தார். சோழனும் அவரது நட்பையும் புலமையையும் வல்லார் வாய்க் கேட்டுணர்ந்து அவரை மதித்து வந்தான்.
ஒரு நாள் பிசிராந்தையார் சோழனை நினைந்து அன்னச் சேவலை விளித்துப் பாடிய பாட்டு அவரது நட்பினை நன்கு விளக்குவதாகும்.
“அன்னச் சேவலே! அன்னச் சேவலே! எம் அண்ணல் தன் நாட்டினைத் தலையணி செய்யும் திருமுகம் போல் மதியம் விளங்கும் மாலைப் பொழுதில் யாம் செயலற்று வருந்துகின்றோம்; நீதான் குமரிப் பெருந்துறையில் அயிரை மேய்ந்து வடதிசைக் கண்ணதாகிய இமய மலைக்குச் செல்வையாயின், இடையில் உள்ள சோணாட்டை அடைக உறையூரின் கண் உயர்ந்து தோன்றும் மிாடத்தினிடத்தே நின் பெடையோடு தங்கி, வாயிற் காவலர்க்கு உணர்த்தி விடாதே தடையின்றிக் கோவிலிற் புகுக, எம் கோவாகிய கிள்ளி கேட்க, ‘யான் பிசிராந்தையின் அடியுறை எனக் கூறுக, அவன் உடனே நின் பேடை அணி யைத் தன் அணிகலம் தருவன்.”[2]
தந்தையும் மக்களும்: கோப்பெருஞ் சோழன் நல்லியல்புகட்கு மாறாக அவன் மக்கள் தீய இயல்புகளைப் பெற்றிருந்தனர். அவர்கள் தந்தையாண்ட பேரரசின் சில பகுதிகளை ஆண்டுவந்தனர்(?). அவர்கள் தந்தைக்குக் கீழ்ப்படியவில்லையோ அல்லது தந்தையை வென்று தாமே முழு நாட்டையும் ஆள விழைந்தனரோ அறியோம். கோப்பெருஞ் சோழன் பெரும் படையுடன் தன் மக்கள் மீது போர் புரியச் சென்றான்.
அந்நிகழ்ச்சியைக் கண்ட அவைப் புலவராகிய புல்லாற்றூர் எயிற்றியனார் என்ற புலவர் பெருமான் அரசனை நல்வழிப்படுத்த விழைந்தார். அவர் கோப்பெருஞ்சோழனை நோக்கி,
"பகைவரை வெல்ல வல்ல வேந்தே, பேரரசனாகிய கிள்ளியே, நின்னுடன் போர் செய்ய வந்தவர் நின்பகைவர் அல்லர், நீ உலகை வெறுத்துத் தேவர் உலகம் எய்த பின்னர் இவ்வரசாட்சிக்கு உரியவர் அவரே யாவர். இதனை நீ வென்ற பின்னர் இந்நாட்டை யாருக்கு அளிப்பை? நீ போரில் தோற்ற பின், நின் பகைவர் இழக்கத்தக்க பழியை உலகில் நிறுத்தியவன் ஆவாய்! ஆதலின், நினது மறன் ஒழிவதாக விண்ணோர் விருப்புடன் நின்னை விருந்தாக எதிர்கொள்ள நல்வினை செய்தல் நல்லது அதற்கு விரைந்து எழுக நின் உள்ளம் வாழ்வதாக”[3] என்று உருக்கமாக உரைத்தார்.
