தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 77.
12. நெடுமுடிக்கிள்ளி
(கி.பி.150-200)
பட்டம் பெற்றமை:
சிலப்பதிகார காலத்தில் வாழ்ந்தவன் செங்குட்டுவன் எனவும் அவன் காலம் கி.பி.150-200 எனவும் முன் சொன்னது நினைவிருக்கும் அல்லவா? அக்காலத்தில், அவனால் ஆக்கம் பெற்றவனே இந் நெடுமுடிக்கிள்ளி என்பவன்.இவனுடைய தகப்பனும் செங்குட்டுவன் தாயான நற்சோணை என்பவளும் உடன் பிறந்தவராவர். ஆதலின், இவன் செங்குட்டுவற்கு 'மைத்துனச் சோழன்’ எனப்பட்டான். இவன் தந்தையான சோழ மன்னன் இறந்தவுடன் பங்காளிகள் ஒன்பதின்மர் இவனுடன் போரிட்டனர். அதனை உணர்ந்த செங்குட்டுவன் அவர்கள் அனைவரையும் நேரிவாயில் என்ற இடத்தில் வென்று, தன் மைத்துனச் சோழ வேந்தன் ஆக்கினன்.[1]
பல பெயர்கள்:
இச்சோழன் வெண்வேற் கிள்ளி, மாலண் கிள்ளி, வடிவேற்கிள்ளி, கழற்கிள்ளி, கிள்ளி எனப் பலவாறு மணிமேகலையிற் குறிக்கப்பட்டுள்ளான்.
மனைவியும் மகனும் தம்பியும்: இவன் பாண மரபிற் பிறந்த அரச மகளை மணந்தவன், அவள் பெயர் சீர்த்தி என்பது. பாணர் என்பவர் “மாவலி” மரபினராவர். அவர் வட ஆர்க்காடு கோட்டத்தை ஆண்ட சிற்றரசர். இம்மரபினர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளனர். சீர்த்திக்கு ஒரே மகன் பிறந்து வளர்ந்தான். அவனே உதயகுமரன்என்பவன். நெடுமுடிக் கிள்ளியின் தம்பி இளங்கிள்ளி என்பவன்.
இவன் சோழப் பேரரசின் வட பகுதியாகிய தொண்டை மண்டலத்தைக் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தான். காரியாற்றுப் போர்: நெடுமுடிக்கிள்ளி பட்டம் பெற்ற சில ஆண்டுகட்குள் பாண்டியன் ஒருவனும் சேரனும் வஞ்சியிலிருந்து படையுடன் புறப்பட்டுச் சென்று சோணாட்டின் வடமேற்குப் பகுதியாகிய காரியாறு என்ற இடத்திற்சோழனைத் தாக்கினார். அந்த இடம் தொண்டை நாட்டது.
ஆதலின், இளங்கிள்ளி தன்படையுடன் சென்று கடும்போர் செய்து பகைவரை வென்றான்; பகைவர் குடைகள் முதலியவற்றைக் கைப்பற்றி மீண்டான்.[2]
‘காரியாறு’ எது? : திருவள்ளூரிலிருந்து காளத்திக்குப் போகும் பாதையில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் பாடல் பெற்ற சிவன் கோவில் ஒன்று உண்டு. அஃது உள்ள இடம் ‘இராமகிரி’ எனப்படும். அந்த இடத்தில் உள்ள சிவபெருமான் ‘காரிக்கரை உடைய நாயனார்’ என்று அங்குள்ள கல்வெட்டுகளிற் குறிக்கப்பட்டுள்ளார்.
அக்கோவில் அருகில் நகரி மலையைச் சுற்றிக் காளிங்கியாறு ஒடுகின்றது. அஃது இரண்டு சிற்றாறுகளால் ஆனது: ஒன்று காளிங்கி எனவும், மற்றொன்று காலேறு எனவும் பெயர் பெற்றவை. கால்-கருமை, ஏறு-ஆறு, காரியாறு. எனவே, ‘காலேறு’ என்று தெலுங்கில் கூறப்படுகின்ற யாறே, அப்பர் காலத்திலும் அதற்கு முன்னரும் ‘காரியாறு’ எனத் தமிழ்ப் பெயர் பெற்றதாதல் வேண்டும்.”[3]
அந்த இடத்தின் நிலைமை: சங்க காலத்தில் நெல்லூர் வரை சோழநாடு விரிந்து இருந்தது. வேங்கடத்தைச் சேர்ந்த நிலப்பகுதியைத் திரையன் என்பவன் ஆண்டுவந்தான். அவனது தலைநகரம் பாவித்திரி என்பது. அதுவே இக்காலத்துக் கூடூர்த் தாலுகாவில் உள்ள ‘ரெட்டி பாளையம்’ என்பது. ‘கடல் கொண்ட காகந்தி நாட்டுப் பாவித்திரி’ என்று அங்குள்ள கல்வெட்டுகள் குறிக்கின்றன.
எனவே, பண்டைக்காலத்தில் தொண்டை மண்டலம் அதுவரை பரவி இருந்ததென்றால் தவறாகாது. அந்தப்பகுதி முழுவதும் மலைப்பகுதியாக உள்ளதாலும் சாதவாகனரது தென்பகுதி அங்கு முடிவதாலும் எல்லைப்புறப் போர்கள் அங்கு நிகழ்ந்தனவாதல் வேண்டும். அப்போர்களால் அந்தப் பகுதி வன்மை குறைந்திருந்ததோ என்னவோ, தெரியவில்லை. அங்குக் சென்று சேர பாண்டியர் சோணாட்டு மண்ணாசையால் தாக்கினர் என்று மணிமேகலை கூறுகிறது.[4]
சேர - பாண்டியர் யாவர்? :
இங்ஙனம் போரிட்ட சேர பாண்டியர் யாவர்? செங்குட்டுவன் பேரரசனாக இருந்த போதிலும் அவனது சேர நாட்டில் ஞாதியர் பலர் பல பகுதிகளை ஆண்டு வந்தனர்; அங்ஙனமே பாண்டி நாட்டில் சிற்றரசர் சிலர் இருந்திருக்கலாம். இன்றேல், கண்ணகியால் கொல்லப்பட்ட பாண்டியற்குப் பின்வந்த பாண்டியனே இப்போரிற் கலந்தவனாகலாம்.
தொடரும்...