அரசன் வடக்கிருத்தல்:
கோப்பெருஞ் சோழன் நல்லியல்புகள் மிக்கவன்; ஆதலின், அவனது கோபம், புலவர் அறிவுரை கேட்டபின், இருந்த இடம் தெரியாது ஒழிந்தது. அவன் தன் அரசைத் தன் மக்களிடம் ஒப்புவித்து, அவரால் தனக்கு நேர்ந்த பழியை நினைத்து நாணி வடக்கிருந்தான். வடக்கிருத்தல் என்பது - யாதேனும் ஒரு காரணம் பற்றி உயிர் துறக்கத் துணிந்தோர் ஆற்று இடைக்குறைபோலும் தூயதொரு தனி இடத்து எய்தி, வடக்கு நோக்கி இருந்து, உணவு முதலியன துறந்து, கடவுட் சிந்தையுடன் உயிர் விடுவதாகும். இங்ஙனம் வடக்கிருந்த சோழன் தான் உணர்ந்த அறநெறிச் சாரத்தைத் தன் நண்பர்க்கு உணர்த்த விரும்பிக் கீழ் வருமாறு கூறினான்:
அறவுரை:
“தெளிவற்ற உள்ளம் உடையோர், ‘அறத்தினைச் செய்வோமோ, செய்யாதிருப்போமோ’ என்று கருதி ஐயம் நீங்காதவராகின்றனர். யானை வேட்டைக்குச் செல்பவன் யானையையும் எளிதிற் பெறுவன், காடை வேட்டைக்குப் போகுபவன் அது பெறாமல் வெறுங்கையுடன் திரும்பினும் திரும்புவன். அதனால், உயர்ந்தவர்க்குத் தாம் செய்த நல்வினைப் பகுதியால், அதனை நுகர்தல் உண்டெனின், அவர் இருவினையும் செய்யாத உம்பர் உலகில் இன்பம் நுகர்தலும் கூடும். இல்லையாயின், மாறிப் பிறக்கும் பிறப்பு இல்லையாகவும் கூடும்;
‘மாறிப் பிறத்தலே இல்லை’ என்று கூறுவர் உளராயின், இமயச் சிகரம் ஓங்கினாற் போன்ற தமது புகழை நிலைநிறுத்தி வசையில்லாத உடம்போடு கூடிநின்று இறப்பது சிறந்ததாகும். அதனால் எவ்வாற்றானும் நல்வினை செய்தலே ஏற்புடைத்து.”[4]
எதிர்கால உணர்ச்சி: இங்ஙனம் சிறந்த அறவுரை புகன்ற அரசர் பெருந்தகை தன் பக்கத்தில் இருந்த சான்றோரைப் பார்த்து, “பாண்டிய நாட்டில் நெடுந்தொலைவில் உள்ள பிசிர் என்னும் ஊரைச் சேர்ந்த ஆந்தையார் என்ற எனது உயிர் நண்பன் இப்பொழுது இங்கு வருவன்!”[5] என்றான். அதுகேட்ட சான்றோர், “பாண்டிய நாட்டிலிருந்து ஆந்தையார் இந்நெடுந்தொலைவு கடந்துவருதல் சாலாது” என்றனர். அதுகேட்ட அரசன் நகைத்து,"நிறைந்த அறிவினை உடையீர், என் உயிரைப் பாதுகாக்கும் நண்பன் நான் செல்வம் உடைய காலத்து வராதிருப்பினும் வறுமையுற்ற இக்காலத்து வந்தேதீருவன்.
அவன் இனிய குணங்களை உடையவன் தனது பெயரைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது, 'என் பெயர் பேதைமையுடைய சோழன்' என்று எனது பெயரைத் தனக்குப் பெயராகச் சொல்லும் மிக்க அன்புபட்ட உரிமை உடையவன். அவன் மெய்யாக வருவன்; அவனுக்கும் இடம் ஒழியுங்கள்”[6] என்றான்.
பொத்தியார் பாராட்டுரை: இங்ஙனம் அரசன் அறைந்த சிறிது பொழுதிற்குள் பிசிராந்தையார் அங்குத் தோன்றினார்; அரசனைத் தன் மார்போடு தழுவிக் கொண்டு உவகைக் கண்ணிர் பெருக்கினார். இந்த அற்புதத்தைக் கண்ட பொத்தியார் பெருவியப்பெய்தி, “தனக்குரிய சிறப்புகளை யெல்லாம் கைவிட்டு இங்ஙனம் அரசன் வடக்கிருத்தல் என்பது நினைக்கும்பொழுது வியப்பினை உடையதாகும்! வேற்று வேந்தன் நாட்டிலிருந்து விளக்கம் அமைந்த சான்றோன் புகழ் மேம்பாடாக நட்பே பற்றுக் கோடாக இத்தகைய துன்ப காலத்தில் வழுவின்றி இங்கு வருதல் அதனினும் வியப்புடையது. இப்புலவன் வந்தே தீருவன் என்று சொன்ன வேந்தனது பெருமையும் அவன் சொல் பழுதின்றாக வந்தவனது அறிவும் வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்பு எல்லை கடந்துள்ளது;
ஆதலால், தன் செங்கோல் செல்லாத தேயத்துறையும் சான்றோனது நெஞ்சத்தைத் தன்னிடத்தே உரித்தாகப் பெற்ற புகழுடைய பெரியோனை இழந்த இந்நாடு என்ன துன்ப முறுங்கொல்லோ! இதுதான் இரங்கத்தக்கது!”[7] என்று கூறி வியப்புற்று வருந்தினார்.
தொடரும்....